full screen background image

“டிரெயின்’ படம் நல்லா இல்லைன்னா செருப்பால அடிங்க..” – மிஷ்கின் பேச்சு!

“டிரெயின்’ படம் நல்லா இல்லைன்னா செருப்பால அடிங்க..” – மிஷ்கின் பேச்சு!

இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள படம் ‘டிரெயின்..’

உதயநிதி நடித்த ‘சைக்கோ’ படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி திரைக்கு விரைவில் வர உள்ள படம் ‘ட்ரெயின்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் கதை த்ரில்லர் பாணியில் ஒரு ரயிலில் நடப்பதுபோல் எடுக்கப்பட்டுள்ளது.

இதில், நடிகர்கள் நாசர், ஷ்ருதி ஹாசன், யூகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் போன்றோர் நடித்துள்ளனர்..

கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,

நேற்று ஜூலை 12-ம் தேதி மாலை 6 மணிக்கு இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்தியம் தியேட்டரில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் திரையுலகை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர்.

இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை விஜய் டிவியை சேர்ந்த டிடி மற்றும் மா.கா.பா.ஆனந்த் இருவரும் தொகுத்து வழங்கினர்.

ஸ்ருதிஹாசன் மற்றும் மிஷ்கின் இருவரும் படத்தில் இடம் பெற்ற பாடல்களை மேடையில் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

அதிலும் முக்கியமாக ‘திருநங்கை தாலாட்டு’ என்ற பாடலை மிஷ்கின் பாடியபோதும், பாடி முடித்த பிறகும் ரசிகர்கள் மௌனமாக எமோஷனல் ஆனது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு சிறப்பு விருந்தினரும் மேடையில் ஏறும்போது மிஷ்கின் பேசிக் கொண்டிருந்தார்.

அவர் பேசும்போது,..

“தான் தயாரிக்கும் திரைப்படங்களை பிரம்மாண்டமாக பிரமோஷன் செய்பவர் கலைப்புலி தாணு.

இன்டர்நெட்டில் சென்று கூகுளில் Chat GPT-யில் “உலக சினிமாக்களில் மிகப் பெரிய அளவுக்கு பிரமோஷன் செய்யப்பட்ட படம் எது.?” என்று கேட்டால் பல ஹாலிவுட் படங்களின் பெயர்கள் வரும். அந்த லிஸ்ட்டில் ஒரே ஒரு தமிழ் படத்தின் பெயரும் இடம் பெறும். அது தாணு சார் தயாரித்த ‘கபாலி’ படம்தான்.

அந்தப் படத்திற்காக விமானத்தில் ப்ரமோஷன் செய்திருந்தார் தாணு. இந்தப் படத்திற்காக நிச்சயம் ட்ரெயினில் பிரம்மாண்டமாக ப்ரமோஷன் செய்வார் என நம்புகிறேன்.

இந்தப் படத்திற்காக விஜய் சேதுபதி கொடுத்த அர்ப்பணிப்பு சிறப்பு. அவரைத் தவிர அந்த கேரக்டர் யாராலும் நடிக்க முடியாது.. ஏன் கமல்ஹாசனால் முடியாதா? அமீர்கானால் முடியாதா? என்று நீங்கள் கேட்கலாம்.. நிச்சயமா முடியாது.. இது விஜய் சேதுபதியால் மட்டும்தான் முடியும். ஏனென்றால் இது அவருக்காகவே எழுதப்பட்ட கதை.

இந்த ‘ட்ரெயின்’ படம் ரொம்ப சூப்பரா வந்திருக்கு. “இந்தப் படம் நல்லா இல்லைன்னா என்னை செருப்பால அடிங்க”ன்னு சொல்லுவேன்.

ஸ்ருதிஹாசனை பற்றி குறிப்பிட்டு பேசும்போது.. “இவரது தந்தை கமலுடன் என்னால் இதுவரையிலும் பணி செய்ய முடியவில்லை. தந்தை எட்டடி பாய்ந்தால் குட்டி 80 ஆயிரம் பாயும். அதுபோல ஸ்ருதிஹாசன் பன்முக திறமை கொண்டவர். இந்தப் படத்தில் அவர் கிட்டத்தட்ட ஒரு கெஸ்ட் ரோல்தான் செய்திருக்கிறார். என் குழந்தையை போன்றவர். நிச்சயமாக அவருக்காக அவருடன் இணைந்து ஒரு படம் செய்ய வேண்டும். அதையும் தாணு ஸார்தான் தயாரிக்க வேண்டும்.” என்றார்.

படக் குழுவினரை வாழ்த்தி இயக்குநர் அமீர் பேசும்போது..

“மிஷ்கின் மனதில் பட்டதை அப்படியே பேசுபவர். அவர் இரவில் கண்ணாடி அணிந்திருப்பார். யாராவது கேட்டால் “நான் அப்படித்தான்” என்பார்..

“உங்களது படங்களில் ஹீரோக்கள் ஏன் எப்போதும் தலை குனிந்தபடியே இருக்கிறார்கள்?” என்று கேட்டால், “என் ஹீரோ அப்படித்தான் இருப்பார்” என்பார். எதையும் தைரியமாக பேசுபவர் மிஷ்கின்.

விஜயகாந்த் நடித்த ‘கூலிக்காரன்’ படத்தை பிரம்மாண்டமாக பிரமோஷன் செய்தவர் தாணு சார். அவர் வடிவமைத்த அந்த சிலை வண்டியை மாடல் பார்ப்பதற்காகவே அடிக்கடி நான் மவுண்ட் ரோடு சென்று பார்ப்பேன்.

‘சுந்தர பாண்டியன்’ பார்த்த பிறகு கமலா தியேட்டரில் விஜய் சேதுபதியை சந்தித்தேன். அவர் “படம் எப்படி இருந்தது?” என்று கேட்டார். “படம் நன்றாக இருந்தது” என்றேன். அன்று விஜய் சேதுபதி எப்படி என்னிடம் பேசினாரோ இன்றும் அப்படியேதான் இப்போதும் இருக்கிறார்.

அவர் பெரிய உயரங்களை அடைந்திருந்தாலும் இப்போதும் அவர் அப்படியே எளிமையாகவே இருக்கிறார்.

தற்போது விஜய் சேதுபதி, தாணு, மிஷ்கின் மூவரும் இணைந்து இருக்கிறார்கள். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படக் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்..” என்றார் அமீர்.

படக் குழுவினரை வாழ்த்தி பார்த்திபன் பேசும்போது…

“ஒரு தமிழ்ப் படத்திற்கு ஆங்கிலத்தில் ‘டிரெய்ன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்களே என்று நினைத்தேன்.

ஆனால் இந்தப் படத்தின் டிரைலரை தற்போது திரையில் பார்த்த பிறகுதான் படமும் ஆங்கில படத்திற்கு நிகராக உள்ளது. ஹாலிவுட் படத்திற்கு இணையாக உள்ளது என்பது தெரிந்தது.

என் சட்டையை பார்த்து ஒருவர் கேட்டார்.. “என்ன சார் சட்டையை மாற்றி போட்டுட்டீங்களா? உள்ளே பக்கம் வெளியே இருக்க.. வெளி பக்கம் உள்ள இருக்கு. நான் ஒரு காரணமாகத்தான் இந்த சட்டையை போட்டு வந்தேன். ஏனென்றால் எனது அடுத்த படம் ‘உள்ளே வெளியே பார்ட்-2.’

இதை இந்த மேடையில் நான் சொல்ல காரணம்… சில பேர் உள்ளே ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே ஒன்று பேசுவார்கள். ஆனால், உள்ளே என்ன நினைக்கிறாரோ அதையே வெளியே வெளிப்படையாக பேசும் தைரியம் கொண்டவர் மிஷ்கின்.

எதை செய்தாலும் தைரியமாக உண்மையாக செய்வார். அவருக்கு தூக்கம் வந்தால் ஆடியோ லான்ச் மேடையில்கூட தூங்குவார்..

ஒரு இயக்குநர், நடிகர் என்பதையெல்லாம் மீறி ஒரு மனிதனாக அவரை நான் ரசிப்பேன். இவரை போல ஒருவர் இருந்தார். தைரியமாக உண்மையை பேசும் அவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. அவருக்கும், இவருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், அவரைப் போல இவர் துப்பாக்கியை எடுத்து சுட்டு விடக்கூடாது.

விஜய் சேதுபதியின் எல்லா படங்களையும் பார்ப்பேன்.. அவர் நடித்த விளம்பரங்களைகூட பார்ப்பேன். சமீபத்தில் அவரது பேட்டி ஒன்றை பார்த்தேன்.

அதில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லும்போது… “நான் தோல்வியை சந்தோஷமாகப் பார்ப்பேன்.. அது என்னை மீண்டும் உற்சாகப்படுத்தும். ஆனால் வெற்றியை பயமாக பார்ப்பேன். இந்த ‘ட்ரெயின்’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற வேண்டும். அதை பார்த்து அவர் பயப்பட வேண்டும்..” என்று படக் குழுவினரை வாழ்த்திப் பேசினார் பார்த்திபன்.

இறுதியாக படத்தின் நாயகனான விஜய் சேதுபதி பேசும்போது..

“இந்தப் படம் முழுக்க ஸ்டூடியோவில் ட்ரெயின் செட்டு போட்டு எடுக்கப்பட்டது. சேட்டு வீட்டு கல்யாணம் போல கலகலப்பாக இருக்கும். எப்போதும் திருவிழா போல கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். மிஷ்கின் இன்று யார் நன்றாக நடித்தார்களோ அவருக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கொடுப்பார். அதுபோல நன்றாக வேலை செய்த டெக்னீசியனுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பார். அவர்களும் உற்சாகத்துடன் வேலை செய்வார்கள்.

இந்தப் படம் பார்க்கும் உங்களுக்கு திரில்லரா இருக்கும். ஆனால், செட்டில் வேலை செய்த எங்களுக்கு ரொமான்டிக்காக இருந்தது. ஐ லவ் யூ சார்.. மிஷ்கின் சார் அன்பாக இருந்தாலும் அறிவாக இருந்தாலும் அடுத்த வருடம் அதைப் பகிர்ந்து கொள்வார்…” என்றார் விஜய் சேதுபதி.

Our Score