கடந்த 23-ம் தேதி காலமான ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் மறைவுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் இன்று காலை 11 மணிக்கு வடபழனி ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் விக்ரமன், செயலாளர் செல்வமணி தலைமையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இயக்குநர் சிகரத்தின் மகளும் தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமி, அவரது கணவர் கந்தசாமி, மகன் பிரசன்னை, கே.பி.யின் 25 ஆண்டு கால உதவியாளரான மதுரை என்.மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திரைப்பட இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர்களான இயக்குநர்களும், உதவி இயக்குநர்களும், துணை இயக்குநர்களும், இணை இயக்குநர்களும் திரளாக வந்திருந்து கே.பி.க்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
கே.பி.யின் திருவுருவ புகைப்படத்தை இயக்குநர் பார்த்திபனின் மேற்பார்வையில் பிரபல ஓவியர் ஸ்ரீதர் அற்புதமாக வரைந்திருந்தார். வந்திருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்திழுத்தது கே.பி.யின் அழகான அந்தப் புகைப்படம்.
முதலில் புஷ்பா கந்தசாமி குத்துவிளக்கேற்றி வைத்தார். இயக்குநர் இமயம் பாரதிராஜா கே.பி.யின் திருவுருவப் படத்தினை திறந்து வைத்தார். மூத்த இயக்குநரான எஸ்.பி.முத்துராமன் மாலை அணிவித்தார். இதைத் தொடர்ந்து நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் மேடையேறி கே.பி.க்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இயக்குநர் இமயம் பாரதிராஜா தழுதழுக்கும் குரலில் பேசினார். “நான் மிகவும் உடைந்து போயுள்ளேன். நான் இப்போது பாதி பலத்தை இழந்துவிட்டேன்.. தமிழ்த் திரையுலகத்தின் பலமே பாலசந்தர்தான். உணர்ச்சிகளால் வாழ்பவன் நான். கண்ணீரை மறைக்கத் தெரியாது. முடியாது.. எனக்குள் அழுகைதான் பொங்குகிறது..
பாலசந்தரின் முதல் படம் ‘நீர்க்குமிழி’. கடைசி படம் ‘பொய்’. மிக பொருத்தமான தலைப்புகள். வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி போலத்தான். ஆனால் அதுவும் கடைசியில் பொய்தான் என்பதை நமக்குச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். என்னால் அதிகம் பேச முடியவில்லை..” என்று சொல்லி அழுதபடியே விலகினார்.
தொடர்ந்து மைக்கில் பேசிய இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் செல்வமணி, கே.பி. மறைவு தொடர்பான சங்கத்தின் தீர்மானங்களை வாசித்தார்.
“நமது சங்கத்தின் முகவரியை பாலசந்தரின் முகவரியாக மாற்றப் போகிறோம். நமது சங்கத்தின் வாயலில் அமைக்கப்பட்டிருக்கும் ‘படைப்பாளிகள் இல்லம்’ என்கிற பெயர் நீக்கப்பட்டு ‘கே.பாலசந்தர் இல்லம்’ என்று பெயர் சூட்டப்பட இருக்கிறது.
பாலசந்தரின் புகழ் பெற்ற திரைப்படங்களை சென்னையில் ஒரு திரையரங்கத்தில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு திரையிட இருக்கிறோம்.
வரும் பிப்ரவரி முதல் வாரம் கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட.. அவரால் நடிக்க வைக்கப்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் இப்போது நடித்து வரும் நடிகர், நடிகையர்கள் கலந்து கொள்ளும்வகையில் மிக பிரமாண்டமான இரங்கல் கூட்டம் காமராஜர் அரங்கத்தில் நடத்தவிருக்கிறோம்.
வரும் ஏப்ரல் மாதம் நமது சங்கத்தின் சார்பில் வழங்கப்படவிருக்கும் சிறந்த திரைப்பட விருதுகள் பட்டியலில் சிறந்த இயக்குநருக்கான விருது, ‘கே.பாலசந்தர் விருது’ என்ற பெயரில் வழங்கப்படும்.
கே.பாலசந்தரின் 25 வருட உதவியாளரான மதுரை என்.மோகனை இனி வரும் காலங்களில் நமது இயக்குநர்கள் அவரவர் படங்களில் முடிந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.” என்றவர் கே.பி. தொடர்பாக தமிழக அரசுக்கு மேலும் மூன்று கோரிக்கைகளை சமர்ப்பித்தார்.
“இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் வசித்த வீடு இருக்கும் தெருவின் பெயரை ‘பாலசந்தர் தெரு’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
மயிலாப்பூர் லஸ் கார்னரில் ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தருக்கு சிலை அமைத்திட வேண்டும்..
‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் பெயரில் தமிழக அரசு திரைப்படத் துறையினருக்கு விருது வழங்க வேண்டும்.
இந்த மூன்று வேண்டுதல்களையும் தமிழக அரசுக்கு நமது கோரிக்கையாக வைக்கிறோம். இவற்றை வெகு சீக்கிரம் நிறைவேற்றி தமிழக அரசு தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்..” என்றார் செல்வமணி.
தொடர்ந்து பேசிய கே.பாலசந்தரின் நீண்ட நாள் நண்பரும், தயாரிப்பாளருமான பிரமிட் நடராஜன், “கே.பி. இறந்த பின்பு நான் மருத்துவமனையில் இருந்தேன். அப்போது ஆர்.கே.செல்வமணி எனக்கு போன் செய்து அடுத்து செய்ய வேண்டியவைகளைப் பற்றிப் பேசினார். அப்போது இறுதிச் சடங்கை இயக்குநர் சங்கம் முன்னின்று நடத்துவது பற்றி சொன்னார். பொதுவாக பிராமணர்கள் இறுதிக் காரியத்தை சீக்கிரமாகவும், மிக எளிமையாகவும் நடத்தவே விரும்புவார்கள் என்பதால் நான் புஷ்பா மற்றும் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்துவிட்டு இதைச் சொன்னேன். ஆனால் செல்வமணி அதை ஏற்க மறுத்து அவர் எங்களுக்குச் சொந்தமானவர்.. நாங்க பிரமாண்டமாக அவரை அழைத்துச் செல்ல விரும்புகிறோம் என்று சொல்லி மிக பெரிய அளவில் இயக்குநர் சிகரத்தை கொண்டு போனார். அவருக்கு எங்களது நன்றி.
கே.பி. ஸார் ஒரு கட்டத்தில் பெப்ஸிக்கும் தலைவராக இருந்தார். அதேபோல இயக்குநர்கள் சங்கத்திற்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், சேம்பருக்கும் தலைவராக இருந்திருக்கிறார். ஆனால் எந்தச் சமயத்தில் எந்தச் சங்கத்தின் பொறுப்பில் இருக்கிறாரோ அந்தச் சங்கத்தின் சார்பிலேயே பேசுவார். வாதாடுவார்.
கே.பி. ஸார்.. ஏ.ஜி.எஸ். அலுவலகத்தில் வேலை பார்த்தபோதே நாடகங்களில் மிக தீவிரமாக இருந்தார். அப்போது ஒரு பெரிய இயக்குநரை சந்திக்கச் சென்றார். அந்த இயக்குநர் கே.பி.யை பார்த்தும் பார்க்காதது போல நடந்து கொள்ள கே.பி.க்கு அது மிகப் பெரிய அவமானமாகிவிட்டது. அன்றைக்கு என்னிடம் அவர், ‘நான் இனிமேல் சினிமாவைத் தேடி போக மாட்டேன். சினிமாதான் என்னைத் தேடி வரணும். வர வைப்பேன்..’ என்றார்.
அதற்குப் பிறகு ஒருவித வெறியுடன் தொடர்ச்சியாக நாடகங்களை போட்டுக் கொண்டிருந்தார். பின்பு சினிமாவுலகம் தானாகவே கே.பி.யை தேடிச் சென்று இழுத்துக் கொண்டது.. அவருடைய ஒவ்வொரு நாடகமும் ஒரு சினிமா போன்றது. அமெச்சூர் நாடகங்கள் போலில்லாமல் அவருடைய நாடக மொழியே சினிமா மொழியைக் கொண்டது. அதுதான் அவரது வெற்றிக்குக் காரணம்..” என்றார்.
நன்றியுரை ஆற்றிய திருமதி புஷ்பா கந்தசாமி, தன்னுடைய தந்தை கவிதாலயா நிறுவனத்திற்காக படம் இயக்கிய பொழுது தன்னிடம் ஒரு தயாரிப்பாளராகவே நடந்து கொண்டதாகச் சொல்லி கண் கலங்கி அழுதார்.
“ஒரு படத்தின் ஷூட்டிங்கப்போ 100 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் தேவைப்பட்டுச்சு.. ‘புஷ்பாகிட்ட கேளுங்கப்பா.. அவளால சமாளிக்க முடியுமா..? கொடுக்க முடியுமான்னு கேளுங்க.. அப்புறமா பார்க்கலாம்’னு சொல்லியனுப்பினார்.
‘பார்த்தாலே பரவசம்’ படம் சரியாகப் போகவில்லை. அப்போது என்னிடம், ‘ஸாரிம்மா உன்னை ஏமாத்திட்டேன்..’ என்று என்னிடம் வருத்தப்பட்டு சொன்னார். அந்த அளவுக்கு அவர் ஒரு நல்ல இயக்குநராகவே என்னிடம் பேசுவார். நடந்து கொள்வார்.
என்னுடைய தந்தையின் இறுதிச் சடங்கின்போது வந்திருந்து உதவிகள் செய்து மிகப் பெரிய அளவுக்கு பேசப்படும் அளவுக்கு அவருக்கு மரியாதை செலுத்திய இயக்குநர்கள் சங்கத்திற்கு எனது நன்றி.
என்னை அனைவருமே ‘சகோதரி’ என்று அழைத்தீர்கள். இது ஒன்றே எனக்கு போதும். நானும் என் குடும்பத்தினரும் சந்தோஷமாக இதை ஏற்றுக் கொள்கிறோம்.. எங்களுக்கு ஆதரவு கொடுக்கும் உங்களுக்கு எங்களது குடும்பத்தினர் சார்பாகவும் நன்றி..” என்றார்.
நிகழ்ச்சியின் முடிவில் ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் நீண்ட நாள் உதவியாளரான மதுரை என்.மோகனை மேடைக்கு அழைத்து அவருக்கு தயாரிப்பாளர் தாணு நிதியுதவி வழங்கினார்.