full screen background image

‘துருவங்கள் பதினாறு’ படத்தை வாங்கி வெளியிடுவது ஏன்..? விநியோகஸ்தரின் விளக்கம்..!

‘துருவங்கள் பதினாறு’ படத்தை வாங்கி வெளியிடுவது ஏன்..? விநியோகஸ்தரின் விளக்கம்..!

வரும் டிசம்பர் 29-ம் தேதி ‘துருவங்கள் பதினாறு’ படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் பிரதான வேடமேற்றிருப்பவர் நடிகர் ரகுமான். மற்றும் பல புதுமுகங்களும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – சுஜித் சாரங், படத் தொகுப்பு – ஸ்ரீஜித் சாரங், இசை – ஜேக்ஸ் பிஜாய் இவர்கள் மூவருமே ‘தாக்க தாக்க’ படத்தில் பணிபுரிந்தவர்கள். கலை – சிவசங்கர், சவுண்ட் இன்ஜினியர் ‘சிங்க் சினிமாஸ்’ சச்சின் சுதாகரன்.

இந்தப் படத்தை ட்ரீம் பேக்டரி நிறுவனம் வாங்கி உலகம் முழுவதும் வெளியிடுகிறது. இது பற்றி ட்ரீம் பேக்டரி நிறுவனத்தின் விநியோகப் பிரிவில் தலைமை பொறுப்பு வகிக்கும்  B. சக்திவேலன் கூறும்போது, “நல்ல படங்கள்… தரமான தகுதியான முயற்சிகள் கொண்ட படங்களை வெளியிடுவதையே எங்கள் நோக்கமாக வைத்து இருக்கிறோம்.

நல்ல படம்  எது என்பதைக் கண்டுபிடிக்கப் பல சுமாரான படங்களையும், மிகச் சாதாரண படங்களையும் கூடப்  பார்க்க வேண்டியிருக்கும். இம்முயற்சியில் சில நேரம் எங்களுக்குச் சோர்வும், சலிப்பும்கூட ஏற்பட்டு விடுவதுண்டு.

இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு நாள் பி.ஆர்.ஓ. சக்தி சரவணன் என்னிடம்  வந்து, ‘ஒரு படம் ரிலீஸுக்கு தயாரா இருக்கு.. பார்க்கிறீர்களா?’ என்று கேட்டார். அவர் அந்தப் படத்தின் இயக்குநரான கார்த்திக் நரேன் பற்றியும் கூறினார். 21 வயதே ஆன இளைஞர் என்றும் குறும்படம் இயக்கிய பின்னணி பற்றியும்  நம்பிக்கையுடன் கூறினார்.

இப்போதெல்லாம் குறும்பட அனுபவத்துடன் படம்  எடுப்பவர்கள் பார்வையாளர்களைக் கவர வேண்டும். அது ஒரு வணிகப் பொருள் என்பதை அறியாமலும் கடைசியில் திரையரங்கிற்குச் செல்ல வேண்டும் என்கிற தெளிவில்லாமலும் ஏதோ ஒன்றைப் படமாக எடுத்து விடுகிறார்கள். எனவே அரை மனதோடு சந்தேகத்துடன்தான் படம் பார்க்கச் சென்றோம்.

ஆனால் முதல் ஐந்து நிமிடத்திலேயே இது வேறு மாதிரியான படம். படத்தில் பணியாற்றியுள்ள அனைவரும் திறமைசாலிகள் என்பதை உணர வைத்தது. படத்தில் ஆரம்பத்தில் தொடங்கிய சஸ்பென்ஸ் க்ளைமாக்ஸ்வரை இருந்தது. பார்ப்பவரைக் கட்டிப் போட்டது. சிறிது நேரத்திலேயே இது வேறு வகையிலான ஒரு முன் மாதிரியான படம் என்று புரிந்தது. படம் பார்த்து முடிந்ததுமே வாங்குவது என்று முடிவு செய்து விட்டோம்.

ஆனால் ஒரு விஷயத்தில் அக்கறையும், கவனமும் தேவை என்பதை உணர்ந்திருந்தோம். இந்த ‘துருவங்கள் பதினாறு’ படத்தை சரியான நேரத்தில் வெளியிட வேண்டும் என்று காத்திருந்தோம். ஏனென்றால், இப்போது நிறைய படங்கள் எடுக்கப்படுகின்றன. வெளியாகின்றன. ஆனால் எத்தனை படங்கள் வெற்றி பெறுகின்றன என்று கூற முடிவதில்லை. இப்போதுள்ள தொழில்நுட்ப சாத்தியங்களில் படம் எடுப்பது சுலபம். அதை வியாபாரம் செய்வதும் வெளியிடுவதும்தான் மிகவும் சிரமம்.

சிலர் படம் எடுக்கிறார்கள். யாருக்காக எடுக்கிறார்கள்..? எப்படிக் கொண்டு சேர்க்கப் போகிறார்கள் என்று தெரிவதில்லை. இப்படிப்பட்ட சூழலில் பத்தோடு பதினொன்றாக நல்ல முயற்சிகள்கூட கண்டு கொள்ளாமல் போய் விடுகின்றன. அப்படி ஒரு நிலை இந்த ‘துருவங்கள் பதினாறு’ படத்துக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்று யோசித்து படத்தை வெளியிடுவதில் கவனமாக இருந்தோம்.

இப்போது வரும் டிசம்பர் 29-ம் தேதியன்று எங்களது ‘துருவங்கள் பதினாறு’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம். படத்தை திரையரங்கிற்கு வந்து பாருங்கள். நிச்சயம் விறுவிறுப்பான ஒரு புதிய அனுபவத்தை படம் உங்களுக்கு தரும். அதுக்கு நான் கியாரண்டி..” என்கிறார் உறுதியான நம்பிக்கையோடு..!

Our Score