“ஒரு நாளில் ஒரு காட்சியை மட்டும் படமெடுத்தால் எப்படி..?” – மிஷ்கினுடனான மோதல் பற்றி நடிகர் விஷால் பேட்டி

“ஒரு நாளில் ஒரு காட்சியை மட்டும் படமெடுத்தால் எப்படி..?” – மிஷ்கினுடனான மோதல் பற்றி நடிகர் விஷால் பேட்டி

இயக்குநர் மிஷ்கின் ஒரு நாளைக்கு ஒரு காட்சியை மட்டுமே படமாக்கிக் கொண்டிருந்ததால்தான் தனக்கும், அவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுந்ததாகச் சொல்லியிருக்கிறார் நடிகர் விஷால்.

நடிகர் விஷாலின் நடிப்பில் இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ என்ற திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து ‘துப்பறிவாளன்-2’ படத்தை மிஷ்கினும், விஷாலும் இணைந்து துவக்கினார்கள்.

இந்தப் படத்தின் கதைப்படி படம் முழுவதும் லண்டனில்தான் நடைபெற்றாக வேண்டும். இதனால் லண்டனிலேயே இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்தச் சமயத்தில் படப்பிடிப்பினை எப்படி நடத்துவது என்பது தொடர்பாக விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுந்தது.

இதையொட்டி எழுந்த சர்ச்சையினால் மிஷ்கின் “இந்தப் படத்தை நான் இயக்க மாட்டேன்” என்று சொல்லிவிட.. விஷால் நானே இந்தப் படத்தை இயக்குவேன் என்றும் சொல்லியிருந்தார்.

இதற்குப் பிறகு விஷால் ‘எனிமி’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். தற்போது அவர் நடிக்கும் அவருடைய 31-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மிஷ்கினுடனான மோதல் பற்றி நடிகர் விஷால் கூறுகையில், “மிகுந்த பொருட்செலவில், நிறைய கடன் வாங்கித்தான் அந்தப் படத்தைத் துவக்கினேன். அது மிஷ்கினுக்கும் தெரியும். இருந்தும் லண்டனில் ஷூட்டிங் நடந்தபோது ஒரு நாளைக்கு ஒரு காட்சியை மட்டுமே மிஷ்கின் படமாக்கினார். இதனால் எனக்கு நிறைய பொருட் செலவு ஆனது. இது பற்றிக் கேட்கப் போய்தான் பிரச்சினை துவங்கியது.

இப்போது நானே அந்தப் படத்தை இயக்கப் போகிறேன். இசை இளையராஜாதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தப் படம் 2022-ம் ஆண்டு துவங்கி, அந்த ஆண்டே வெளியாகும்..” என்று சொல்லியிருக்கிறார்.

Our Score