வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள திரைப்படம் ‘துப்பாக்கி முனை.’
இந்தப் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ளார். ஹன்ஸிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ளார். மேலும் வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ராசாமதி, இசை – எல்.வி.முத்து கணேஷ், படத் தொகுப்பு – புவன் சீனிவாசன், சண்டை இயக்கம் – அன்பறிவ், கலை இயக்கம் – மாயபாண்டி, பாடல்கள் – புலமைப்பித்தன், பா.விஜய், ஒலி வடிவமைப்பு – லட்சுமி நாராயணன், உடைகள் – பெருமாள் செல்வம், 2-வது யுனிட் இயக்குநர் – எம்.செந்தில் விநாயகர், ஒப்பனை – நெல்லை வி.சண்முகம், ஸ்டில்ஸ் – முன்னா, விஷூவல் எபெக்ட்ஸ் – பிரவின்-டி.ஜெகதீஷ், கிராபிக்ஸ் – சேது, தயாரிப்பு நிர்வாகம் – எஸ்.வெங்கடேசன், மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு.
‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கிய இயக்குநர் தினேஷ் செல்வராஜ், இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாகவும் வருகிறார். தன் வாழ்க்கையை மாற்றிப் போட்ட ஒரு வழக்கினை விக்ரம் பிரபு தீர விசாரிப்பதுதான் படத்தின் கதை.
சமீபத்தில் வெளியான ‘துப்பாக்கி முனை’ படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தணிக்கைக் குழுவிலும் இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
இந்த ‘துப்பாக்கி முனை’ திரைப்படம் வரும் டிசம்பர் 14-ம் தேதி வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு அறிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் ‘கோலமாவு கோகிலா’, ‘இமைக்கா நொடிகள்’, ‘ராட்சசன்’ ஆகிய கிரைம், திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதால் அதே ஜானரில் வரவிருக்கும் இந்த ‘துப்பாக்கி முனை’ படத்திற்கும் தமிழ்த் திரையுலகத்தில் பெரும் எதிர்பார்ப்பு காத்திருக்கிறது..!