துப்பாக்கி முனை – சினிமா விமர்சனம்

துப்பாக்கி முனை – சினிமா விமர்சனம்

வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ளார். ஹன்ஸிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ளார். மேலும் வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், கல்யாணி, ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ராசாமதி, இசை – எல்.வி.முத்து கணேஷ், படத் தொகுப்பு – புவன் சீனிவாசன், சண்டை இயக்கம் – அன்பறிவ், கலை இயக்கம் – மாயபாண்டி, பாடல்கள் – புலமைப்பித்தன், பா.விஜய், ஒலி வடிவமைப்பு – லட்சுமி நாராயணன், உடைகள் – பெருமாள் செல்வம், 2-வது யுனிட் இயக்குநர் – எம்.செந்தில் விநாயகர், ஒப்பனை – நெல்லை வி.சண்முகம், ஸ்டில்ஸ் – முன்னா, விஷூவல் எபெக்ட்ஸ் – பிரவின்-டி.ஜெகதீஷ், கிராபிக்ஸ் – சேது, தயாரிப்பு நிர்வாகம் – எஸ்.வெங்கடேசன், மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு.

‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கிய இயக்குநர் தினேஷ் செல்வராஜ், இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

மும்பை போலீஸில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கிறார் உதவி கமிஷனர் ‘பிர்லா போஸ்’ என்ற விக்ரம் பிரபு. இவர் போட்டுத் தள்ளிய குற்றவாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவருடைய சஸ்பென்ஸன் ஆர்டரும் இருக்கிறது.

இவருடைய படுகொலைகளைப் பார்த்து மனம் வெதும்பிய இவரது தாயார் கல்யாணி விக்ரம் பிரபுவை விட்டு பிரிந்து செல்கிறார்.

இடையில் அவரைக் காதலிக்கும் ஹன்சிகாவின் தந்தை விக்ரம் பிரபு போலீஸ் வேலையை விட்டுவிட்டு வந்தால் பெண் தரத் தயாராக இருப்பதாகச் சொல்கிறார். ஆனால் இதனை விக்ரம் பிரபு ஏற்காமல் போக அப்போதைக்கு காதல் பிரிவு ஏற்படுகிறது.

காதலியையும், காதலியின் தந்தையையும் சந்தித்துப் பேசும் தருணத்தில் அங்கே வரும் ஒரு வில்லன் ஹன்சிகாவின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டுகிறான். வேறு வழியில்லாமல் அவனை அங்கேயே சுட்டுத் தள்ளுகிறார் விக்ரம் பிரபு. இது அவர் மீதான என்கவுண்டர் புகார்களுக்கு வலு சேர்க்க மறுபடியும் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் விக்ரம் பிரபு.

இந்த நேரத்தில்தான் தனது டிபார்ட்மெண்ட்டில் கொடுக்கப்பட்ட மறைமுக அஸைன்மெண்ட்டுக்காக ராமேஸ்வரம் வருகிறார் விக்ரம் பிரபு. உள்ளூரில் ஒரு குற்றச் சம்பவம் நடந்திருக்கிறது. பள்ளிக்குச் செல்லும் மாணவியை யாரோ சிலர் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளனர்.

இந்தக் கொலை தொடர்பாக ஆசாத் என்னும் ஷபியை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அவன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மாவோயிஸ்ட் தீவிரவாதி என்றும், மிகப் பெரிய தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவன் என்பதால் அங்கேயே அவனை சப்தம் செய்யாமல் என்வுண்ட்டர் செய்யும்படி  விக்ரம் பிரபுவிற்கு ஆணை வருகிறது.

அந்த ஆணையை நிறைவேற்ற வேண்டி ஷபியை கோர்ட்டுக்குக் கொண்டு செல்லும் வழியில் யாருக்கும் தெரியாமல் கடத்திச் செல்கிறார் விக்ரம் பிரபு. ஆனால் உடன் வந்த போலீஸாரின் சொதப்பலால் இந்த விவகாரம் வேறொரு காதல் ஜோடிக்குத் தெரிய வர.. பிளானை தள்ளி வைக்க நேரிடுகிறது. இதற்கிடையில் மேலிட உத்தரவும் என்கவுண்ட்டரை இப்போதைக்கு செய்ய வேண்டாம் என்று சொல்ல காத்திருக்கிறார் விக்ரம் பிரபு.

இந்த நேரத்தில் உண்மையில் கைது செய்யப்பட்டு சாவின் விளிம்பில் இருக்கும் ஷபிக்கும், அந்தப் பெண்ணின் படுகொலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று விக்ரம் பிரபுவுக்குத் தெரிய வருகிறது. உள்ளூரில் மிகப் பெரிய தாதாவாக இருக்கும் வேல.ராமமூர்த்தியின் மகன்தான் தனது கூட்டாளிகளுடன் இந்தக் கொடூரத்தைச் செய்திருப்பதாகத் தெரிகிறது.

இது தெரிந்து கொண்ட பின்பு விக்ரம் பிரபு என்ன செய்தார்.. மேலிட உத்தரவை ஏற்று அந்த அப்பாவை படுகொலை செய்தாரா.. அல்லது உண்மையான குற்றவாளிகளைத் தேடிப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தினாரா என்பதுதான் இந்தத் ‘துப்பாக்கி முனை’ படத்தின் திரைக்கதை.

இதுவரையிலும் நிறைய என்கவுண்ட்டர் சம்பந்தப்பட்ட திரைப்படங்களை பார்த்திருக்கலாம். அனைத்துத் திரைப்படங்களிலும் என்கவுண்ட்டர் செய்வதை நியாயப்படுத்தியே காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது தெரிந்திருக்கலாம். விசாரணை படத்தில் மட்டுமே ஏன் போலியான என்கவுண்ட்டர்கள் செய்யப்படுகின்றன.. எப்படி செய்யப்படுகின்றன என்பதை மட்டுமே காட்டினார்கள். ஆனால் அந்தக் குற்றவுணர்ச்சி அந்தக் காவல்துறையினருக்குள் ஏற்படுத்தும் மாற்றத்தை எந்தத் திரைப்படமும் இதுவரையிலும் காட்டியதில்லை. முதன்முறையாக இத்திரைப்படத்தில்தான் அதனை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள்.

ஆனால் அதற்கான அழுத்தமான திரைக்கதையும், இயக்கமும் இல்லாததுதான் இந்தப் படம் இது குறித்து பேசப்படாமல் போனதற்கான காரணம்.

விக்ரம் பிரபு போலீஸ் வேடத்திற்கு ஏற்ற கெத்தான உடல் மொழியைக் காட்டியிருந்தாலும் போலீஸுக்கு இருக்க வேண்டிய அந்த தெனாவெட்டு மட்டும் மிஸ்ஸிங். சக போலீஸாரிடம் பேசும்போதுகூட மூன்றாவது மனிதரைப் போலவே பேசியிருக்கிறார். அல்லது பேச வைக்கப்பட்டிருக்கிறார். இது இயக்குநரின் தவறுதான்..!

ஆக்சன் காட்சிகளுக்கே படம் முழுவதும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் விக்ரம் பிரபுவின் நடிப்புக்கேற்ற ஸ்கோப் திரைக்கதையில் கிடைக்கவில்லை. கிடைத்த இடத்திலும் எம்.எஸ்.பாஸ்கர் தனது அனாசய நடிப்பால் பார்வையாளர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டதால் பெரிதாக சொல்ல முடியவில்லை.

அடுத்தடுத்த படங்களில் விக்ரம் பிரபு நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த கேரக்டர்களை தேர்வு செய்தால் அவருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நல்லது.

எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இந்தப் படத்திலும் தனி ஆளுமையை பதிவு செய்துள்ளார். சர்ச்சுக்குள் கண்ணீரோடு தனது கதையைச் சொல்லுமிடத்திலும், கிளைமாக்ஸில் தன் மகளை சிதைத்தவர்களுக்கு மன்னிப்பு அளிப்பது பற்றியும் அவர் பேசுவது கண்களில் நீர்க் குளத்தைக் கூட்டுகிறது.

நாயகி ஹன்ஸிகாவுக்கு அதிகமான வேலையில்லை. ஒரு பாடல் காட்சிக்கு ஆடியிருக்கிறார். மற்றபடி சில காட்சிகளில் தலையைக் காட்டியிருக்கிறார். பிரதமர் அலுவலகத்தில் வேலை பார்ப்பதாகச் சொல்லி திரைக்கதையை நகர்த்த கொஞ்சம் உதவியிருக்கிறார். ஆனால் லாஜிக்படி பார்த்தால் இது பெரிதாக உதைக்கிறது. மற்றபடி படத்தில் இவருக்கு பெரிய ஸ்கோப் இல்லை.

வேல.ராமமூர்த்திக்கு வழக்கமான வில்லன் வேடம் என்பதால் பெரிதாக வித்தியாசம் காட்டவில்லை. இயக்குநரும் விரும்பவில்லை போலும். அப்படியே விட்டுவிட்டார்கள். ‘ஆடுகளம்’ நரேனும் இரண்டே காட்சிகளில் வந்து தனது நடிப்பைக் காட்டிவிட்டுப் போயிருக்கிறார். உண்மையான தகப்பனாகவும்.. அட்வைஸ் செய்யும் மாமனாராகவும், அவர் தன்னுடைய நிபந்தனையைச் சொல்லும்விதம் மிக யதார்த்தமானது..!

எம்.எஸ்.பாஸ்கரின் மகளாக நடித்திருக்கும் அபிராமி மிக அழகு. யதார்த்தமாக, நிறைவாக நடித்திருக்கிறார்.  பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.

படம் என்கவுண்ட்டருக்கு எதிரான தீர்ப்பைச் சொல்லும்விதமாக வைத்திருப்பதுதான் படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட். இதற்கு ஏதுவாக சில இடங்களில் இருக்கும் வசனங்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

“ஆணிவேர்ல தப்பை வெச்சுக்கிட்டு, கிளையை வெட்டி என்ன பிரயோஜனம்..?” என்று அதிகார வர்க்கத்தின் ஓரவஞ்சனையான நடவடிக்கைகளை விமர்சிப்பது சிறப்பு.

“கொல்றது பாவம்னு சொல்லாம, ஏன் கொல்லாம விட்டீங்கனு கேட்குறீங்களே?..” என்ற வசனம் அந்தக் காட்சிக்கு மிகப் பொருத்தம்.

‘குழந்தையையும், தாயையும் காப்பாத்தணும்ன்னு நினைச்சு நீங்க பண்ற ஆபரேஷன் மாதிரிதான்… இந்த என்கவுண்ட்டரும்…” என தன்னுடைய டாக்டர் அம்மாவிடம், சொல்லும் கருத்தும் ஒரு நிலையில் ஏற்புடையதுதான். ஆனால் பல இடங்களில் அது போலியான என்கவுண்ட்டருக்கு ஒத்து ஊதுவது போல இருக்கிறது..!

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில் ஒன்று பின்னணி இசை. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்பதுபோல இருக்கும் ஒரேயொரு பாடல் வரிகள் ஈர்க்கவில்லையென்றாலும் படமாக்கியிருக்கும்விதம் அழகு. அதே சமயம் பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார்கள் இசையமைப்பு சகோதரர்கள். படத்தின் தீம் இசையாக சேஸிங் காட்சிகளில் ஒலிக்கும் அந்த இசையே கவர்ந்திழுக்கிறது..!

ராசாமதியின் ஒளிப்பதிவு ராமேஸ்வரத்தின் இயற்கை எழிலை அழகுற படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. ராசாமதியின் கேமிராவுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே திரைக்கதையின் லொக்கேஷன்களை இயக்குநர் தேர்வு செய்திருக்கிறார் போலும். பாம்பன் பாலத்தை புதிய  கோணத்திலும், ராமேஸ்வரம் கடல், மற்றும் நகர் பகுதிகளை இதுவரையிலும் பார்த்திருக்காத மாதிரியும் காட்டியிருக்கிறார்கள். பாராட்டுக்கள் ராசாமதி..!

பெண்களுக்கெதிரான குற்றங்களைத் தடுக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் கதையைத் தயார் செய்திருக்கும் இயக்குநர் காட்சிகளிலும் அதை செய்திருக்க வேண்டாமா.. இது போன்ற குற்றச் செயல்களை திரையில் காட்டும்போது ஒரு வரைமுறையும், சென்சார் தன்மையும் இயக்குநருக்கே இருந்தாக வேண்டும்.

இந்தப் படத்தில் பாலியல் வன்புணர்வாக காட்டியிருக்கும் காட்சிகள் நிச்சயமாக இளைஞர்கள் மனதை சிதைக்கும் வேலையைத்தான் செய்யும். அது கொடூரம் என்பதை சொல்வதற்குப் பதிலாக கேளிக்கையாக்கும் அளவுக்குக் காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். இதனை மாற்றியமைத்திருக்கலாம்..!  

“தவறு செய்பவன் சரியான நேரத்தில் தண்டிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் எந்தவொரு நிரபராதியையும் அநியாயமாக தண்டித்துவிடக் கூடாது..” என்பதைத்தான் இந்தப் படத்தில் சொல்ல வந்திருக்கிறார் இயக்குநர். இதனை கடைசி காட்சியில் மெல்லவே உணர்த்தியிருக்கிறார். ஆனால், இன்னும் வலிமையாக, மனதில் பதியும்படி சொல்லியிருக்கலாம்..!

 

Our Score