தோழா – சினிமா விமர்சனம்

தோழா – சினிமா விமர்சனம்

‘தோழன்’ என்கிற ஒரு வார்த்தைக்கு இருக்கும் மதிப்பையும், மரியாதையும் மீட்டுத் தந்திருக்கும் படம் இது.

மிகப் பெரிய செல்வந்தராக இருந்தும் விதியின் விளையாட்டினால் முதுகுத் தண்டில் அடிபட்டு வீல்சேரில் நடமாடும் அளவுக்கு இருக்கிறார் கோடீஸ்வரரான நாகார்ஜூனா. தன்னை பரிவுடன் பார்த்துக் கொள்ள ஆள் தேடுகிறார்.

இன்னொரு பக்கம் அடிக்கடி சிறு, சிறு திருட்டுகளில் ஈடுபட்டு ஜெயிலுக்கு போய் வரும் கார்த்தியினால் அவருடைய குடும்பமே பாதிக்கப்படுகிறது. தன்னுடைய வக்கீல் நண்பரான விவேக்கின் முயற்சியால் 4 மாத பரோலில் ஜெயிலில் இருந்து வெளியில் வருகிறார் கார்த்தி.

வீட்டுக்கு வந்தால் தம்பி தறிகெட்டுப் போயிருக்கிறான். தங்கை மதிக்கவே மாட்டேன் என்கிறாள். அம்மாவும் அதையேதான் கார்த்தியிடம் சொல்கிறாள்.. இனிமேல் இங்க வராதே என்று.. மனம் வெதும்பிப் போய் நிற்கும் கார்த்தியை வேறு வேலைகளில் தள்ளிவிடப் பார்க்கிறார் விவேக். எதுவும் அமையாமல் போக கடைசியாக நாகார்ஜூனாவின் நேர்முகத் தேர்வுக்கு அனுப்பி வைக்கிறார்.

அங்கேயும் எப்போதும்போல தெனாவெட்டாக பேசும் கார்த்தியை ஏனோ நாகார்ஜூனாவுக்கு மிகவும் பிடித்துப் போகிறது. ஆனால் கார்த்திக்கு அந்த இடம் பிடித்துப் போனதற்கு இரண்டு காரணங்கள். 1. தமன்னா.. 2. அந்த வீட்டில் அவருக்குக் கொடுத்திருக்கும் வசதியான பெரிய அறை.

அதுவரையிலும் தன்னை ஒரு நோயாளி போலவே ட்ரீட் செய்து வரும் தனது நண்பர்கள், சுற்றத்தாரிடமிருந்து “உனக்கு ஒண்ணுமே இல்லண்ணே.. நல்லாத்தாண்ணே இருக்க..” என்று பாஸிட்டிவ்வாக பேசி அவரை உற்சாகப்படுத்தும் கார்த்தியை நாகார்ஜூனாவுக்கு ரொம்பவே பிடித்துப் போகிறது..!

நாகார்ஜூனாவை வெளியில் காரில் அழைத்துப் போகிறார். பரிவுடன் பார்த்துக் கொள்கிறார்.. இன்னொரு பக்கம் நாகார்ஜூனாவுக்குள் இருக்கும் காதல் உணர்வுக்குக் காரணமானவரை அழைத்து வந்து, அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த முனைகிறார் கார்த்தி. அது முடிந்ததா... இல்லையா என்பதுதான் படத்தின் உயிரோட்டமான திரைக்கதை.

பிரெஞ்சு மொழியில் வெளியான ‘InTouchables’ என்கிற படத்தின் ரீமேக் இது. இந்தப் படத்தை முதலில் பார்த்தபோது கமல்ஹாசனும், விஜய் சேதுபதியும் இதில் நடித்தால் எப்படியிருக்கும் என்று யோசித்த்துண்டு. இன்றைக்கு அது இடம் மாறி, தடம் மாறி வந்திருந்தாலும் மிகச் சிறப்பாகவே, தரமாகவே தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு படத்தின் கேஸ்டிங் டிபார்ட்மெண்ட்டே முக்கியக் காரணம். நாயகர்களான நாகார்ஜூனாவும், கார்த்தியும், தமன்னாவும் இவர்களோடு பிரகாஷ்ராஜ், வசனகர்த்தாக்களான ராஜூ முருகன், சி.முருகேஷ்பாபு மற்றும் திறமைசாலி இயக்குநரான வம்சியும் தங்களது பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு காட்சியையும் நன்கு திட்டமிட்டு மிக யதார்த்தமாக நகைச்சுவையும் மாறாமல், சென்டிமெண்ட்டையும்உள்ளடக்கி ஒரு குடும்பக் கதைக்கு உதாரணமாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

நாகார்ஜூனாவின் மென்மையான நடிப்புக்கும், கார்த்தியின் அடாபுடாவென்று எதையும் அனாயசமாக எதிர்கொள்ளும் கேரக்டருடைய நடிப்புக்கும் ஒத்துப் போகும் அளவுக்கு காட்சியமைப்புகளை அமைத்திருக்கும் இயக்குநரை வெகுவாக பாராட்ட வேண்டும்.

நாகார்ஜூனா ஆக்சன் காட்சிகளிலேயே அமைதியின் திருவுருவமாக வந்து அதகளப்படுத்துவார். இதில் சொல்லவா வேண்டும்..? ஷ்ரேயாவின் புகைப்படம் வந்த கடித்த்தை கிழிக்கப் போகும் கார்த்தியின் செயலைத் தடுக்க, “அதைக் கிழிக்காத சீனு.. சீனு கிழிக்காத..” என்று குரலை உயர்த்திப் பேசியிருப்பதுதான் இந்தப் படத்திலேயே அவர் அதிகம் நடித்திருக்கும் காட்சி. மற்றவைகளில் இயல்பாக எப்படி இருப்பாரோ அப்படியேதான் நடித்திருக்கிறார்.

இறுதியில் அனுஷ்கா எங்கே தன்னை பார்த்துவிடுவாரோ என்கிற பயத்துடன் சீனு.. சீனு என்று அழைப்பதும், அந்தப் பதட்டத்தையும், அனுஷ்கா சொல்வதை ஜீரணித்து ஏற்றுக் கொள்ளும் காட்சியிலும் நம்மையும் ஒன்ற வைத்துவிட்டார். தன்னை எல்லோருமே உடல் ஊனமுற்றவனாக.. பாவமான தோரணையில் பார்ப்பதையே தான் விரும்பவில்லை என்று சொல்லும் நாகார்ஜூனா.. கார்த்தியின் வருகைக்குப் பின்னர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்விதமும், தன்னுடைய உடல் ஊனத்தை ஒரு பொருட்டாகவே கருதாதவண்ணம் செய்யும் செயல்களும் படத்திற்கே ஒரு பாஸிட்டிவ் உணர்ச்சியை ஊட்டியிருக்கின்றன.

கார்த்தியின் நடிப்பில் இந்தப் படமும் ஒரு மைல் கல். அம்மாவின் அன்புக்காக ஏங்கியவர்.. தங்கையின் பாராமுகத்தில் அவமானப்படுபவர்.. தம்பியின் நல்ல வாழ்க்கைக்கைக புத்தி சொல்பவர்.. எல்லாம் சுற்றி அவருக்கு நாகார்ஜூனாவிடமிருந்து கிடைக்கும் அன்பு அவரை ஆசுவாசப்படுத்துவதை காட்சிகளில் அற்புதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வம்சி.

அந்த ஓவியத் திறமையைப் பற்றியும், ஓவியம் மூலம் பணம் சம்பாதிக்கும் முறையைப் பற்றியும் கார்த்தி பேசும்போதெல்லாம் தியேட்டரே அதிர்கிறது. எங்கேயிருந்து இத்தனை இயல்பான நகைச்சுவையை இயக்குநர் வெளிப்படுத்த வைத்தார் என்றே தெரியவில்லை. கார்த்தியின் இயல்பான நடிப்பில் உள்ளம் கொள்ளை கொண்டது முதல்முறையாக இந்தப் படத்தில்தான்..!

கார்த்தி தன்னுடைய வாழ்க்கைக் கதையின் முடிச்சை அவிழ்த்துவிட்டு, தனது அம்மா பாசத்தை ஏக்கத்துடன் தெரிவிக்கையில் நாகார்ஜூனா பேசும் வசனங்கள்தான் படத்தின் டர்னிங் பாயிண்ட். அந்தக் காட்சியை லயித்த ரசிகனால் அதிலிருந்து மீளவே முடியவில்லை.

அம்மா-மகன் பாச செண்டிமெண்ட்டுக்கு இக்காலத்திற்கும் ஏற்றாற்போல வசனம் எழுதியிருக்கும் ராஜுமுருகன், சி.முருகேஷ்பாபு இருவருக்கும் நமது பாராட்டுக்கள். படத்தில் வசனங்கள் மிகப் பெரிய பலம். அவைகளாலும் நகைச்சுவை வெடித்து, சென்டிமெண்ட்டும் ஒர்க்அவுட்டாயிருக்கிறது.

தமன்னாவின் காதல் சமாச்சாரம் காமெடியாக பேசப்பட்டு தொடர்ந்து வந்தும், கடைசியாக ஒரு பொக்கேவில் வெளிப்படுவதும்.. “இவரையே இப்படி பார்த்துக்கிட்டீன்னா நீ அதிகமா விரும்புற என்னை எப்படி பார்த்துக்குவ.. இதுக்காகவே உன்னைய காதலிக்கிறேன்...” என்கிற தமன்னாவின் பேச்சில் காதல் கரைபுரண்டோடுகிறது.  தமன்னாவின் காஸ்ட்யூம் டிஸைனருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு. கேமிராமேனுக்கு அப்புறம் தமன்னாவை அழகாகக் காட்டியிருப்பதில் பெரும் பங்கு அவருக்கே..!

பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் பளிச்சிடுகிறது. பாரீஸ் காட்சிகளையும், கார் ரேஸ் காட்சிகளையும் அந்த வேகத்துடனேயே படமாக்கியிருக்கிறார்கள். சென்னையில் இரவு நேர கார் துரத்தல் காட்சியின் எடிட்டருக்கும், கேமிராமேனுக்கும் இடையிலேயே ரேஸ் நடந்திருப்பது போல தெரிகிறது. ஒரு சிறந்த வலுவான கூட்டணி அமையும்போது அனைத்து விஷயங்களுமே 100 சதவிகிதம் முழுமையாகத் வெளிப்படும். அது இந்தப் படத்தில் சாத்தியமாகியிருக்கிறது.

கோபி சுந்தரின் பாடல் காட்சிகள் படத்திற்கிடையே சோர்வைத் தராமல் அதுவும் ஒரு திரைக்கதையின் யுக்தியாக கொண்டு போயிருப்பது பாராட்டுக்குரியது. அந்த கிளப் டான்ஸிற்கு நடனமைத்தவருக்கு ஒரு ஷொட்டு.. நடனமணிக்கும் ஒரு பாராட்டு.

ஒட்டு மொத்தமாக பார்க்கப் போனால் ஒரு உடல் ஊனமுற்றவரை பார்த்து உச்சுக் கொட்டி அவரை ஒரு ஓரமாக உட்கார வைக்காமல், அவரும் நம்மில் ஒருவர்.. அவருக்கு ஒரு குறையும் இல்லை என்கிற பாஸிட்டிவ் எனர்ஜியோடு பேசவும், பழகவும் செய்வதுதான் அவர்களுக்குக் கொடுக்கிற உண்மையான சிகிச்சை என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது இந்தப் படம்.

படம் பார்த்த நான்கு பேராவது உடல் ஊனமுற்றவர்களைப் பற்றிய தங்களது பார்வையை மாற்றிக் கொண்டால் அதுவே இந்தப் படத்தை தயாரித்திருக்கும் பிவிபி நிறுவனத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இருக்கும்..!

படக்குழுவினருக்கும், இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

தோழா - உணர்வுப்பூர்வமான படம். மிஸ் பண்ணிராதீங்க..!