“இந்தப் படத்தில் நான் நடிப்பதை அமலாவும் என் மகன்களும் விரும்பவில்லை” – நடிகர் நாகார்ஜூனா பேச்சு..! 

“இந்தப் படத்தில் நான் நடிப்பதை அமலாவும் என் மகன்களும் விரும்பவில்லை” – நடிகர் நாகார்ஜூனா பேச்சு..! 

இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற ’தோழா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தங்களது  திரைப்படப் பயணத்தில் மறக்க முடியாத உணர்வுப்பூர்வமான தருணங்களை பகிர்ந்து கொண்டார்கள் ‘எவர் க்ரீன் ஹீரோ’ நாகார்ஜூனா, ’ஜூனியர் மார்க்கண்டேயன்’ கார்த்தி மற்றும் ‘சின்னக் கலைவாணர்’ விவேக்.

IMG_9837

முதலில் பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி, "தோழா’ படத்துல கார்த்தி ஹீரோவாக மட்டும் இல்லாமல் ஒரு ஆர்வமுள்ள உதவி இயக்குநரை போலவும் இருந்து எல்லோரையும் உற்சாகப்படுத்தினார். பாடலை எழுதும் போது, இந்த வரியை இப்படி எழுதலாமா, இந்த வார்த்தை வந்தால் நல்லா இருக்குமா என ரொம்பவே சொல்லி சொல்லி உற்சாகப்படுத்தினதை மறக்க முடியாது.

IMG_9664

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் நம் உள் மனதிற்குள் இருக்கும் ஆன்மாவைத் தொடும் பாடல்களாக வந்திருக்கின்றன. மற்ற பாடல்கள் பொழுது போக்கு அம்சங்களுக்கான பாடல்களாக இருக்கும்.

நாகார்ஜூனாவுக்கு என் தந்தை ‘ரட்சகன்’ படத்தில் ‘சோனியா சோனியா’ என்ற மெகா ஹிட் பாடலை எழுதியிருந்தார். தற்போது நானும் நாகார்ஜூனா அவர்களுக்கு ஒரு பாடலை எழுதியிருப்பதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.

IMG_9645

தேசிய விருது வென்ற எடிட்டர் கே.எல்.ப்ரவீன் பேசும்போது, "இந்தப் படத்துல ஒவ்வொரு காட்சிகளிலும் நாகார்ஜூனா வெளிப்படுத்தின எமோஷனலான நடிப்பைப் பார்த்து, நான் இப்போ அவரோட தீவிர ரசிகர் ஆயிட்டேன். மறுபக்கம் கார்த்தி ஒட்டு மொத்த படத்திலும் சரி ஷூட்டிங்கிலும் சரி தன்னோட குசும்பு கொப்பளிக்கும் நடிப்பால கலகலன்னு சிரிக்க வைச்சதையும் மறக்க முடியாது.." என்றார்.

IMG_9669

"என்னோட முப்பது வருஷ சினிமா வாழ்க்கையில் இப்போ முதல் முறையா இந்தப் படத்துல ‘ஹேண்ட்சம்’ நாகார்ஜூனாவுடன் சேர்ந்து நடிக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனால் அவரோடு சேர்ந்து நடிக்கிற மாதிரியான காட்சிகள் எனக்கு எதுவுமில்ல.." என ஆதங்கப்பட்டார் விவேக்.

IMG_9651

விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, "ஒரு நல்லப் படத்துல நடிக்கணும்னு நமக்குள்ள ஒரு தேடல் இருக்குமே. அந்த தேடலில் கிடைச்ச ஒரு நல்ல வாய்ப்புதான் இந்த ‘தோழா’ படம். உண்மையைச் சொல்லணும்னா, நல்ல கதைல நடிக்கிறதுக்காக ஒரு வருஷம் காத்திருந்தேன். என்னோட தேடல் வீண் போகல.

‘தோழா’வோட ஒரிஜினல் வெர்ஷனை பார்த்தப்ப, அதை அப்படியே பிரதிபலிக்கிற மாதிரி என்னால பண்ண முடியுமான்னு ஒரு சின்ன சந்தேகம் இருந்துச்சு. ஆனால் டைரக்டர் வம்சி செம புத்திசாலி. நமக்கு ஏற்ற மாதிரி கதையை மிக அழகாக, அதனோட எமோஷன் குறையாம எடுத்திருக்கார்.." என்று பாராட்டினார்.

IMG_9688

கடைசியாக பேச வந்த நடிகர் நாகார்ஜூனா, "என்னுடைய சினிமா கேரியர்ல இந்த ‘தோழா’ படம் ஒரு மைல் கல் படமாக இருக்கும்னு சொல்லலை.. ஆனால் என் வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கிய படம்.

‘InTouchables" என்ற இந்த ஃப்ரெஞ்ச் படத்தைப் பார்த்தப்போ இந்த மாதிரி ஒரு அருமையான படத்தை நாம ஏன் ரீமேக் பண்ணக் கூடாதுன்னு தோணுச்சு. அப்படியொரு உணர்வுப்பூர்வமான படம் அது. அந்தப் படத்தைப் பார்த்த நாள்ல இருந்து, நான் சந்திக்கிற நண்பர்கள்கிட்டயெல்லாம் 'InTouchables’ படத்தைப் பாருங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன். அந்த மாதிரியான ஒரு உணர்வை இந்த ‘தோழா’ படம் நிச்சயம் கொடுக்கும்.

இன்னொரு விஷயம் ‘தோழா’ படத்துல நான் நடிக்கிறதுல என் குடும்பத்துல யாருக்குமே விருப்பமில்ல. நான் நடிக்கக் கூடாதுன்னு என்னோட மனைவி அமலா, ரெண்டு பசங்களும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. இந்தப் படத்துல நான் வீல்சேர்ல உட்கார்ந்தபடி நடிக்கிற காட்சிகள் இருக்கு. என் பசங்களாலயும், மனைவியாலும் என்னை அப்படியொரு சூழ்நிலையில நடிக்கிறத ஏத்துக்கவே முடியல. இதுதான் அவங்க என்னை நடிக்க வேண்டாம்னு சொன்னதுக்கு காரணம். அதனால ‘தோழா’வை பார்க்கும்போது என்ன சொல்ல போறாங்களோன்னு எனக்கு ரொம்ப படபடப்பாவும் இருக்கு.." என்றார் நாகார்ஜூனா.

சென்னையில் பிறந்து வளர்ந்த நாகார்ஜூனாவுக்கு தமிழில் பேசவும் தெரியும் என்றாலும் இந்த விழாவில் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசினார். இது பற்றி அவரிடம் கேள்வி கேட்டபோது, “நான் தமிழில் பேசுவேன் என்றாலும் அந்த அளவுக்கு இலக்கணச் சுத்தமாகவோ முழுமையான வார்த்தைகளாகவோ பேச வராது. இப்போது பேச ஆரம்பித்தால் ஒவ்வொன்றுக்கும் கார்த்தியிடம் கேட்டு கேட்டுத்தான் பேச வேண்டும். அது எனக்குப் பிடிக்காது. பேசினால் சுத்தமாக, தெளிவாக பேச வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால்தான் தமிழைத் தொடவில்லை. ஆனால் இந்தப் படத்தின் டப்பிங்கில் நான்தான் தமிழ் வசனத்தை பேசியிருக்கிறேன்..” என்றார் சந்தோஷத்தோடு..!