தொரட்டி – சினிமா விமர்சனம்

தொரட்டி – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ஷமன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் இந்து கருணாகரனும், படத்தின் நாயகனான ஷமின் மித்ருவும் இணைந்து தயாரித்துள்ளனர்.

தயாரிப்பாளர் ஷமன் மித்ரு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சத்யகலா நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி ஆகியோரும் நடித்துள்ளனர்.

குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது படத் தொகுப்பு செய்துள்ளார். பாடல்களுக்கு வேத்சங்கரும், பின்னணி இசைக்கு ஜித்தன் ரோஷனும் இணைந்து இசை அமைத்துள்ளனர். சினேகன் அனைத்துப் பாடல்களையும் எழுத, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் பி.மாரிமுத்து.

இந்தப் படத்தை SDC  பிக்சர்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிட்டுள்ளது.

ஒரு திரைப்படத்தின் முதல் பத்து நிமிட நேரத்திலேயே அது என்ன வகையான திரைப்படம் என்பதை திரை ரசிகர்கள் எளிதில் உணர்ந்துவிடுவார்கள். ‘இது வழக்கமான படம் அல்ல..’ ‘இது ஏதோ சொல்ல வருகின்ற படம்..’ ‘இல்லை.. இது நமக்காகவே வந்திருக்கும் படம்’ என்றெல்லாம் நமது மனசுக்குள் ஒரு ஆறு குறுக்கும், நெடுக்குமாய் ஓடத் துவங்கும். அப்படியொரு குறுகுறுப்பை, இத்திரைப்படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே நமக்குக் கொடுத்துவிட்டது.

ஒரு நீண்ட கம்பின் முனையில் ஒரு சிறிய அரிவாளை கட்டி வைத்திருப்பார்கள். அதுதான் ‘தொரட்டி’. இது மரங்களில் இருக்கும் காய், கனிகள், இலைகளை அறுத்தெடுப்பதற்கு பயன்படுத்தும் ஒரு ஆயுதம். இந்தத் ‘தொரட்டி’ ஆடு, மாடு மேய்ப்பவர்களின் வாழ்க்கையில் கூடவே இருக்கும். அவர்களின் ஆறாவது விரல் போன்றது என்றும் சொல்லலாம். இதைத்தான் படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார்கள். இதற்கும் ஒரு காரணம் உண்டு.

இந்தத் ‘தொரட்டி’ என்னும் ஆயுதத்திற்கு மேய்ச்சல் நிலங்களைத் தேடிச் சென்று அங்கு ஆடு, மாடுகளை மேய்க்கும் இடையர் குலத்தவர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு இடம் உண்டு. இவர்களை ‘கீதாரிகள்’ என்றும் அழைப்பார்கள்.

ஊர்விட்டு ஊர் போய் ஆடுகளை மேய்க்கும் இவர்களின் கூட்டத்தில் இளைஞர்களும் இருப்பார்கள். ஒரு பருவ காலம் முழவதும் இவர்கள் அங்கேயே இருந்து ஆடு ‘கிடை’ போடும் வேலையைப் பார்ப்பார்கள்.

அதற்கு முன்பாக அவர்களுக்கு சொந்த ஊரில் திருமணம் நிச்சயமாகியிருந்தால், திருமணத்திற்கு ஒரு தேதி குறித்து சொல்லியனுப்புவார்கள். அன்றைய தகவல் தொடர்புகள் இப்போது போல் இல்லை என்பதால், பையனுக்கும் தகவல் கிட்டியிருக்காது. அவனால் வர முடியாமலும் போகலாம்.

அந்த நேரத்தில் திருமணத்தை நிறுத்தாமல், திருமண நிகழ்வுகளை நடத்துவார்கள். மணமகனின் குடும்பத்தினர் பயன்படுத்தும் ‘தொரட்டியை’யே மணமகனாக நினைத்து மாலை அணிவிப்பார் மணமகள். அதன் பிறகு அந்த மணமகளுக்கு, மணமகனின் சார்பில் அவனது தாயார்தான் தாலி கட்டுவார்.

பின்பு சில நாட்கள் கழித்து வீடு திரும்பும் மாப்பிள்ளை பையனிடம் இதைப் பற்றிச் சொன்ன பிறகு அவர்கள் இருவரும் தம்பதிகளாக வாழத் துவங்குவார்கள். இது அந்தக் காலத்திய இடையர்களில் ஒரு பிரிவினரான ‘கீதாரிகள்’ என்னும் தொழில் செய்பவர்களின் குடும்பப் பழக்கம்.

இப்படியொரு குடும்பத்தில் நடக்கும் ஒரு சின்னக் கதைதான் இத்திரைப்படம். அதற்கு முன்பாக ‘ஆட்டுக் கிடை’ என்றால் என்னவென்பதையும் பார்த்துவிடுவோம்.

இயற்கை நமக்களித்த அதிசயங்களில் ஒன்று விலங்குகளின் கழிவுகள் மண்ணுக்கும், மரத்துக்கும் உரமாக இருப்பதுதான். இதை ஆதி மனிதன் தெரிந்தே வைத்துள்ளான். வழி, வழியாக விவசாயம் செய்து வரும் மக்களுக்கும் இது குடும்பப் பாரம்பரியமாகத் தெரிந்த விஷயம்தான்.

ஒரு நிலத்தில் அறுவடை முடிந்து விளைச்சலை அறுத்தெடுத்த பின்பு, நிலம் சும்மா இருக்கும் நேரத்தில் இதுபோல் ‘ஆட்டுக் கிடை’ போடும் ‘கீதாரி’களை அழைத்து வருவார்கள். அவர்கள் 40, 50 ஆடுகளை மொத்தமாக அழைத்து வந்து அந்த நிலத்திலேயே குடிசை போட்டுத் தங்குவார்கள்.

அந்த நேரத்தில் அவர்களுடைய ஆடுகள் இடும் ‘புழுக்கை’ என்னும் கழிவுகள்தான் அந்த நிலத்திற்குக் கிடைக்கும் உரம். அவைகள் நாளாக.. நாளாக.. அதே மண்ணில் விழந்து உருண்டு, வெயிலில் காய்ந்து, மழையில் தேய்ந்து மண்ணுக்குள் மண்ணாக மக்கி உரமாகி.. அடுத்த விளைச்சலுக்கு அந்த நிலம் சக்தி பெற்று தயாராகி நிற்கிறது.

இதற்காக அந்தக் ‘கீதாரி’களுக்கு நிலத்தின் உரிமையாளர் சன்மானம் கொடுத்து அனுப்புவார். ஒரு இடத்தில் வேலை முடிந்ததும் அடுத்த ஊரைத் தேடிச் செல்வார்கள் ‘கீதாரி’கள். இது இவர்களது குடும்பத் தொழில்.

அப்படியொரு ‘ஆட்டுக் கிடை’ போடும் ‘கீதாரி’யின் குடும்பம்தான் நமது கதாநாயகனான மாயனின் குடும்பம். இவரது அப்பா அழகுவும், அம்மாவும் ராமநாதபுரத்துக்காரர்கள். அங்கே விவசாயம் இல்லாமல் மாவட்டமே காய்ந்து போயிருக்க.. பிழைப்புக்கு வழி தேடி தேவகோட்டை பகுதிக்கு ஆட்டுக் கிடை போட வருகிறார்கள்.

வந்தவர்களை இவர்களது உறவினரான நாயகி செம்பொண்ணு என்னும் சத்யகலாவின் தந்தை வரவேற்கிறார். தனது ஊரில் அது போன்று நிலம் தற்போது இல்லை என்பதால் பக்கத்து ஊர் தலையாரியின் நிலத்திற்கு இப்போது ‘கிடை’ தேவையாய் இருப்பதால் சொல்லி, அவரிடத்தில் அழைத்து வருகிறார்.

தலையாரியும் இதற்கு ஒத்துக் கொள்ள.. அவருடைய நிலத்தில் ‘கிடை’ போடுவதற்காக ஆடுகளை ‘பட்டி’யில் அடைத்து வைக்கிறார் மாயனின் அப்பா. பக்கத்திலேயே அவர்களும் குடிசை போட்டு தங்கிக் கொள்கிறார்கள்.

தலையாரியின் நிலத்தில் ‘கிடை’ வேலை முடிந்த பின்பு, அதற்கான கூலியைக் கேட்கிறார்கள் மாயனும், அவரது அப்பாவும். தலையாரி தர மறுக்கிறார். இதனால் கோபமடையும் அழகு, ‘அந்த நிலம் மலடாகப் போகட்டும்’ என்றெண்ணி அவர்களுடைய வழக்கப்படி பச்சைக் கலயத்தை அந்த நிலத்தில் புதைத்து பூஜையிட முயல்கிறார்.

இதை பார்த்து கோபமாகும் தலையாரி மாயனையும், அழகையும் அடித்து, உதைத்துக் கட்டிப் போட்டு தனது மாட்டுக் கொட்டகையில் இருவரையும் அடைத்து வைக்கிறார்.

அன்றைய இரவில் தலையாரியின் வீட்டுக்கு மாட்டை திருட வரும் மூன்று திருடர்கள், மாயனையும், அவரது தந்தையையும் காப்பாற்றுகிறார்கள். இதனால் அவர்கள் மீது பாசம் கொள்கிறான் மாயன்.

தங்களைக் காப்பாற்றியதற்காக ஒரு ஆட்டைத் தூக்கிக் கொண்டு வந்து திருடர்களிடத்தில் கொடுத்து.. அதை வெட்டி, சமைத்து அவர்களுக்கே விருந்து வைக்கிறான் மாயன். இதனால் மகிழ்ச்சியடையும் திருடர்கள், மாயனை தங்களது நண்பராக்கிக் கொள்கிறார்கள்.

இந்தத் திருடர்களின் நட்பு கள்ளு குடிப்பதில் போய் நிற்க.. மாயன் சில நாட்களிலேயே குடிக்கு அடிமையாகிறான். இவனை நல்வழிப்படுத்த துடிக்கும் இவனது பெற்றோர்கள் மாயனுக்கு திருமணம் செய்து வைத்தால், அவன் திருந்திவிடுவான் என்று நினைக்கிறார்கள்.

இதற்காக பக்கத்து ஊரில் இருக்கும் செம்பொண்ணுவின் பெற்றோரிடம் சென்று பெண் கேட்கிறார் மாயனின் தந்தை. செம்பொண்ணுவின் அப்பாவோ ‘மாயன் ஒரு குடிகாரன். அவனுக்கு என் பெண்ணைத் தர மாட்டேன்’ என்று சொல்லி மறுக்கிறார். ஆனால் செம்பொண்ணு இந்தக் கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்கிறார்.

திருமண நாளன்றே மாயன் குடித்துவிட்டு மயங்கி விழுந்து கிடக்க.. செம்பொண்ணுவுக்கு தங்களுடைய பாரம்பரிய முறைப்படி மாயனின் அம்மாவே, தாலி கட்டி மருமகளாக்கிக் கொள்கிறார்.

நாட்களும் நகர்ந்த நிலையில் ஒரு நாள் பக்கத்து ஊரில் இருக்கும் துபாய்காரரின் வீட்டில் திருடப் போன அந்த மூன்று திருடர்களின் திருட்டு முயற்சி தோல்வியடைந்து ஓடி வருகிறார்கள்.

வந்தவர்கள் மாயனின் ஆட்டுக் கிடையில் ஆடுகளுக்கிடையே பதுங்கிக் கொள்கிறார்கள். அவர்களை ஒரு கூட்டம் துரத்திக் கொண்டு வர. வந்தவர்களிடம் திருடர்களை காட்டிக் கொடுக்கிறாள் செம்பொண்ணு.

இதனால் போலீஸிடம் பிடிபட்டு அடி, மிதிபட்டு.. கை, கால் உடைந்து போய் ஜெயிலுக்குப் போகிறார்கள் திருடர்கள். சில மாதங்கள் கழித்து மூன்று திருடர்களும் ஜாமீனில் வெளியில் வருகிறார்கள்  வந்தவர்களுக்கு ஒரேயொரு லட்சியம்தான்.. தங்களைக் காட்டிக் கொடுத்த செம்பொண்ணை கொலை செய்ய வேண்டும் என்பதுதான் அது.

ஆனால் இங்கு வந்த பார்த்தபோது அந்த செம்பொண்ணு இப்போது தங்களுடைய நண்பனான மாயனின் மனைவியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியாகிறார்கள் திருடர்கள். இதையடுத்து நடப்பது என்ன என்பதுதான் இந்த கிராமத்துக் காவியத்தின் அழகுக் கதை.

1980-களில் நடக்கும் கதையை மிக, மிக எளிமையாக, அதே சமயம் வலிமையான திரைக்கதையில், அழுத்தமான நடிப்பில், சிறப்பான இயக்கத்தில் கொடுத்திருக்கும் இயக்குநர் மாரிமுத்துவுக்கு நமது பாராட்டுகள் உரித்தாகட்டும்

கோடைக் கால வெயிலில் நாம் தகித்துக் கொண்டிருக்கும்போது வராது வந்த மாமழைபோல் இத்திரைப்படம் இந்தச் சூழலில் திரைக்கு வந்திருக்கிறது.

“வறட்சியில் காய்ந்து கிடக்கும் தமிழ்ச் சினிமா என்னும் நிலத்தை ஈரமாக்கி, உரமாக்கி.. சிறந்த படைப்புகளையே நடவு செய்யுங்கள்.. அறுவடையை வெல்வீர்கள்” என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறது இத்திரைப்படம்.

அழகுவைத் தவிர மற்ற அனைவருமே தமிழ்ச் சினிமாவிற்குப் புதியவர்கள்தான். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான நாயகன் ஷமன் மித்ருவுக்கு இதுதான் முதல் திரைப்படம். ஆனால் படத்தில் அப்படி தெரியவில்லை. மாயன் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் ஷமன் மித்ரு.

மிக எளிய மனிதனை வெளிக்காட்டும் அதே குணத்தோடுதான் திருடர்களைப் பார்க்க ஆடும், கையுமாய் போய் நிற்கிறார். கள்ளைக் குடிக்கத் துவங்கி தான் ஒரு குடிகாரனாக ஆன பின்பு அதை நிறுத்த முடியாமல் அவர் தடுமாறும் காட்சிகளிலும், நல்ல நட்புக்கு ஏங்கும் நண்பனாக திருடர்களின் உண்மைத்தனம் தெரியாமல் அப்பாவியாய் அவர் பேசும் காட்சிகளிலெல்லாம் மாயன் தான் ஒரு நிஜமான அப்பாவி என்பதையே திரையில் காட்டுகிறார்.

தனக்கு மனைவியாய் வந்திருக்கும் செம்பொண்ணுவின் அதட்டல், உருட்டல் பேச்சுக்களுக்கு அடிபணிந்து போவதைத் தவிர, தனக்கு வேறு வழியில்லை என்பதைப் போல இவர் நடந்து கொள்ளும்விதம் இதமான காதலைச் சொல்கிறது.

இந்தப் படத்தில் இருக்கும் மாயன், செம்பொண்ணுவின் காதலை தமிழ்ச் சினிமாவுலகம் இனிமேல் பல காலம் பேசப் போகிறது.

கிளைமாக்ஸ் காட்சியில் தன்னுடைய கோபத்தை ஆக்ரோஷமாக காட்டும்விதத்தில் பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார் ஷமன் மித்ரு. கிராமத்து நாயகன் கதைக்குப் பொருத்தமான இன்னொரு நாயகன் கிடைத்துவிட்டார் என்றே சொல்லலாம்.

கிளைமாக்ஸ் காட்சியில் நாயகன் திருட்டு நண்பர்களை அடித்து உதைக்கிறார். ஆனால் கொலை செய்ய முயன்று கடைசி நொடியில் மனம் மாறி அப்படியேவிட்டுவிட்டுப் போகிறார். ஆனால் அவருக்குப் பின்னால் வரும் துபாய்காரர் அவர்களுக்கு விஷத்தைக் கொடுத்து, அவர்கள் சாகும்வரை அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்கிறார்.

ஆக.. ஒரு படிப்பறிவில்லாத.. ஏழை.. விவசாய கூலிக்குத் தெரிந்த மனித நேயம்கூட நன்கு படித்த, பணக்காரன் ஒருவனுக்கு இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இந்தக் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்காகவே, இயக்குநருக்கு மேலும் ஒரு பாராட்டை சமர்ப்பிக்கிறோம்.

படத்தின் மிகப் பெரிய இன்னொரு பலம் நாயகியாக நடித்திருக்கும் சத்யகலாதான். கிராமத்து முகத்தில்.. அவரது அழகிய உருண்டை கண்களே பல காட்சிகளில் நடிப்பைக் கொட்டியிருக்கிறது.

அவரின் பேச்சு அத்தனை கம்பீரம். வட்டார வழக்கு மொழியில் ஒரு சொல்லைக்கூட முழுங்காமல் அழுத்தம் திருத்தமாய் உச்சரிக்கும் பாங்கிலேயே நம்மை பெரிதும் கவர்ந்திழுக்கிறார் சத்யகலா.

பேசி முடிக்க வந்த இடத்திலும் கள்ளு குடித்து குடிகாரனாய் வந்திருக்கும் தன் காதலனை குளிப்பாட்டி, சோறூட்டி, ஒரு வழி செய்து அனுப்பி வைக்கும் காட்சியில் ஒரு உண்மையான காதலியின், காதலைப் பார்க்க முடிகிறது.

இதேபோல் முதல் இரவுக்கு நாள் பார்த்து சொல்ல.. அதை இரண்டு நாட்கள் கழித்து தானே வைத்துக் கொள்ளும் பக்குவம் உள்ள பெண்ணாகவும் தன்னைக் காட்டுவதில் சத்யகலாவிடம் ஒரு கம்பீரமும் தெரிகிறது..

கூடலுக்கு அழைக்கும் கணவனிடம் குழைவுடனும், அரைகுறை ஆசையுடனும் அழைத்துப் பேசிவிட்டு கண்டிப்புடன் நடந்து கொள்ளும் மனைவி சத்யகலா நிச்சயம் நிறைய ரசிகர்களை பெருமூச்சுவிட விடுகிறார் என்பதே உண்மை.

அவ்வப்போது இந்தத் தம்பதிகள் கொடுத்துக் கொள்ளும் உதட்டு முத்தம் நிச்சயமாக காமத்தைச் சேர்ந்தது இல்லை. காதலைச் சேர்ந்தது..! இதனை இந்த அளவுக்கு ஆபாசமில்லாமல் படமாக்கிய இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

திருடர்களாக வரும் மூன்று பேருமே சினிமாவுக்குப் புதுமுகங்களாக வருகிறார்கள். அதிலும் அவர்களின் பெயர்களைக்கூட வித்தியாசமான கிராமத்து பெயர்களாக வைத்திருக்கிறார்கள். ‘சோத்து மூட்டை’ என்கிற பெயருடன் எப்போதும் உணவைப் பற்றியே பேசி வரும் திருடனின் பேச்சுக்களும், நடத்தையும் அவ்வப்போது சின்ன சிரிப்பலையை சிந்த வைக்கிறது.

ஊமையனாக நடித்திருப்பவர் மலத்தைக் கழுவிய கையிலேயே சாப்பிடவும் வேண்டியிருக்கே என்றெண்ணி சிறையில் அழுது, வெறியாகும் காட்சியில் கொஞ்சம் பரிதாபமும் பட வைக்கிறார். இவரே கொலை வெறியோடு செம்பொண்ணை கொலை செய்யத் துடிக்கும் நடிப்பினால்… வில்லன்களில் முதலிடம் என்கிற தகுதியைப் பெறுகிறார்.

சண்டை கலைஞராக திரையுலகத்தில் அறிமுகமாகி பின்பு நடிகராகி இப்போதும் தொலைக்காட்சி சீரியல்களில் குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அழகு, மாயனின் அப்பாவாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

அந்த வயதுக்கே உரிய பக்குவமான குணத்துடனும், தடுமாற்றத்துடனான நடையுடனும்.. மகன் மீது கொண்ட பாசத்தைக் காட்ட முடியாத தகப்பனாகவும் தனது நடிப்பை காண்பித்திருக்கிறார். இவருடைய மனைவி “இன்னும் எத்தனை தடவைதான் இதே எம்.ஜி.ஆர். படத்துக்குப் போறது?” என்று அலுத்தபடியே சொல்லும் ஒரு காட்சியில் வெடிச் சிரிப்பை சிரிக்க வைத்திருக்கிறார்.

இதேபோல் மற்றைய கிராமத்துக் கதாபாத்திரங்கள்கூட மிக இயல்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். திருடர்களின் கையை உடைக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிள்களும்கூட மேதாவித்தனமான நடிப்பைக் காட்டாமல் நிஜ போலீஸ் போலவே நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் இன்னொரு பலம் படத்தின் வசனங்கள்தான்.. தென் மாவட்டத்தில் கிராமத்தில் சாதாரணமாக புழங்கும் வட்டார வழக்கு மொழியினையே அனைவரும் பேசியிருக்கிறார்கள். எதுவும் புரியாத அளவுக்கு இல்லை என்றாலும் அதை உச்சரிக்கும் முறையில்கூட ரசிக்க வைத்திருக்கிறது.

சின்ன பட்ஜெட் படம் என்கிற உணர்வுகூட வராமல் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்திற்கான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் குமார் ஸ்ரீதர். தேவகோட்டை ரஸ்தாவின் பரப்பையும், ஊர் அழகையும், காடு, மேடுகளையும், வயல் வெளிகளையும் அழகாகக் காட்டியிருக்கிறார்கள். திருடர்களை சந்திக்கும் அந்த மலைப் பகுதி கச்சிதமான தேர்வாக அமைந்திருக்கிறது.

பாடலுக்கு ஒரு இசையமைப்பாளர். பின்னணி இசைக்கு இன்னொரு இசையமைப்பாளர் என்கிற இன்றைய டிரெண்ட்டுக்கேற்றாற்போல் இசையமைப்பாளர் வேத் ஷங்கர் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். சினேகனின் எழுத்தில், ‘சவுக்காரம்’ பாடலின் வரிகள் அனைத்தும் கேட்கும்வகையில் இசை ஒலிக்கிறது.

பின்னணி இசையில் தேவைப்படும் இடத்தில் சோகத்தைப் பிழிந்தெடுத்து நம்மையும் சோகத்திற்குள்ளாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜித்தன் ரோஷன்.

கலை இயக்குநரின் குழுவினர் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் போல தெரிகிறது.

வயல்வெளிகளின் கதை, ஆடு கிடை போடும் தொழில், அந்தக் கால திருடர்கள், அவர்களின் குடி, சாப்பாடு மீதான பிரியம்.. பழைய காலத்து வீடு, பழைய அம்பாசிடர் கார், பழைய போலீஸ் ஸ்டேஷன், பழைய நீதிமன்றம், பழைய சிறைச்சாலை.. என்று 1980-களின் பின்னணியை கலை இயக்குநர் கொஞ்சமும் சொதப்பாமல் கொண்டு வந்திருக்கிறார்.

படத்தில் புளியம் பழத்தின் ஓட்டை உடைத்து அதில் ஆட்டுப் பாலை பீய்ச்சி, அதனை நாயகிக்கு நாயகன் தரும் காட்சி ஒன்று இருக்கிறது. ஆனால் படப்பிடிப்பு நடந்த நேரம், புளியம்பழ சீசன் இல்லாத நேரம். ஆனால் ஓட்டோடு சேர்ந்த புளியம்பழம் கண்டிப்பாக வேண்டும் என்று இயக்குநர் உறுதியாய் இருந்திருக்கிறார்.  

கடைசியில் நாலாபுறமும் அலைந்து திரிந்து எங்கோ ஒரு கிராமத்திலிருந்து கொண்டு புளியம்பழத்தை வாங்கி வந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் அந்தக் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது.

அதே போல, கதாநாயகி நாவற்பழ பிரியை. இதனால் நாவல் மரத்தில் ஏறி நாவற்பழத்தை நாயகி உலுக்குவதைப் போல காட்சியை எழுதியிருக்கிறார் இயக்குநர். ஆனால் அப்போது நாவற்பழ சீசன் இல்லாததால், சில மாதங்கள் காத்திருந்து சீசனில் நாவற்பழம் பிறந்தவுடன் இந்தக் காட்சியை படமாக்கியிருக்கிறார்கள். இந்த அர்ப்பணிப்புத் தன்மைக்காகவே இயக்குநர் குழுவுக்கு மேலும் ஒரு ஷொட்டு.

இடையர் இன மக்களின் பழக்க வழக்கங்கள்.. அவர்களுக்குள் இருக்கும் அன்பு, பாசம், நேசம், குடும்ப உறவுகள், நட்பு, காதல், துரோகம் என்று அனைத்தையும் மிக அழகாக ஒரே படத்தில், ஒரே கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

கிராமத்து வாழ்க்கை.. குடிசை வீட்டு வாசம்.. மண்ணின் மணம், ஆடுகளும் அவைகளின் புழுக்கைகளும்.. நமது இன்றைய தலைமுறை பார்த்திருக்காத ‘தொரட்டி’, அழகான மலைப் பாறை, கிராமத்து அழகியாய் நம் மனதிற்குள் இடம் பிடித்திருக்கும் நாயகி.. தமிழக வரலாற்றில் மறைக்கப்பட்ட, மறைந்து போன ‘கீதாரிகள்’ என்னும் மனிதர்களின் வாழ்க்கையை எடுத்துச் சொன்னவிதத்தில் இந்தத் ‘தொரட்டி’ திரைப்படம் நமது உணர்வுகளைத் தொட்டுவிட்டது.

சின்ன பட்ஜெட்டில் உண்மையான கதையோடு, சிறப்பான திரைக்கதையோடு, சிறந்த நடிகர்களின் நடிப்பினால்… அழுத்தமான இயக்கத்தினால் வந்திருக்கும்  இந்தத் ‘தொரட்டி’ திரைப்படம், இந்தாண்டுக்கான சிறந்த படங்களுக்கான போட்டியிலும் இடம் பிடித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

‘தொரட்டி’ நமது முன்னோர்களின் வாழ்க்கைக் கதை. பார்த்தே தீர வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று.

மிஸ் பண்ணிராதீங்க மக்களே..!

Our Score