“படைப்பாளிகள் சென்சாருக்குப் பயப்படக் கூடாது…” – நடிகர் எஸ்.வி.சேகர் அறிவுரை..!

“படைப்பாளிகள் சென்சாருக்குப் பயப்படக் கூடாது…” – நடிகர் எஸ்.வி.சேகர் அறிவுரை..!

கே.3 சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மு.பிரதாப் முரளி இயக்கியுள்ள படம் ‘திட்டிவாசல்’. நாசர், மகேந்திரன், தனுஷெட்டி, அஜய்ரத்னம் நடித்துள்ளனர்.

1-16

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் பாடல்களின் குறுந்தகடை வெளியிட, ‘யூ டிவி’ தனஞ்ஜெயன், நடிகர் எஸ்.வி.சேகர்  ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

s-vee-sekhar-1

இந்த விழாவில் எஸ்.வி.சேகர் பேசும்போது,  “இந்தப் படத்தில் நடித்துள்ள மகேந்திரன் என்னை அழைத்ததால்தான் இங்கே நான் வந்திருக்கிறேன். சின்ன வயதிலிருந்தே எனக்கு மகேந்திரனை தெரியும். குழந்தை நட்சத்திமாக நடிக்கும்போதே ஒரே டேக்கில் ஓகே வாங்குவான். சிறுவயதில் நடித்தவன் பிறகு இடைவெளிகூடவிடாமல் குறும்படம் என்று ஏதாவது ஒரு வகையில் இதே சினிமா துறையில்தான் இருந்திருக்கிறான்.  சினிமாவை விட்டு எங்கும் வெளியே செல்லவில்லை. அவன்  திறமைக்கு இன்னும் பல உயரம் செல்வான் என்று நினைக்கிறேன்.

நான் ஒரு விஷயம் எப்போதும் சொல்வேன். பிறரிடமிருந்து வாழ்த்துகளை வாங்க முடியாவிட்டாலும் சாபம் வாங்காமல் இருக்க வேண்டும். சினிமாவில் எல்லாருக்கும் எல்லாரும் போட்டிதான். ஆனால் யாரும் எதிரியில்லை. நாசரை எல்லாருக்கும் பிடிக்கும் என்றார்கள். அதனால்தான் அவர்  யாராலும் நிரப்ப முடியாத இடத்தை நிரப்பியிருக்கிறார். எல்லாருக்கும் பிடித்தவராக இருப்பது மிகவும் சிரமம்.

இந்தத் தயாரிப்பாளருக்கு வாழ்த்து சொல்லும்போதே இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். தயவு செய்து படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்துவிட்டு சென்சாருக்குப் போகாதீர்கள். முதலில் சென்சாரை முடித்துவிட்டு பின்பு வெளியீட்டுக்கு நாள் குறியுங்கள். சென்சார் போர்டு உறுப்பினர் என்கிற முறையில்  புதிய தயாரிப்பாளர்களுக்கு நான் சொல்ல வேண்டிய விஷயம் இதுதான்.

அப்படி கடைசி நேரத்தில் சென்சாருக்கு போய்,  நேர நெருக்கடிக்கு ஆளாகும்போதுதான் சென்சார் அலுவலகத்தில் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் வேறு வழியில்லாமல் தலையாட்ட வேண்டி வரும்.

படத்தின் கதை விவாதம், படப்பிடிப்புக்கு  எல்லாம் பல மாதங்கள் ஒதுக்குகிறீர்கள். ஆனால் சென்சார் சான்றிதழ் மட்டும் உடனே வேண்டுமென்றால் எப்படி? சென்சாருக்கும் ஒரு மாதம் ஒதுக்குங்கள்.

இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் சென்சார் போர்டுக்கு பயப்படக் கூடாது. நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். சட்டப்படிதானே படம் எடுத்திருக்கிறோம்.. பிறகெதற்கு பயம்..? இது நம் தயாரிப்பு. இதற்காக அவர்களிடம் கெஞ்சக் கூடாது. தைரியமாகப் பேச வேண்டும். உங்கள் படைப்பு மீது உங்களுக்கே நம்பிக்கை வேண்டும். இப்படித்தான் எடுக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லக் கூடாது.

நாம் யாரோடும் போட்டி போடக் கூடாது. போட்ட பட்ஜெட்டுக்குள் படத்தை எடுங்கள். ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு ஒரு மணி நேரத்துக்கு 30 ஆயிரம் செலவாகிறது. இதை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும். படத்துக்காக செய்த செலவு, படத்தில் தெரிய வேண்டும். அதுதான் நியாயம். இந்தப் படத்தில் செய்த செலவுகள் காட்டப்பட்ட டிரெயிலரிலும், பாடல் காட்சிகளிலும் தெரிகின்றன.

இன்று படமெடுப்பது சுலபம். அதை வியாபாரம் செய்வது சிரமம். சின்ன படங்களுக்கெல்லாம் படம் வெளியாகும் முதல் நாளே டி.வி.டி. கொண்டு வரலாம். அதன் மூலம் வரும் வருமானத்தை ஏன் இழக்க வேண்டும்..?  இதைச் செய்யாததால் வேறு யாரோ நம்மை வைத்து சம்பாதிக்கிறார்கள்…” என்று கூறி படக் குழுவினரை வாழ்த்தினார்.

Our Score