full screen background image

“அவன் இவன்’ படத்திற்குப் பிறகு இதில்தான் அழுத்தமான கிளைமாக்ஸ் காட்சி” – நடிகர் விஷாலின் ‘லத்தி’ பட பேட்டி

“அவன் இவன்’ படத்திற்குப் பிறகு இதில்தான் அழுத்தமான கிளைமாக்ஸ் காட்சி” – நடிகர் விஷாலின் ‘லத்தி’ பட பேட்டி

“அவன் இவன் படத்திற்குப் பிறகு ‘லத்தி’ படத்தில்தான் அழுத்தமான கிளைமாக்ஸ் காட்சி அமைந்துள்ளது” என்கிறார் அந்தப் படத்தின் நாயகனான விஷால்.

‘லத்தி’ படம் குறித்து நடிகர் விஷால் பேசும்போது, “நான் ஏற்கெனவே ‘சத்யம்’ திரைப்படத்தில் சிக்ஸ் பேக் வைத்துக் கொண்டு விரைப்பாக நடித்து விட்டேன். ஆனால், இந்த லத்தி’ படத்தில் அதற்கு எதிரான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அது சவாலாக இருந்ததால்தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

‘லத்தி என்பது கவர்ச்சிகரமான தலைப்பு என்பதால் அனைத்து மொழிகளிலுமே படத்தின் பெயரை ‘லத்தி’ என்றே வைத்து விட்டோம். அதேபோல ‘லத்தி’ என்பது வெறும் பெயர் மட்டுமல்ல; படத்தில் அதுவும் ஒரு கதாபாத்திரம். அந்த ‘லத்தி’தான் ஒரு சூழ்நிலையில் நாயகனை சிக்கலில் கொண்டு வந்து நிறுத்தும். பின்பு அந்த ‘லத்தி’ மூலமாக அவன் எப்படி அதிலிருந்து வெளியில் வருகிறான் என்பதுதான் கதை.

ஒரு சராசரி மனிதன் தன் குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது, அதுவரை இருந்த பேச்சு நடை என்று எல்லாம் மாறி கதாநாயகனாகி எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் இத்திரைப்படம்.

பொதுவாக அம்மா-பையன் சென்டிமென்ட் படங்கள்தான் அதிகம் இருக்கும். இந்த படத்தில் அப்பா-பையனுக்கு இருக்கும் சென்டிமென்ட் காட்சிகள் படம் முழுவதுமே இருக்கும்.

இந்தப் படத்திற்கான 143 நாட்கள் படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் அடிபட்டுதான் நடித்திருக்கிறேன். இது போன்று இன்னொரு படத்தில் பணியாற்றுவேனா என்று தெரியவில்லை.

என்னுடைய 18 வருட கால சினிமா பயணத்தில் பீட்டர் ஹெயின் மாஸ்டர் போல் ஒரு ஸ்டண்ட் இயக்குநரை நான் பார்த்ததில்லை. அவர் பாதுகாப்பைத்தான் முதலில் பார்ப்பார். அவருடைய பணியை அர்ப்பணிப்போடு செய்வார். ஒவ்வொரு காட்சி முடிந்ததும். அவரை நான் பார்ப்பேன். அவர் உற்சாகமடைந்தால்தான் எனக்கு திருப்தியாக இருக்கும்.

“ஒரு காட்சியில் 50 பேர் உங்களை சுற்றி அடிக்க வருவார்கள். நீங்கள் எப்படி உங்களை காப்பாற்றிக் கொள்வீர்கள்?” என்று கேட்டுவிட்டு என் விருப்பத்திற்கு அந்தக் காட்சியை விட்டுவிட்டார். அந்த சவால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், என்னுடன் சண்டையிட்ட வீரர்களுக்கு நிஜமாகவே அடி விழுந்தது. காட்சி முடிந்ததும் ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்டேன்.

இப்படத்தின் 45 நிமிட சண்டைக் காட்சிகளுக்காக இடம் தேடிக் கொண்டிருந்தோம். நிறைய இடத்தில் தேடி இறுதியாக ஹைதராபாத்தில் பீட்டர் ஹெயின் மாஸ்டர்தான் கண்டுபிடித்தார். அந்த கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்து வெடித்த பின் படப்பிடிப்பு நடத்திவிட்டு, மறுநாள் உரிமையாளர் வருவதற்குள் சுத்தம் செய்து வைத்தோம்.

‘அவன் இவன்’ படத்திற்கு பிறகு இந்த படத்திலும் இறுதி காட்சியில் ஆறு நிமிடங்கள் சவாலாக இருந்தது. அந்த காட்சியை கூறிவிட்டு வசனத்திற்கான பேப்பரை டைரக்டர் கொடுத்தார். ஆனால் நான் மறுத்து விட்டேன். “என்னை சுற்றிலும் 12 கேமராக்கள் வைத்துக் கொள்ளுங்கள். திரும்ப இந்த காட்சியை நான் நடிக்க மாட்டேன்” என்று கூறினேன்.

தன் மகனுக்காக ஒரு அப்பா தன்னுடைய உணர்வை, உணர்ச்சியை எப்படி வெளிப்படுத்துவார் என்று மனதில் நிறுத்திக் கொண்டு அந்தக் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருக்கிறேன்.

கைதி’ படம் எப்படி முதலில் மன்சூர் அலிகானில் ஆரம்பித்து கார்த்தியில் முடிந்ததோ, அதுபோல இந்த படம் முதலில் சமுத்திரக்கனிக்குதான் எழுதப்பட்டது. சமுத்திரக்கனி நடித்திருந்தால் முருகானந்தம்’ என பெயரிடப்பட்டிருக்கும்.

ஹிந்தியில் என்னுடைய படம் வெளியானால் தமிழ் மொழிக்கு 50 மற்றும் ஹிந்தி மொழிக்கு 50 திரையரங்குகள் என்றுதான் கிடைக்கும். ஆனால் இந்தப் படத்தை அதிகாரப்பூர்வமாகவே தமிழில் வெளியிடுகிறார்கள். ஆகையால், சுமார் 450 திரையரங்குகளில் வெளியாகிறது.

மலையாளம் மற்றும் கன்னட மக்கள் எப்போதும் ஒரிஜினலைத்தான் விரும்புவார்கள். ஆகவே நாங்கள் அந்த மொழிகளில் டப்பிங் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை…” என்றார் நடிகர் விஷால்.

Our Score