“அரசுகள் நினைத்தால் திருட்டு வீடியோக்களை முற்றிலுமாக அழிக்க முடியும். இதற்காக பிரதமர் மோடியையும் சந்திப்பேன்..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் விஷால்.
இது குறித்து நடிகர் விஷால் பேசும்போது, “திருட்டு வீடியோவை அழிப்பதற்காக ஏழு பேர் கொண்ட குழு அமைத்து, ஆறு மாதங்கள் கடினமாக உழைத்து கண்டு பிடித்து வைத்துள்ளோம்.
ஒரு காட்சிக்கு 10 பேர் மட்டுமே வந்திருக்கும் நிலையில், இவர்கள் மொத்தமாக 50 டிக்கெட்டுகள் வாங்கிக் கொண்டு தியேட்டருக்குள் நுழைந்து நடுவில் ஸ்டாண்ட் வைத்து படம் பிடித்து வெளியிடுகிறார்கள். இப்போது யார் தளத்தில் முதலில் வெளியிடுவது என்று போட்டிகளே நடக்கிறது.
திருட்டு வீடியோ தளத்தை அழித்தால் அதே தளத்தை ஐபி முகவரியை மாற்றி வேறொரு பெயரில் புதிதாக தொடங்குகிறார்கள். இது இப்படியே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அதை யார் செய்கிறார்கள், அவர்களுடைய வீடு, குடும்பம் என்று மொத்த விபரமும் என்னிடம் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் கூகுள் வழிகாட்டியும் இருக்கிறது.
அரசாங்கம் நினைத்தால் அதை எளிதில் ஒழித்து விடலாம். ஏனென்றால், சைபர் கிரைமில் தொழில் நுட்பங்கள் இருக்கின்றது. அனைத்து தளங்களையும் முடக்குவதற்கு வாய்ப்பு இருக்கும்போது திருட்டு வீடியோ ஒளிபரப்பாகும் தளங்களை மட்டும் ஏன் அவர்களால் தடை செய்ய முடியவில்லை என்று தெரியவில்லை.
ஆனால், என்றாவது ஒரு நாள் பிரதமர் மோடி அவர்களை சந்தித்தால் இரண்டு விஷயங்களுக்காக அவரிடம் கோரிக்கை வைப்பேன். ஒன்று திருட்டு வீடியோ தளம் இன்னொன்று ஜி.எஸ்.டி.” என்றார் நடிகர் விஷால்.