வரும் ஏப்ரல் 14–ம் தேதி வெளிவர இருக்கும் படங்களில் முக்கியமானது லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘திருவின் குரல்’.
இந்தப் படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, நாயகியாக ஆத்மிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் அருள்நிதியின் அப்பாவாக இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் நடித்திருக்கிறார்.
அப்பா, மகன் உறவை போற்றும்விதத்தில் அமைந்துள்ள இந்தப் படத்திற்கு கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநரான ஹரிஷ் பிரபு. சாம்.சி.எஸ் இசையில் இந்தப் படத்தில் இருக்கும் அப்பா பாசத்தை விளக்கும் பாடல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பட வெளியீட்டை முன்னிட்டு இப்படத்தின் நாயகனான அருள்நிதி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது இந்த ‘திருவின் குரல்’ படம் பற்றி அவர் பேசும்போது, “எத்தனையோ படங்களில் நடித்தாலும், சில படங்கள் மட்டுமே நம் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். அது போன்ற படம்தான் இந்த ‘திருவின் குரல்’.
சாதாரண மக்கள் மருத்துவமனைகளுக்குச் சென்றால் என்னென்ன பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை இந்தப் படத்தில் மிக இயல்பாக காட்டியிருக்கிறார் இயக்குநர் ஹரிஷ் பிரபு.
அப்பா பாரதிராஜாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு பணியாற்றும் சிலருக்கும், படத்தில் பேச இயலாத, காது கேளாத மாற்றுத் திறனாளியாக நடித்திருக்கும் எனக்கும் இடையில் நடக்கும் ஈகோ யுத்தம்தான் இந்தப் படம்.
இந்தப் படத்தில் எனக்கு பேச்சுத் திறன், செவித் திறன் அளவு பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத் திறனாளி பாத்திரம். இதற்கு முன் இதே போன்று ராதா மோகன் இயக்கத்தில் ‘பிருந்தாவனம்’ படத்திலும் நடித்திருக்கிறேன்.
என்னுடைய கலைப் பயணத்தில் நான் மறக்க முடியாத ஒரு படம் என்றால் அது ‘பிருந்தாவனம்’ படம்தான். அதற்குப் பின் இந்தப் படத்தில்தான் எனக்கு அதே போன்ற சவாலான வேடம் கிடைத்திருக்கிறது.
‘பிருந்தாவன’த்தில் அந்தப் பாத்திரத்துக்கு நியாயம் செய்ய, சைகை மொழியை கற்றுக் கொண்டு அதற்கு ஏற்றவாறு நடித்திருந்தேன். ஆனால் இந்தப் படத்தில் அப்படி நடிக்கவில்லை. ஏனென்றால் நான் விஷயத்தை மற்றவர்களுக்குப் புரிய வைப்பதைவிட பிற பாத்திரங்கள் எனக்கு புரிய வைக்கும் விதத்தில்தான் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு மருத்துவமனையை மையமாக வைத்து அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் எனது. அப்பாவாக பாரதிராஜா சார் நடித்திருக்கிறார். அவருடன் நான் இணைந்து நடித்ததில் என் குடும்பத்தார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அதில் என் அப்பாவும் ஒருவர்.
பாரதிராஜா சாருடன் நடிக்கப் போகிறோம் என்றதும் முதலில் எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது. அவரைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தேன். ஆனாலும் படப்பிடிப்பில் ஒரு குழந்தையைப் போல அவர் இயல்பாக நடந்து கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது அவரிடம் மிகவும் இயல்பாக பழகிக் கொண்டிருந்தேன்.
ஒரு நாள் விளையாட்டாக “உங்களைப் பற்றி நிறைய நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் இயக்கும்போது சரியா நடிக்கலைன்னா அடிப்பீர்களாமே.? ஆனால், உங்களைப் பார்த்தால் அப்படியெல்லாம் தெரியவில்லை. பிறகு ஏன் உங்களைப் பற்றி எல்லோரும் அப்படி சொன்னார்கள் என்று தெரியவில்லை..!” என்றேன்.
உடனே அவர் இயக்குநரிடம் “நான் ஒரு காட்சியை இயக்குகிறேன்” என்று சொல்லி இயக்க ஆரம்பித்து விட்டார். அது ஒன்றும் அவ்வளவு கஷ்டமான காட்சி இல்லை. நானும், ஆத்மிகாவும் நடந்து வர வேண்டும். அவ்வளவுதான். ஆனால் அப்படி நடந்து வருவதற்கே பலமுறை கட் சொன்னவர், “உனக்கும் அவளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கிறது. உங்களுடைய உடல் மொழியும், முக பாவங்களும் சரியாக இல்லை..!” என்று மாற்றி மாற்றி எடுத்துக் கொண்டே இருந்தார். “ஐயோ போதும் சார்… தெரியாமல் கேட்டுவிட்டேன்..!” என்று நானே ஜகா வாங்கிக் கொண்டேன்.
அவரது இயக்கத்தில் நடிப்பது அத்தனை கஷ்டமாக இருக்கும் போலிருக்கிறது. ஆனாலும் பாரதிராஜா சாரிடம் நல்ல பையன் என்ற பெயரை நான் இந்தப் படத்தில் எடுத்திருக்கிறேன்.
ஆத்மிகா படத்தில் என் அத்தைப் பெண்ணாக நடித்திருக்கிறார். எங்களுடன், இந்த படத்தில் வில்லன்களாக நான்கு பேர் நடித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் என் உயரத்தில் ஒல்லியாக இருந்து நடிப்பில் மிரட்டி விட்டார்.
இந்தப் படத்தில் அப்பாக்களுக்காக வைரமுத்து எழுதியிருக்கும் பாடல் இப்போது பிரபலமாக இருக்கிறது. அந்தப் பாடல் குறித்து என் அப்பாவிடம் ஒரு முறை வைரமுத்து சிலாகித்து சொல்லியிருக்கிறார்.
‘வம்சம்’, ‘மௌனகுரு’, ‘பிருந்தாவனம்’ ஆகிய படங்களின் வரிசையில், எனது நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் படம் இது என்பதால், ரசிகர்களின் தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
‘வம்சம்’ 2-ம் பாகத்தில் நான் நடிக்க இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அறிமுக டைரக்டர் வெங்கி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன். அந்த படத்துக்கு பாண்டிராஜ் கதை, திரைக்கதை எழுதுகிறார். அது விவசாயம் சம்பந்தமான கதை.
தொடர்ந்து கவுதம் ராஜ் இயக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’, ‘டிமாண்டி காலனி-2’-ம் பாகம் மற்றும் அடங்க மறு இணை இயக்குனர் விஜய் இயக்கும் படம், இன்னாசி பாண்டியன் இயக்கும் படங்களிலும் நடிக்க இருக்கிறேன். எதிர்காலத்தில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்தால் நடிப்பேன்” என்றார்.












