நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீஸ் வழக்குப் பதிவு

நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீஸ் வழக்குப் பதிவு

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சிவக்குமார் மீது திருப்பதி திருமலை தேவஸ்தானம் கொடுத்த ஒரு புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சிவக்குமார் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஒரு மேடையில் பேசும்போது திருப்பதி கோவிலின் தற்போதைய நிலைமை குறித்து பேச்சுவாக்கில் குறிப்பிட்டிருந்தார்.

அந்தப் பேச்சில் “திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாதாரண பக்தர் ஒருவர் 48 நாட்கள் விரதம் இருந்து காட்பாடியில் இருந்து திருமலைக்கு நடந்து செல்கிறார். செல்லும் வழியில் வெறும் பச்சைத் தண்ணீரை மட்டுமே அருந்துகிறார்.

திருமலையில் 8 ரவுண்டுகள் கொண்ட கியூவில் நின்று கடவுளை தரிசிக்க அந்தப் பக்தனுக்கு நான்கு நாட்கள் ஆகிறது. அப்போதும் ‘ஜருகண்டி’ ‘ஜருகண்டி’ என்று அடித்து விரட்டுகிறார்கள்.

அதுவே ஒரு பெரிய கோடீஸ்வரன் என்றால் மனைவி அல்லாத ஒரு பெண்ணை கூட்டிக் கொண்டு போய் அறை எடுத்து தங்கி குடித்து கும்மாளம் போட்டுவிட்டு அதிகாலையில் குளிக்காமல் கோவிலுக்கு சென்றாலும்கூட கும்பம் வைத்து வரவேற்கிறார்கள்” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசி இருந்தார்.

அவருடைய இந்தப் பேச்சு அப்போதைக்கு தமிழ் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தாலும் தமிழில் இருந்ததால் ஆந்திராவிலும், திருப்பதியும் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை.

ஆனால் இப்போது ஒரு வருடம் கழிந்த நிலையில் கடந்த ஏப்ரல் 26-ம் தேதியன்று தமிழ் மாயன் என்பவர் திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு இ-மெயில் மூலமாக சிவக்குமார் பேசியதன் வீடியோவை அனுப்பி வைத்து இது குறித்து புகார் அளித்துள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்திய திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் பிரிவின் சார்பில் வெங்கட ராமப்பா என்பவர் நடிகர் சிவக்குமார் திருப்பதி கோவில் நிர்வாகத்தின் மீது அபாண்டமாக பழி சுமத்தி பேசியிருப்பதாக கடந்த ஏப்ரல் 29-ம் தேதியன்று சிவக்குமார் மீது திருமலை-2 போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் கீழ் திருமலை-2 போலீஸ் ஸ்டேஷனில் நடிகர் சிவக்குமார் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Our Score