மோகன்லால், பாலச்சந்திர மேனன், சுரேஷ்கோபி போன்ற முன்னணி மலையாள நட்சத்திரங்களை இயக்கியதோடு தன்னுடைய முதல் படமான ஷபலம் திரைப்படத்தின் மூலம் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும் பெற்றவர் மலையாளப் பட இயக்குநர் அசோக் ஆர்.நாத். இவர் இப்போது நேரடி தமிழில் ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தின் பெயர் திருந்துடா காதல் திருடா. இது இவரது 6-வது படமாகும்.
அரபு நாடுகளான துபாய், ஷார்ஜா, அலைன், ராசல்கைமா, அஜ்மான், உமல் குவைன், யூஜேரா போன்ற இடங்களில் 60 நாட்களிலும், தமிழகத்தில் திருவட்டாறு என்ற ஊரில் 10 நாட்களும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இந்தப் படத்தில் அதிகமானோர் புதுமுகங்கள்தான். ஆதில் இப்ராஹிம், சுதக்சனா ஜோடியாக நடிக்க.. ஜீபிநைநான், சஜீவ் பாஸ்கர், பிரவீன் இராமச்சந்திரன், கோப்ஸ், சூர்யபிரகாஷ், பெனல் டிசில்வா, மாஸ்டர் ஆதித்ய ஹரி, சுமிதா பாபு, ஷிக்கா ஹரிலால், பேபி டயானா நவமி, ரஷ்ய நாட்டு அழகி ஒல்காகோவல்ச்சக் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் கவுரவ நடிகர்களாக முகேஷும், கொச்சு பிரம்மன் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தை தயாரித்திருக்கும் நியூ டிவி நிறுவனம், மலையாளத்தில் பல சேனல்களில் மெகா தொடர்களை தயாரித்த அனுபவம் உள்ளது. பல மலையாளத் திரைப்படங்களையும் தயாரித்துள்ளது. படத்தின் தயாரிப்பாளரான சனல் தோட்டம், இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரும்கூட..
இந்தப் படத்தின் கதையைப் பற்றிச் சொல்லிய இயக்குநர், “இப்போது வளைகுடா நாடுகளில் வாழ்ந்து வரும் இந்திய மக்களில் தொழிலாளர்களின் நிலைமை மிகவும் பரிதாபமானது. அவர்களில் மூன்று தலைமுறையினரின் வாழ்க்கையை இதில் சொல்லியிருக்கிறோம். கூடவே காதலும் உண்டு.
காதல் வலிமையானது.. களங்கமின்றி நேர்மையாக அதில் வெற்ரி காண வேண்டும். அந்த வெற்றிக்காக ஒரு இளம் பெண் நடத்தும் வித்தியாசமான போராட்டம்தான் இந்தப் படம். இது மலையாளத்திலும் தயாராகி வருகிறது…” என்றார்.
ஒளிப்பதிவு : சணல் தோட்டம்
படத் தொகுப்பு : ராஜேஷ் மங்கலக்கல்
இசை : ரஞ்சித் மேலேபாட்
இணை தயாரிப்பு : சதீஷ் வெள்ளயாணி, சுஜீவ் பாஸ்கர்
தயாரிப்பு : சணல் தோட்டம், ஹரிகுமார் சக்காலில்
எழுத்து-இயக்கம் : அசோக் ஆர்.நாத்









