‘திருமணம் எனும் நிக்காஹ்’ படம் தயாராகி பல மாதங்களாகியும் வெளிவராமல் இருந்தது கண்டு கோடம்பாக்கத்தில் பல்வேறு வதந்திகள்.
ஆஸ்கர் பிலிம் ரவிச்சந்திரனின் தயாரிப்பில் ஜெய், நஸ்ரியா நஸீம் நடிப்பில் அனீஸ் இயக்கியிருக்கிறார். படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரன் பணப் பிரச்சினையில் சிக்கியிருப்பதாகவும், இதனால் படம் வெளிவர தடையிருப்பதாகவும், இன்னொரு பக்கம் முஸ்லீம் அமைப்புகள் இந்தப் படத்தை எதிர்ப்பதாகவும். அதனால் ஏற்பட்ட சிக்கலால்தான் வெளியிட முடியவில்லை என்றும் பல்வேறு பக்கங்களிலிருந்தும் கிசுகிசுக்கள் பறந்து வந்தன.
முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்புகளுக்காக படத்தினை அவர்களுக்கு திரையிட்டுக் காட்டியிருக்கிறார் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன். படத்தைப் பார்த்துவிட்டு ஒரு சிலர் ஓகே என்றாலும்.. வேறு சிலர் சொல்லணுமே என்பதற்காக சில காட்சிகளுக்கு ஆட்சேபணை தெரிவித்தார்களாம்.. ஆனாலும் அவர்களிடம் ரவிச்சந்திரன் நைச்சியமாகப் பேசி சமாளித்து அனுப்பிவிட்டிருக்கிறார்.
இப்போது இந்தப் படம் ரம்ஜான் பண்டிகையன்று வெளிவர வாய்ப்பிருப்பதாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இது :
“திருமணம் எனும் நிக்காஹ்’ எல்லோருக்கும் பொதுவான ஒரு படமாகும். இந்த திரைப்படம் யாரையும் புண்படுத்தவோ , காயபடுதவோ எடுக்கப்பட்ட படமல்ல. ஒவ்வொரு மதத்துக்குள்ளும் இருக்கும் கலாசார பெருமையை வெளிபடுத்தும் படம்தான் ‘திருமணம் எனும் நிக்காஹ்’
அனைவருக்குள்ளும் புரிதல் அவசியம் என்னும் கருத்தை வலியுறுத்தும் படமாகும். கணவன் மனைவிக்கிடையே ஆகட்டும், பிள்ளைகள் இடையே ஆகட்டும்,நண்பர்கள் இடையே ஆகட்டும் ,நம்முடன் பணிபுரியும் சகாக்கள் இடையே ஆகட்டும் , நம்மிடம் பணிபுரிகிறவர்கள் இடையே ஆகட்டும், எல்லோரிடமும் நாம் பரஸ்பரம் உறவை மேற்படுத்த ‘புரிதல்’ அவசியம். ‘திருமணம் எனும் நிக்காஹ்’ மதங்கள் இடையேகூட கலாசாரம் வாயிலாக புரிதல் அவசியம் என்பதை வலியுறுத்தும் படமாகும்.
இந்த படத்தை சூழ்ந்திருந்த பிரச்சனைகள் இப்போது முடிந்துவிட்டன. இஸ்லாமிய சகோதரர்கள் நோன்பு காலம் முடிந்த பின்னர் படத்தை கண்டு ரசிக்கும் வகையில் ரம்ஜான் பண்டிகை அன்றோ அல்லது அதற்கு பிறகோ ‘திருமணம் எனும் நிக்காஹ்’ வெளியாகும்…”
– இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
இந்தப் படம் ரிலீஸ் ஆவுறதுக்குள்ள படத்தோட ஹீரோயின் நஸ்ரியாவுக்கு ‘நிக்காஹ்’ நடந்திரும் போலிருக்கு..!