full screen background image

“ஆர்யா என் குடும்பத்துல ஒருத்தர்…” – நயன்தாராவின் பகிரங்க அறிவிப்பு..!

“ஆர்யா என் குடும்பத்துல ஒருத்தர்…” – நயன்தாராவின் பகிரங்க அறிவிப்பு..!

தமிழ்த் திரையுலகத்தின் இப்போதைய ஹீரோக்களை வயிறெரியச் செய்திருக்கிறது சத்யம் தியேட்டரில் இன்று நடந்த ‘அமரகாவியம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா..!

தமிழின் முன்னணி நடிகைகளான திரிஷா, அனுஷ்கா, நயன்தாரா மூவரிடமும் இருக்கும் ஒரேயொரு ஒற்றுமையான குணம். அவரவர் நடிக்கும் படங்களின் பிரமோஷன்களுக்கு வரவே கூடாது என்பதுதான்.. இத்தனை நல்ல மனம் படைத்த இந்த இதயங்களில் 2 பேர், இன்றைக்கு ஆர்யாவுக்காக வந்திருக்கிறார்களென்றால் ‘நாங்களெல்லாம் கேனையன்களா?’ என்று மனதிற்குள்ளேயே குமைந்து கொண்டிருக்கிறார்கள் சில நடிகர்கள்.

இந்தப் படத்தின் கதை ‘சத்யா’ படம் வெளிவந்த 1988-ம் ஆண்டில் நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இசை வெளியீட்டு விழாவின் அழைப்பிதழை 1988-ம் ஆண்டு வெளியான ‘பேசும் படம்’ பத்திரிகையைப் போலவே மிக அழகாக வடிவமைத்திருந்தனர்.

நயன்தாரா, த்ரிஷா மட்டுமல்ல.. தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களும், பிரபலங்களும் நிறைய பேர் இதில் கலந்து கொண்டனர். பாலா, பார்த்திபன், லிங்குசாமி, மகிழ்திருமேனி, விஷ்ணுவர்த்தன், ராஜுமுருகன், புஷ்கர் காயத்ரி, கண்ணன், ஜனநாதன், பிரபு சாலமன், ராஜேஷ், சுசீந்திரன் ஆகிய இயக்குநர்களும்… பூஜா, ரூபா மஞ்சரி, லேகா வாஷிங்டன், ரம்யா நம்பீசன் ஆகிய நடிகைகளும்… விஜய் ஆண்டனி, உதயநிதி ஸ்டாலின், விஷ்ணு விஷால், ஸ்ரீகாந்த், ’ஜித்தன்’ ரமேஷ், சாந்தனு, விக்ராந்த் உட்பட ஏராளமான நடிகர்களும், பார்வதி மேனன், மதன் கார்க்கி போன்ற பாடலாசிரியர்களும், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

2 பாடல் காட்சிகளும், டிரெயிலரும் திரையிடப்பட்டது. முழுக்க முழுக்க ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளது. பள்ளிப் பருவக் காதலைத்தான் டிரெயிலர் சொல்கிறது.. இதில் என்ன புதுமையிருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் ஒளிப்பதிவு அசத்தல்.. குருநாதர் ஜீவாவின் பெயரைச் சொல்ல இந்த சங்கர் ஒருவரே போதும் போலிருக்கிறது.

இதற்கடுத்து முக்கிய விருந்தினர்கள் மேடைக்கு வந்து வாழ்த்துரை வழங்கினார்கள்..

மேடையேறிய பல இயக்குநர்களும் ஆர்யாவை பற்றியே கிண்டலாகப் பேசியே நேரத்தைக் கடத்திவிட்டார்கள்.. ஜனநாதனும், லிங்குசாமியும் படத்தையும் பாராட்டிவிட்டு புதுமுக ஹீரோ சத்யாவுக்கு அட்வைஸும் செய்துவிட்டுப் போனார்கள்.

நடிகை பூஜாவை மேடைக்கு அழைத்தவுடன் வந்த வேகத்தில் ஆர்யாவின் இரு கன்னங்களிலும் முத்தம் கொடுத்து அசத்தினார்.

அவர் பேசும்போது, “ஆர்யா, இனிமையான இதயம் கொண்ட அற்புதமான மனிதர். இந்த விழாவுக்கு எல்லா கதாநாயகிகளும் வருகிறார்கள். நீயும் வரவேண்டும் என்று அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். உடம்பு சரியில்லை என்றாலும் பரவாயில்லை என்று காய்ச்சலுடன் இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன்.

ஆர்யா எனக்கு ஒரு நல்ல நண்பர். என்ன.. எல்லோர் கூடவும் கிசுகிசுவில் சிக்குவார். ஆனா அது உண்மையும்கூட. ஏன்னா பொண்ணுக்கிட்ட நல்லாவே கடலை போடுவார் ஆர்யா. 

ஆர்யாவுடன் பல கதாநாயகிகளை இணைந்து கிசுகிசு வருகிறது. நயன்தாரா, அனுஷ்காவுடன் என்னையும்கூட இணைத்து கிசுகிசு வந்திருக்கிறது. அதெல்லாம் உண்மைதான். அதற்கு காரணம், ஆர்யா ‘கடலை’ போடுவதுவதான். அதனால்தான் நாங்கள் எல்லோரும் அவரிடம் அன்பாக இருக்கிறோம்..’’ என்று கிண்டலாகச் சொல்லிவிட்டுப் போனார் நடிகை பூஜா.

மற்ற நடிகைகள் அலட்சியமாக ஆங்கிலத்தில் உரையாற்றிவிட்டுப் போக.. உப்புச் சப்பில்லாமல் போனது அவர்களது உரை..

பார்த்திபன் பேச வரும்போது கொஞ்சம் எதிர்பார்ப்பு கூடியிருந்தது. ஏனெனில் ‘இரண்டாம் உலகம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பார்த்திபன், ஆர்யாவின் ‘லிப்ட்.’ ‘பிக்கப்..’ ‘டிராப்…’ பற்றியெல்லாம் பேசி பரபரப்பை உண்டு செய்திருந்தார். இன்றைக்கும் அதையே பேசி ஞாபகப்படுத்தினார்.

‘கி.மு.416-ம் வருஷத்துல ஆர்யபட்டர்னு ஒரு கணித விஞ்ஞானி இருந்தார். அவர் ‘கணக்கு பண்றதுல’ பயங்கர கில்லாடி அவர். கணக்கு பண்றதுன்னா மேத்தமெட்டிக்ஸ்லன்னு சொல்ல வந்தேன். இந்தியால 1996-ல் ஆர்யபட்டான்னு ஒரு ராக்கெட் விட்டாங்க. அத்திட்டம் பெயிலராகி, அந்த ராக்கெட் பாதில விழுந்திருச்சு. ஆனா நம்ம ஆர்யா வைக்கிற குறி மட்டும் தப்பறதேயில்ல. எது வேணும்னு நினைச்சு குறி வைக்கிறாரோ, அதை அடைஞ்சுட்டுதான் மறுவேலை பார்ப்பார்.

போன வாரம் ‘பாஸ்ட் டிராக்’குன்னு ஒரு டிராவல்ஸ் கார்ல போயிக்கிட்டு இருந்தேன். அப்போ அந்த காரோட டிரைவர், ‘இது என்னோட சொந்த கார் சார். ஆனா பாஸ்ட் டிராக்ல அட்டாச் பண்ணிட்டேன். பிக்கப், டிராப் நிறைய கிடைக்கும்னுதான் அப்படி பண்ணினேன்…’ என்றார். ‘இல்லை… நீங்க சொல்றது ரொம்ப தப்பு.. பிக்கப் பண்றதுல ஆர்யாதான் ரொம்ப பாஸ்ட்டு..’ன்னு நான் சொன்னேன்..

282 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மிகப் பெரிய அந்தஸ்துடன் இருப்பவர்களால்கூட இது மாதிரி ஒரே நிகழ்ச்சில த்ரிஷாவையும், நயன்தாராவையும் ஒரே மேடையில்… குறிப்பா ஆடியோ பங்ஷனுக்கு கூட்டிட்டு வரவே முடியாது. உலகின் மிகப் பெரும் பணக்காரராக இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இப்போது அந்த வகையில், இந்த இடத்தில் உலகின் பெரும் பணக்காரராக ஆர்யா திகழ்கிறார்.

ஹீரோ சத்யாவுக்கு ஒரேயொரு சங்கடம் இருக்கு.. இவர்கூட நடிக்க ஹீரோயின்களே கிடைக்க மாட்டாங்க. அந்த அளவுக்கு எல்லா ஹீரோயின்களையும் வளைச்சுப் போட்டு வைச்சிருக்கார் ஆர்யா. கிட்டத்தட்ட எல்லோரும் சத்யாவிற்கு அண்ணி போலவே கிசுகிசுக்கப்பட்டவங்க.. பின்ன எப்படி சத்யாவிற்கு ஜோடியா நடிப்பாங்க..? ஆனாலும் அண்ணன் காட்டிய வழியை சத்யா பாலோ பண்ணுவாருன்னு நம்புறேன்.. அதன்படி நடந்து மற்ற ஹீரோக்களுக்கு ஹீரோயின்கள் கிடைக்காமல் செய்வார்ன்னு நம்புறேன்…” என்று சொல்லிவிட்டுப் போக ஆர்யா இதையும் பெருமிதமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

உதயநிதி ஸ்டாலின் மனதில் இருந்த கோபத்தை மறைத்துக் கொண்டு, “இந்த நாள் தமிழ் சினிமாவின் பொன்னான நாள். ஏன்னா இந்த விழாவுக்கு த்ரிஷாவும், நயன்தாராவும் வந்திருக்காங்க.. சில நடிகைகள் அவங்க நடிக்கிற படத்தோட பங்ஷன்கள்லேயே கலந்துக்கிறதில்ல.. ஆனா இங்க திரிஷாவும், நயன்தாராவும் வந்திருக்காங்கன்னா எல்லாம் ஆர்யாவுக்காகத்தான்..” என்றார். இவருடைய ‘கதிர்வேலனின் காதல்’ படத்தின் பிரமோஷன் வேலைகளுக்கு எத்தனையோ முறை வருந்தி வருந்தி அழைத்தும் நயன்தாரா வரவில்லையாம்.. ஆனால் இப்போது சம்பந்தப்படாத படத்திற்கு வந்திருக்கிறார். இதற்கு இவரும் வந்து வாழ்த்த வேண்டிய நிலைமை..! பாவம் உதயநிதி ஸ்டாலின்..!

யு டிவி தனஞ்செயன் மொட்டையடித்து புது கெட்டப்பில் இருந்தார். அவர் பேசும்போது, “ஆர்யா மாதிரியான தயாரிப்பாளரை அணுசரித்துப் போகிற ஹீரோ இங்க யாருமே இல்லை. அந்தளவுக்கு ரொம்ப இணக்கமா இருப்பார். நான் பட பிரமோஷனுக்காக அவரை எல்லா சேனலுக்கும் கூப்பிட்டு போயிருக்கேன். அவ்வளவு ஏன்…? துர்தர்ஷனுக்குகூட வந்திருக்கார்னா பாருங்களேன்…” என்றார்.

சிவஸ்ரீ பிக்சர்ஸ் சீனிவாசன் மேடைக்கு வந்து வாழ்த்தும்போது, “ஆர்யா  தயாரிப்பாளர்களின் ஹீரோ… நான் அவரை வெச்சு ‘நான் கடவுள்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’னு ரெண்டு படங்கள் பண்ணிருக்கேன். ஒரு தயாரிப்பாளரோட கஷ்டத்தை புரிஞ்சிக்கிறவர். அப்படிப்பட்டவர் இப்போ தயாரிப்பாளரா ஆனதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். அவரோட தம்பி சத்யா மற்ற விஷயங்கள்ல எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனா இந்த மாதிரி விஷயங்கள்ல அவர் அண்ணன் ஆர்யாவை பாலோ பண்ணனும்…” என்றார் சீரியஸாக.

பாலா மேடையேறியவர் சத்யாவை ஆசிர்வாதம் செய்துவிட்டு.. “நான்தான் சத்யாவை அறிமுகப்படுத்தணும்னு நினைச்சேன். அதுக்கான வாய்ப்பு அமையலை.. ஆனா அதுக்குள்ள டைரக்டர் ஜீவா சங்கர் முந்திக்கிட்டார்..” என்று சங்கடமே இல்லாமல் பேசியது ஏன் என்றுதான் தெரியவில்லை.. சத்யா ஏற்கெனவே ‘படித்துறை’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை இயக்கியதுகூட பாலாவிடம் உதவியாளராகப் பணியாற்றிய எழுத்தாளர் சுகாதான்..! இந்தப் படம் வெளியாகவில்லை என்றாலும், இதற்குப் பிறகு அவர் நடித்த ‘புத்தகம்’ படம்கூட வெளியாகிவிட்டதே.. இது பாலாவுக்குத் தெரியாதா என்ன..? அப்புறம் ஏன் இப்படீ..? ஜஸ்ட் தாட் ஸ்லிப்பிங்..!  அவ்ளோதான்..!

கடைசியாக திரிஷாவையும், நயன்தாராவையும் மேடைக்கு அழைத்தார்கள். அவர்களிடம் மைக்கை கொடுத்துவிட்டு தொகுப்பாளினி ரம்யா சில கேள்விகளை அவர்களிடத்தில் கேட்டதற்கு மாறி மாறி பதிலளித்தார்கள் திரிஷாவும், நயன்தாராவும்..!

“உங்க சொந்த பட பிரமோஷன்களுக்கு வராத நீங்க.. இந்த பங்ஷனுக்கு எதுக்கு வந்தீங்க..?” என்று ‘நாகரிகமான’ ஒரு கேள்வியைக் கேட்டார் ரம்யா.. ஆனா இதுக்கும் பதில் சொன்னாங்க ரெண்டு பேரும்..! அதான் ஆச்சரியம்..!

“ஆர்யாதான் காரணம். இந்த படவிழாவுக்கு வரும்படி அவர் என்னை அழைத்தபோது, ‘நயன் வருகிறாரா?’ என்று கேட்டேன். ‘வருகிறார்’ என்று ஆர்யா சொன்னார். நயன் வருவதால் நானும் கண்டிப்பாக வருகிறேன் என்றேன். அதோடு, ஜேமி(ஆர்யாவின் சொந்த பெயர், ஜேம்ஷத்) எனக்கு நல்ல நண்பர். அவர் அழைத்ததால் கலந்து கொண்டேன்.

நயன்தாரா இதற்குப் பதிலளித்தபோது, “நான் எந்த நிகழ்ச்சிக்கும் வர்றதில்ல.. உண்மைதான். ஆனா இது என்னோட குடும்ப விழா. ஆர்யா என் குடும்பத்துல ஒருத்தர் மாதிரி. அதுனாலதான் வந்தேன்…” என்றார்.

“ஆர்யா எப்படி..? படத்துல வொர்க் பண்ணும்போது, உங்க ரெண்டு பேரையும் எப்படி பார்த்துப்பார்? வேளாவேளைக்கு சாப்ட்டீங்களா, தூங்குனீங்களான்னு அக்கறையா கேட்பாராமே..?” என்று போட்டு வாங்கினார் ரம்யா.

இதற்கு பதிலளித்த திரிஷா, “ஆர்யா மத்தவங்ககிட்ட எப்படி பழகுறாரோ எனக்குத் தெரியாது.. ஆனா என்கிட்ட வழியற மாதிரியெல்லாம் நடந்துக்கிட்டது கிடையாது…” என்றார்.

இதற்குப் பதில் சொன்ன நயன்தாரா.. “ஆர்யா எங்களை மட்டுமில்ல, எல்லா ஹீரோயின்களையும் அக்கறையாத்தான் பார்த்துப்பார்…” என்றார் நயன்தாரா.

ஆக.. மொத்தம் பேசினவங்க அத்தனை பேருமே படத்துல நடிச்சவங்களையும், இயக்குநரையும் விட்டுட்டு ஆர்யாவையும், அவரோட ‘ரொமான்ஸ்’ தொழிலை பத்தி பேசியே இந்த அமரகாவியம் படத்தோட இசை வெளியீட்டு விழாவை ஒப்பேத்திட்டாங்க..!

என்ன இருந்தாலும் ஆர்யா இப்படி நம்மளை பொறாமைப்பட வைக்கக் கூடாது..!

Our Score