சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்வது என்பது, அறிமுக இயக்குநர்களுக்கு ஒரு சவாலான விஷயம்.
அந்த வகையில், தன்னுடைய முதல் படத்திற்கே ‘U’ சான்றிதழை பெற்று, ரசிகர்களின் பாராட்டுகளை பெற தயாராக இருக்கிறார் இயக்குநர் அசோக் அமிர்தராஜ்.
சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.கே.பாலமுருகன்-ஆர்.பி.பாலகோபி இருவரும் இணைந்து தயாரித்துள்ள புதிய படம் ‘திரி.’ ஆண்டோன் ரஞ்சித் மற்றும் எஸ்.ஜான் பீட்டர் ஆகியோர் இணை தயாரிப்பு செய்திருகின்றனர்.
இந்தப் படத்தில் அஷ்வின் கக்கமனு-ஸ்வாதி ரெட்டி இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான அசோக் அமிர்தராஜ் இயக்கியிருக்கிறார்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் அசோக் அமிர்தராஜ், “இந்தத் ‘திரி’ திரைப்படம் தந்தை – மகன் உறவை மையமாக கொண்டு நகர்கிறது. தணிக்கை குழுவினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து, அவர்களிடம் இருந்து ‘U’ சான்றிதழை பெறுவது அவ்வளவு எளிதல்ல. அதுவும் என்னை போன்ற அறிமுக இயக்குநர்களுக்கு, அது மிக பெரிய சவால். தற்போது எங்களின் ‘திரி’ படம் U சான்றிதழை பெற்று இருப்பது, எங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. ரசிகர்களை அதிகம் காக்க வைக்காமல் மிக விரைவில் படம் வெளியாகவுள்ளது…” என்றார்.