விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ‘திமிரு புடிச்சவன்’ திரைப்படம்

விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ‘திமிரு புடிச்சவன்’ திரைப்படம்

பொதுவாக தமிழ் திரை உலகில், ஒரு போலீஸ் அதிகாரியின் கதை என்றாலே நாம் எளிதில்  யூகிக்க முடிகிற கதை அமைப்பு, காட்சி அமைப்பு என்றுதான் இருக்கும். 

விஜய் ஆண்டனி நடிப்பில், இயக்குநர் கணேஷா இயக்கும் ‘திமிரு புடிச்சவன்’ திரைப்படம் அந்த  வழக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும்.  இயக்குநர் கணேஷா ஏற்கெனவே ‘நம்பியார்’ என்ற படத்தை இயக்கிய அனுபவம் உள்ளவர்.

படம் குறித்துப் பேசிய இயக்குநர் கணேஷா, “வழக்கத்தில் இருந்து மாறுபட்டு, இதுவரை பார்த்திராத ஒரு போலீஸ் அதிகாரியின் கதையை இந்தப் படத்தில் உருவாக்கியிருக்கிறேன்.

ஒரு காவல் நிலையத்தில் நடக்கும் அன்றாட சம்பவங்களே மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அவர்கள் இடையே இருக்கும் பரஸ்பர உறவு இந்த படத்தில் பிரதிபலிக்கும். இந்த கதையை எழுதும்போதே ஒரு பெரிய நட்சத்திரம் நடித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் நினைத்தேன்.

ஐந்து வருடங்களுக்கு முன்னரே விஜய் ஆண்டனி சாரிடம் இந்தக் கதையைச் சொன்னேன். ‘இன்னும் சில காலம் போகட்டும்’ என்றார். இன்று தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தனக்கென்று ஒரு நட்சத்திர அந்தஸ்தை அடைந்து விட்டதை தொடர்ந்து, மீண்டும் அவரிடம் சொன்னேன். இந்த முறை அவர் மறுக்கவில்லை. 

கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். பெண் போலீஸ் கதாபாத்திரத்துக்கு நிவேதா பொருத்தமாக இருக்கும் என்று தோன்றவே அவரை அணுகினோம். ஒரு காவல் அதிகாரியின் மிடுக்கு அவருக்கு நன்றாகவே பொருந்தியது.

இந்த படத்தில் அவர் மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டிய காட்சிகள் உள்ளன, அதற்காகவே அவர் பிரத்தியேகமாக பயிற்சி மேற்கொண்டார்…” என்றார் இயக்குநர் கணேஷா.

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில்  பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் இந்த ‘திமிர் புடிச்சவன்’ திரைப்படம் மார்ச் 1-ம் தேதி முதல் துவங்க உள்ளது.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு நேற்று சென்னையில் இனிதே நடந்தது. தற்போது இசை கோர்ப்பு பணிகள் துவங்கி உள்ளது.

Our Score