full screen background image

தேவராட்டம் – சினிமா விமர்சனம்

தேவராட்டம் – சினிமா விமர்சனம்

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் அபி அண்ட் அபி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாகவும், மஞ்சிமா மோகன் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சூரி, சரவண சக்தி, பாலா, வினோதினி வைத்தியநாதன், அகல்யா வெங்கடேசன், போஸ் வெங்கட், சந்துரு, வேல.ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சக்தி சரவணன் இசை – நிவாஸ் கே.பிரசன்னா, படத் தொகுப்பு கே.எல்.பிரவீன், சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், ஸ்டில்ஸ் – முருகன், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமது, எழுத்து, இயக்கம் – முத்தையா, தயாரிப்பாளர் – கே.ஈ.ஞானவேல்ராஜா, தயாரிப்பு நிறுவனம் – ஸ்டூடியோ கிரீன், அபி அண்ட் அபி.

சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் விநியோகஸ்தர் சக்திவேலன் இத்திரைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

6 அக்காள்களுக்கு கடைசியாத ஒத்த ஆம்பளை புள்ளையாக பிறந்தவர் நாயகன் ‘வெற்றி’ என்னும் கவுதம் கார்த்திக். சின்ன வயதில் இருந்தே நியாயத்திற்காக தட்டிக் கேட்கும் குணமுடையவர். அக்காள்களின் விருப்பத்திற்கேற்ப வக்கீலுக்கும் படித்து முடித்து ஒரு பெரிய சிவில் வக்கீலிடம் பயிற்சிக்காகவும் சேர்ந்துவிட்டார்.

அதே மதுரை நீதிமன்றத்தில் வக்கீலாக இருக்கும் நாயகி மஞ்சிமா மோகனுக்கும் இவருக்கும் ஒரு காதல். இந்தக் காதலுடன் கவுதமுக்கு  அடிதடியும் ஒரு பொழுதுபோக்காக போய்க் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் மதுரையில் ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருக்கும் அரசியல் அடாவடி ஆளான ‘கொடும்பாவி’ கணேசன் என்னும் பெப்சி விஜயனின் மகனுக்கும், கவுதம் கார்த்திக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது. ஒரு பெண் தொடர்பான விவகாரத்தில் பெப்சி விஜயன் மகன் தலையிட அவனையும், உதவிக்கு வந்த இன்னொரு தாதாவின் மகனையும் போட்டுத் தள்ளுகிறார் கவுதம் கார்த்திக்.

இதையறிந்த பெப்சி விஜயன் பதிலுக்கு கவுதமின் பாசமிக்க மூத்த அக்காளான வினோதினியையும், அவரது கணவரான போஸ் வெங்கட்டையும் கொலை செய்கிறார். கோபத்தின் உச்சத்திற்குப் போகும் கவுதம் கார்த்திக் இதற்காக பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறார். இதைச் செய்தாரா இல்லையா என்பதுதான் இந்தத் ‘தேவராட்டம்’ படத்தின் மீதிக் கதை.

‘தேவராட்டம்’ என்பது பழந்தமிழர் பழக்கப்படி பல்வேறு இனக் குழுக்களும் ஆடும் அவரவர் பாரம்பரிய நடனம். இதனை அனைவருமே ஒரே பெயரில் அழைத்தும் வந்திருக்கிறார்கள். காலப்போக்கில் அது மருவி தேவராட்டம் என்றாலே அது தேவர்கள் என்ற இனத்தவர்கள் மட்டுமே ஆடுகின்ற நடனம் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது.

ஆனாலும், இந்தப் படத்திற்கு இந்தத் தலைப்புக் கொஞ்சமும் பொருத்தமில்லை. எதற்கு இந்தப் பெயரை வைத்தார்கள் என்றும் தெரியவில்லை.

மாறாக தேவர்கள் என்றழைக்கப்படும் இனத்தவர்களின் வீட்டுக்குள் நடக்கும் பிரச்சினைகளாகவும், அவர்களது சமூகத்தில் நடக்கும் அடிதடி, வெட்டுக் குத்து, கொலை, கொள்ளையாகவும் இத்திரைப்படம் அடையாளம் காட்டுவதுதான் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பின்னடைவு.

இந்தச் சட்டைக்குத் தைத்த உடம்பாக கதையின் கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கிறார் கவுதம் கார்த்திக். இருந்தும் பொறி கடலை உருண்டையை வைத்து பாறையை உடைப்பதுபோல அவர் சண்டை காட்சிகளில் புகுந்து விளையாடுவது லாஜிக் இல்லாதது. நாயகனுக்கு முக்கியத்துவம் தேவைதான். ஆனால் அதை முறையாகச் செய்திருக்கலாம்.

கோவிலுக்கு நேர்ந்துவிட்டதால் பரட்டை தலைமுடியோடு இருப்பதாக அவரது அக்காள் கூறினார். இத்தனை வருடமாகியுமாக கோவில் நேர்த்திக் கடன் முடியவில்லை. நம்ப முடியவில்லை இயக்குநரே..

கவுதம் கார்த்திக் சிறப்பாக நடனமாடுகிறார். அபாரமாக சண்டையிடுகிறார். நிறையவே கோபப்படுகிறார். ஆனால் ரொமான்ஸில் கொஞ்சம் பின்னடைவில் இருக்கிறார் கவுதம் கார்த்திக். இரண்டு காட்சிகளில் மட்டுமே காதலனாக ரசிக்கப்படுகிறார். மற்றபடி படத்தில் இவரும் ஒரு ரவுடிக் கும்பலின் தலைவர் போலத்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

நாயகி மஞ்சிமா மோகனுக்கு அதிகம் வேலையில்லை. வழக்கமான ரவுடி-நாயகி மோதலாகி, காதலாகி கசிந்துருகி பரவினாலும் அதில் அழுத்தம் இல்லாததால் ரசிப்பில்லை. ஆனாலும் மஞ்சிமா ரசிக்க வைக்கிறார். இன்னும் தன் உடலை இளைக்க வைத்து ஸ்கிரீனில் முன் வந்து நின்றால் நன்றாக இருக்கும்.

அக்காள்களில் வினோதினிக்கு மிகப் பெரிய ரோல். தான் பால் கொடுத்து வளர்த்த தம்பி என்பதால் அவர் காட்டும் பாசமும், நேசமும் நெகிழ வைக்கிறது. ஆனால் அது கடைசியில் அடிதடியில் போய் முடிந்து அவரும் பரிதாபமாய் உயிரைவிடுகிறார். வினோதினிக்கு நிச்சயமாக இந்தப் படம் பெயர் சொல்லும் படம்தான்.

வெகு நாட்களுக்குப் பிறகு சக்கையாக காமெடியை பொழிந்திருக்கிறார் சூரி. இவருக்குப் பொருத்தமான வசனங்களும், உடன் நடித்த நடிகர்களின் ஸ்பீட் டெலிவரியிலும் சகலைகளின் அக்கப்போர்கள் பலவும் வாய் விட்டுச் சிரிக்க வைக்கின்றன. அந்த 20 ரூபாய் நோட்டு காமெடி பழசுதான் என்றாலும் ரசிக்க வைக்கிறது.

முரட்டு அரசியல்வாதியாக, கட்டப் பஞ்சாயத்து பேர்வழியாக பெப்சி விஜயன் தனது அதீத முரட்டுத்தனத்தைக் காட்டியிருக்கிறார். “என் பையன் முன்னாடி வந்து நின்னாலே எனக்குப் பிடிக்காது.. அவனை அடிச்சிருக்க.. உன்னை எப்படி விடுவேன்..” என்று ஏதோ அவருடைய மகன் மட்டும் சந்திர மண்டலத்தில் இருந்து வந்ததுபோல அடிக்கடி பேசும் உதார் வசனம்தான் பிடிக்கவில்லையே தவிர.. நடிப்பில் மிரட்டியிருக்கிறார் பெப்சி விஜயன். இவருக்குப் பொருத்தமாக பக்காவான, மாஸான பஞ்ச் டயலாக்குகளை வகை, வகையாக எழுதித் தள்ளியிருக்கிறார் இயக்குநர் முத்தையா. அத்தனையும் ரசிக்க வைக்கும் ரகம்.

மூத்த மருமகனான போஸ் வெங்கட்டும், மாமனாரான வேல.ராமமூர்த்தியும் ஒரே நேரத்தில் அவரவர்க்கு பிறக்கும் குழந்தைகளைப் பற்றிப் பேசுவது காமெடியாக இருந்திருக்க வேண்டிய காட்சி. இதையும் குடும்பப் பெருமையாகத் திணித்துவிட்டார் இயக்குநர். வேல.ராமமூர்த்தி ஒரு காட்சி என்றாலும் அந்தப் பஞ்சாயத்துக் காட்சியில் நெஞ்சை நிமிர்த்தி பேசியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சக்தி சரவணனின் ஒளிப்பதிவு கண்ணை கட்டும் ரகம். பாடல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் ஒளிப்பதிவாளர் தன் திறமை மொத்தத்தையும் இறக்கிவிட்டார் போலிருக்கிறது. கேமிரா அந்த அளவுக்கு ஒளிந்து விளையாடியிருக்கிறது.

இதேபோல் சண்டை இயக்குநரான திலீப் சுப்பராயனுக்கும் செமத்தியான வேலை. கவுதம் கார்த்திக்கை மட்டுமல்ல நடித்திருக்கும் சண்டை கலைஞர்கள் அனைவரையுமே பெண்டை கழட்டியிருக்கிறார். நம் தலையில் ஆணி இறக்குவதைப் போல சண்டை காட்சிகள் அத்தனை வன்மமமாக இருக்கிறது.

நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் அனைத்துமே அமர்க்களம். அதிலும் ‘மதுரை பளபளக்குது’ பாடலும், அதற்கேற்ற நடனமும் அசத்தல். இந்தப் பாடலின் இடையே வரும் ‘உக்காந்து யோசிப்பாங்களா..’ ‘இல்ல யோசிச்சுட்டு உக்காருவாய்ங்களா’ என்கிற சரணத்துக்கு ஆடும் நடனம் ஆடாதவர்களையும் ஆட வைத்துவிடும். இதேபோல் ‘லேசா லேசா’, ‘பசம்புக் கள்ளி’ பாடல்களும் கேட்க வைக்கின்றன. ‘அழகரு வராரு’ பாடல் டைட்டிலில் வந்தாலும் மதுரை மண்ணின் கதையைச் சொல்கிறது. இந்தப் பாடலுக்காக அழகர் கோவில் திருவிழாவை கச்சிதமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். பாராட்டுக்கள்.

`கொம்பன்’, ‘குட்டிப்புலி’, `மருது’, `கொடிவீரன்’ படங்களுக்கு அடுத்து முத்தையா இயக்கியிருக்கும் 5-வது படம் இந்தத் தேவராட்டம். படத்தில் எப்போதும் இருக்கும் சாதிய பாசத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டாலும் வீட்டில் இருக்கும் பெண்களும்கூட வன்முறையை ஆதரிக்கும்விதமாக காட்சிகளை அமைத்திருப்பது கொடூரம்.

ஒரு கமர்ஷியல் படம் என்பதால் இப்படித்தான் இருக்கும் என்பதெல்லாம் ஓகேதான். ஆனால் தவறான வழிமுறைகளை இளைய தலைமுறையினர் மனதில் புகுத்தக் கூடாதே இயக்குநரே..! “ மண்ணைத் தொட்டவனைக்கூட விடலாம். பெண்ணைத் தொட்டவனை விடவே கூடாது..” என்று வீர வசனம் பேசி பழிக்குப் பழி, வன்முறையை வளர்ப்பது தவறல்லவா..?

பெண்களுக்கு எதிரான செயல்கள் குற்றம் என்றால், வன்முறையை அடுத்தவர் மனதில் வளர்ப்பதும் குற்றம்தான். இரண்டுமே ஒன்றுதான். இது சாதிய படம் இல்லை என்றாலும் ஒரு சாதியினரின் மனதில் வேறூன்றியிருக்கும் வன்முறை வெறியை வெளிக்கொணரும் படமாகத்தான் இதை உணர முடிகிறது.

ஒருவரை வெட்டிச் சாய்ப்பதில்தான் சாதிய பெருமை இருக்கிறது என்றால் அது சாதியம் இல்லை. அவர்களும் மக்கள் இல்லை. அந்த சாதியம் நமக்குத் தேவையும்  இல்லையே இயக்குநரே..

சர்ச்சைக்குரிய அந்த ஜீன்ஸ் பேண்ட் டயலாக் டிரெயிலரில் இருந்தது. ஆனால் திரையில் தூக்கிவிட்டார் போலிருக்கிறது. காணவில்லை. அதுவும் ஒருவகையில் நன்மைக்கே.. அது ஆதிக்கச் சாதியினரின் குரலாக ஒலிக்கும் அபாயம் உண்டு என்பதால் அதனை நீக்கிய இயக்குநருக்கு நமது நன்றிகள்..!

இத்திரைப்படத்திற்கு இவ்வளவு வன்முறை தேவையே இல்லை. ஒரு வழக்கறிஞராக அவரால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வதுபோல கதையை மாற்றி வைத்திருந்தால் நேர்மையான படமாக இருந்திருக்கும்..!

“பெண்கள் பொக்கிஷங்கள், பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். அவர்களைத் துன்புறுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல; கருவறுக்கப்பட வேண்டியவர்கள்” என்கிறார் இயக்குநர். சரிதான். ஆனால் அதனைச் செய்யத்தான் சட்டமும், காவல்துறையும் இருக்கிறது. அதை அவர்கள் சரியாகச் செய்யாவிடில் நாம் நமது அரசுகளைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். இதைவிட்டுவிட்டு ‘வீட்டுக்கு வீடு அனைவரும் அரிவாளைத் தூக்குங்கள்’ என்றால் எப்படி..?

சொல்ல வந்த கருத்து சரிதான். ஆனால் சொன்னவிதம் தவறானது இயக்குநரே..!

Our Score