full screen background image

தெரியாம உன்ன காதலிச்சிட்டேன் – சினிமா விமர்சனம்

தெரியாம உன்ன காதலிச்சிட்டேன் – சினிமா விமர்சனம்

படத்தின் தலைப்புதான் படத்தின் கரு. விரட்டி விரட்டி காதலித்த பெண்ணுடன் சில நாட்கள் தனித்து குடும்பம் நடத்தும்போது, ஏண்டா இவளை போய் காதலிச்சோம் என்ற பீலிங்கோடு காதலனும், காதலன் தன்னை காதல் என்ற பெயரில் அடிமைப்படுத்துவதாக காதலியும் நினைத்து பிரிகிறார்கள்.. இருவரும் மீண்டும் சேர்ந்தார்களா? இல்லையா ?என்பதுதான் கதை..!

விஜய் வசந்த் தனி ஹீரோவாக நடித்த முதல் படம் இதுதான். ஆனால் இதற்கடுத்து நடித்த ‘என்னமோ நடக்குது’ படம் இதை முந்திக் கொண்டு திரைக்கு வந்து ஓட்டமாய் ஓடிவிட்டது.. இதனால் இந்தப் படத்தைக் கொஞ்சம் கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள். இப்போதுதான் பெரிய மனது பண்ணி ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

இத்தனைக்கும் இது விஜய் வசந்தின் குடும்பத் தயாரிப்பு. சஸ்பென்ஸாக பேப்பர் விளம்பரத்துடன் மட்டுமே இதனைத் தியேட்டர்களுக்குக் கொண்டு வந்ததன் காரணத்தை படம் பார்க்கும்போது தெரிந்து கொண்டோம்.. சரிதான்.. எதற்கு கூடுதலாக செலவு செய்து நஷ்டப்பட வேண்டும் என்று புத்திசாலித்தனமாக சிந்தித்து செயல்படுத்தியிருக்கிறார்கள். பாராட்டுக்கள்..

விஜய் வசந்த் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். இயக்குநர் எத்தனை கஷ்டப்பட்டாரோ தெரியவில்லை..! ஆனாலும் முதல் படம்தானே.. போகப் போக வந்துவிடும் என்று நினைத்திருப்பார். ஆனால் ‘என்னமோ நடக்குது’ படத்தில் சூப்பரான இயக்கத்தில் விஜய் வசந்த் அந்த கேரக்டரில் மிக பொருத்தமாக இருந்தார். இங்கே தவறு இயக்குநரிடத்தில்தான்..!

படத்தின் பிற்பாதியில் மட்டுமே நடித்துத் தள்ளியிருக்கிறார் விஜய் வசந்த். “உன்னைய போய் லவ் பண்ணினே…” என்று புலம்பிவிட்டு.. “தெரியாம உன்னை காதலிச்சிட்டனே…” என்று அல்ல்ல்படும் காட்சிகளிலும் மட்டுமே ரசிக்க வைத்திருக்கிறார்.  அதிலும் “ஒரு நிமிஷம்…” என்று சொல்லிவிட்டு பாத்ரூம் சுவற்றில் போய் முட்டிவிட்டுவரும் காட்சிகளில் இயல்பான நகைச்சுவை..

ஹீரோயினை திரும்பவும் கொண்டு வந்து அவளது தாய்மாமனிடத்தில் ஒப்படைக்கும் காட்சியில் பேசும் கோப வசனங்களை சரியான முறையில் டெலிவரி செய்திருக்கிறார். அந்தக் காட்சியில் “ஆளை விட்டுட்டு போடா…” என்று நம்மைகூட சொல்ல வைக்கிறார். இப்போது ‘ஜிகினா’வில் நடித்து வருகிறாராம்.. அதாவது வெற்றியாகட்டும்..!

ஹீரோயின்.. படத்தில் ‘தேவதை’.. ‘தேவதை’.. என்று வசனம் வைத்திருக்கிறார்கள். இது நியாயம்தானா..? தேவதை மாதிரியா இருக்கு அந்தப் பொண்ணு..? கஷ்டம்.. பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்ல வேண்டாமா..? நடிப்பு.. சுமார்தான்.. ‘என்ன கார்த்தி’.. ‘ஏன் கார்த்தி’ என்று பெயரைச் சொல்லி இழுத்து, இழுத்து பேசுவது கொஞ்ச நேரம் காமெடியாகவும், அதிக நேரம் எரிச்சலையும் தருகிறது.

ஆனால் இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் சூப்பர். படு சோம்பேறி என்பதற்கான விளக்கத்தை காட்சிகளில் முன்பே விளக்கிவிட்டதால் பிற்பாதியில் அந்த எமோஷனல் சண்டை காட்சிகளில் ஹீரோயினை ரசிக்க முடிந்தது.

ரொம்ப நாள் கழித்து நிழல்கள் ரவி. முதல் மகனுக்கும், இரண்டாவது மகனுக்கும் இடையில் பஞ்சாயத்து செய்யும் காட்சி, மனைவி உமா பத்மநாபன் அப்பாவியாய் எதற்கெடுத்தாலும் பதில் சொல்லி இவர் தலையில் அடித்துக் கொள்வதெல்லாம் ரசிப்பாகத்தான் இருக்கிறது. உமா பத்மநாபன் அப்பாவி மனைவியாய் அப்படியே இருக்கிறார். இன்னும் எத்தனை நாள் இதே கேரக்டர் செய்வாரோ தெரியலை.. கொடுப்பதைத்தானே செய்ய முடியும்..? நமக்கென்ன..?

இயக்குநர் நல்ல கதையாகத்தான் தேர்வு செய்திருக்கிறார். ஆனால் திரைக்கதையிலும், இயக்கத்திலும்தான் கோட்டை விட்டிருக்கிறார்.. யாரிடமும் சொல்லாமல் கொடைக்கானலில் 10 நாட்கள் டேரா போடுகிறார் ஹீரோ.. அவர் வீட்டில் யாரும் தேட மாட்டார்களா..? என்ன சொல்லிவிட்டு வந்தாரோ..?

வந்த இடத்தில் ஹீரோயினை தேவதை என்று எவன் சொன்னாலும் 500 ரூபாய் நோட்டுக்களை அள்ளி வீசுகிறார்.. ஒரு பாடல் காட்சி முழுவதும் இப்படித்தான். பாட்டு முடிந்த்தும் கையில் பணமில்லை என்று சொல்லி வேலைக்குப் போகிறார். அங்கு ஒரு நாள் கூலியாக்க் கிடைக்கும் நூறு ரூபாயை கையில் வைத்து தனது நிலைமையை எண்ணிப் பார்க்கிறார். தேவதைக்காக பணத்தைச் செலவழிக்கும்போது இதையெல்லாம் அவர் யோசிக்கலையாமா..? என்னவொரு டிராஜடி ஸ்கிரீன்பிளே..?

ஹீரோ காதலிக்கத் துவங்கும்போதே தகராறுதான்.. வீட்டில் தண்டச் சோறு. வேலை எதுவும் இல்லாமல் வெட்டியாய் ஊர் சுற்றும்போதே பள்ளியில் படிக்கும் பெண்  மீது காதலாம்.. இந்த பள்ளி காதலை என்றைக்குத்தான் தமிழ் சினிமாவில் விட்டுத் தொலைப்பார்களோ தெரியவில்லை..

அதிலும் இந்த ‘தேவதை’யை இவர் விரட்டிச் சென்று காதலிப்பதையெல்லாம் இதுவரையில் ஆயிரம் படங்களில் பார்த்தாகிவிட்டது.. சலிப்பான திரைக்கதை. குறி சொல்பவனுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கும்போதே தலையில் கொட்ட வேண்டும் போல தோன்றுகிறது.. அப்படியென்ன இந்த வயதில்.. இந்த நிலைமையில் காதல் வேண்டி கிடக்கிறது..? திரைக்கதையில் நேர்மை இல்லை.. இயக்குநர் ஏதோ ஒரு படத்தை இயக்கினால் போதும் என்கிற நிலைமையில் இருந்தார் போலும்..!

இதில் ஒரேயொரு பாராட்டப்பட வேண்டிய விஷயம் கதைக்கருதான்.. ‘காதலிக்கும்போது தெரியாத குணநலன்கள் கல்யாணத்திற்கு பின்புதான் தெரிய வரும். அப்போதுதான் அவர்களால் ஒருவரையொருவர் முழுமையாக புரிந்து கொள்ள முடியும்’ என்பதை சுற்றி வளைத்துச் சொல்லியிருக்கிறார். இதை அட்லீஸ்ட் வசனத்திலாவது சொல்லியிருக்கலாம். கொடைக்கானலில் இருக்கும் அக்கம்பக்கத்தினர் மூலமாகவாவது சொல்லியிருக்கலாம்.

எல்லாத்தையும் விட்டுவிட்டு சென்னையில் ஒரு நண்பனின் அண்ணன் சொன்னவுடன் பட்டென்று அவருக்குள் அந்த உண்மை தெரிந்து மனம் திருந்துவது போலவும்.. இதே போல ஹீரோயின், ஹீரோவுக்காக ஏங்குவது போலவும் வைத்து கிளைமாக்ஸை சீக்கிரமாக கொண்டு வந்துவிட்டார்..

ஒளிப்பதிவு, இசை, பாடல்கள் பேசும்படியாக இல்லை.. படத்தின் துவக்கத்தில் வெங்கட்பிரபுவும், பிரேம்ஜியும் பழகின தோஷத்துக்காக வந்து ஹீரோவை அறிமுகம் செய்துவிட்டுப் போகிறார்கள். அதுவே ஒரு பாடலில்தான் துவங்குகிறது.. எல்லாம் ஒரே டெம்ப்ளேட் ஸ்டைல்தான்..!

‘தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்’ என்பதை ‘தெரியாம படம் பார்க்க வந்துட்டோம்’ன்ற மாதிரி சொல்ல வைச்சது எங்க தப்பில்லீங்கோ.. இயக்குநரின் தவறு..!

ஸாரி.. வருந்துகிறோம்..!

Our Score