ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டில் எதிர்ப்பாளர்களே இல்லாமல் வெளியான விஜய்யின் ‘தெறி’ படத்தின் வசூல் தொடர்ந்து முன்னேறி வருகிறது. படம் வெளியான 6 நாட்களில் படம் 100 கோடி வசூலைத் தொட்டிருக்கிறது. இதுவே தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு புதிய சாதனை என்கிறார்கள்.
வியாபார ஒப்பந்தத்தில் உண்டான சிக்கல்கள் காரணமாக செங்கல்பட்டு பகுதிகளில் 60 திரையரங்குகளில் ‘தெறி’ படம் வெளியாகவில்லை. ஆனாலும் தமிழகத்திலேயே படத்தின் வசூல் இந்த அளவுக்கு கிடைத்திருப்பது அவர்களே எதிர்பாராதது.
தமிழகம் தவிர வெளிநாடுகளிலும் இந்தப் படம் வசூலில் சாதனை படைத்திருக்கிறது என்றே சொல்கிறார்கள். அமெரிக்க மற்றும் கனடா நாட்டை உள்ளிட்ட வட அமெரிக்காவில் கடந்த 8 நாள்களில் 1 மில்லியன் டாலரை வசூலித்து சாதனை செய்திருக்கிறது தெறி படம். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 6.65 கோடி ரூபாய்..! இதன் மூலம், வட அமெரிக்காவில் இதுவரை வெளியான விஜய் படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்கிற பெருமை ‘தெறி’க்குக் கிடைத்துள்ளது.
நேற்றுடன் முடிவடைந்த இரண்டாவது வாரத்திலும் படத்தின் வசூலில் சேதாரமில்லாமல் இருக்கிறதாம். நேற்றுவரை தமிழ்நாட்டில் மட்டும் 58 கோடியை வசூலித்துள்ளது. சசிகுமாரின் ‘வெற்றிவேல்’, ‘ஜங்கிள் புக்’ போன்ற படங்களால்கூட ‘தெறி’ படத்தின் வசூல் பாதிக்கப்படவில்லை.
இதே நிலை இந்த வாரத்திலும் தொடர்ந்தால் விஜய் படங்களில் அதிகம் வசூலித்த ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்களின் சாதனையை இந்த ‘தெறி’ கடந்துவிடும் என்றே சொல்கிறார்கள் சினிமா புள்ளிவிவரப் புள்ளிகள்.