வருமா வராதா என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கிளறிவிட்ட ‘தெனாலிராமன்’ திரைப்படத்திற்கான கடைசி கட்ட தடைகளும் இன்று நீங்கியது.
‘தெனாலிராமன்’ படத்தை எதிர்த்து தெலுங்கு மக்கள் பேரவையின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, இன்று தீர்ப்பு சொல்லப்படுவதாக இருந்தது.
இந்த நிலையில் தமிழ்ச் சினிமாவின் மிகப் பெரிய தயாரிப்பாளர்களான ஏஜிஎஸ் நிறுவனத்தின் கஷ்டத்தைப் பார்த்த தயாரிப்பாளர்கள் சங்கம், அதன் தெலுங்கு உறுப்பினர்களை அணுகி இந்தப் பிரச்சினையை முடித்துக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டதாம்.
அதன்படி தயாரிப்பாளர் சங்கத்தில் நீண்டகால உறுப்பினராக இருக்கும் பிரசாத் என்ற தயாரிப்பாளரின் முயற்சியால் தெலுங்கு மக்கள் பேரவையின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு ‘தெனாலிராமன்’ படம் இன்று திரையிட்டு்க் காட்டப்பட்டது.
இதன் பின்பு ரெசிடென்ஸி ஹோட்டலில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் வடிவேலுவே நேரில் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். தெலுங்கு மக்கள் பேரவையினர் கேட்ட கேள்விகளுக்கு தயாரிப்பாளரும், வடிவேலுவும் விளக்கமாக பதில் அளித்ததால் அந்த பதிலில் திருப்தியடைந்த தெலுங்கு மக்கள் பேரவையினர் படத்துக்கு தங்களது எதிர்ப்பைக் கைவிட்டுவிட்டதாக அறிவித்துவிட்டனர்.
இதையடுத்து வரும் வெள்ளியன்று ‘தெனாலிராமன்’ படம் ரிலீஸாவது உறுதியாகிவிட்டது. இன்றைக்கே தமிழகத்தில் அட்வான்ஸ் புக்கிங்கும் துவங்கிவிட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
வடிவேலுவைவிட அவரது ரசிகர்கள்தான் இந்தப் படத்தை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பார்க்கலாம்..!