பொதுவாக முதல்முறையாக சினிமா தயாரிக்க வரும் தயாரி்பபாளர்கள் கதையில் எந்தவிதத்திலும் ரிஸ்க் எடுக்கத் தயங்குவார்கள். காதல் கதை மட்டுமே.. ஹீரோயிஸ கதை மட்டுமே.. அதில் நிச்சயமாக கமர்ஷியல் இருக்க வேண்டும்.. என்றெல்லாம் பிளான் செய்துதான் இறங்குவார்கள்.
ஆனால் அது போலெல்லாம் இல்லாமல் சின்னக் குழந்தைகளை வைத்து, ஒரு பெரிய ஹீரோயிஸ படத்திற்கு ஆகும் செலவில் ‘அழகு குட்டி செல்லம்’ என்ற பெயரில் படம் எடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் அந்தோணி. இவரை தமிழகம் முழுவதும் டிவி நேயர்கள் நிச்சயமாக அறிந்திருப்பார்கள். விஜய் டிவியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் இவர்தான்.
இவருடைய நண்பர் இயக்குநர் சார்லஸ். ஏற்கெனவே ‘நஞ்சுபுரம்’ என்றொரு படத்தை இயக்கியிருக்கிறார். இ்பபோது இந்தப் படம்..
“இந்தக் கதையை தற்செயலா இயக்குநர் என்கிட்ட சொன்னார். அதுவரைக்கும் எனக்கு படம் தயாரிக்கிற ஐடியாவே இல்லை. அவர் சொன்ன கதையைக் கேட்டவுடனேயே இதை நானே தயாரிக்கிறேன்னு சொல்லிட்டேன். அந்த அளவுக்கு எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய கதை.
இந்தப் படம் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. படத் தயாரிப்பில் இறங்கினால் நல்ல படம் எடுத்தத் தயாரிப்பாளர் என்று பெயரெடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் துணிந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன்…” என்கிறார் தயாரிப்பாளர்.
இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டரில் கருணாஸ் நடித்திருக்கிறார். மேலும் கல்லூரி அகில், ஜான் விஜய், தம்பி ராமையா, சுரேஷ், வினோதினி, கிரிஜா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். வேத் சங்கர் சுகவனம் இசையமைப்பில், நா.முத்துக்குமார் 5 பாடல்களை எழுதியிருக்கிறார்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் சார்லஸ், “இந்த படம் குழந்தைகளுக்கான படம் மாதிரி தெரிஞ்சாலும், குடும்பதோட வந்து பார்க்கக் கூடிய விதத்துலதான் இருக்கும். நம்முடைய அம்மாக்கள் இந்தக் குழந்தை விஷயத்துக்காக எத்தனை மெனக்கெடுறாங்கன்றதை பல உதாரணக் கதைகளோட இதுல விளக்கியிருக்கோம்.
ஒரு சிலருக்கு குழந்தைகளை பெத்துக்கும்போது பிரச்சினை. சிலருக்கு குழந்தை இல்லாததே பிரச்சினை. சிலருக்கு குழந்தைகளால் பிரச்சினை.. சிலருக்கு குழந்தைகளை வளர்ப்பதில் பிரச்சினை.. இப்படி இந்தக் குழந்தைகளை வைத்து பலவித பிரச்சினைகள் பேரண்ட்ஸ்களுக்கு இருக்கு. இது ஒவ்வொண்ணையும் நாங்க தொட்டுத் தொட்டுக் காண்பிச்சிருக்கோம். இது ஒட்டு மொத்தமா படமா பார்க்கும்போது ஒரு ‘அஞ்சலி’ மாதிரி.. ‘பூவே பூச்சுட வா’ மாதிரி அழகா தெரியும்.
பள்ளியில் நடைபெறும் நாடகத்துக்காக பிறந்து 1 மாதமான குழந்தை தேவைப்படுது. ஸ்கூல்ல படிக்கிற சின்னப் பிள்ளைக அந்த மாதிரி சின்ன கைக்குழந்தையைத் தேடி போறாங்க. அந்த டிராவல்ல அவங்க தெரிஞ்சுக்குற விஷயங்கள்தான் திரைக்கதையா வருது.. இந்த வருஷம் வரக்கூடிய படங்கள்ல இந்தப் படம் நிச்சயமா தனித்து நிக்கும்ன்னு நான் உறுதியா நம்புறேன்..” என்கிறார்.
குழந்தைகளை மையமாக வைத்து அரிதாகத்தான் படங்கள் வருகின்றன. இயக்குநர் சார்லஸும், தயாரிப்பாளர் அந்தோணி சொல்வதை பார்த்தால் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்க வேண்டிய படமாக இது இருக்கும்போல தோன்றுகிறது..!
இவர்களது வருகை நல்வரவாகட்டும்..!