‘ருத்ரமா தேவி’ திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது..!

‘ருத்ரமா தேவி’ திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது..!

இரண்டு தெலுங்கு மாநிலங்களிலும் உள்ள சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் திரைப்படங்களும் இரண்டு. 1. ‘பாகுபாலி’. 2. ‘ருத்ரமா தேவி’.

இந்த இரண்டு படங்களுமே வரலாற்றுப் படங்கள். மெகா பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார்கள். ‘பாகுபாலி’யை எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கி வருகிறார். ‘ருத்ரமா தேவி’யை குணசேகர் இயக்கியிருக்கிறார். இந்த இரண்டு படங்களுக்கும் உள்ள ஒற்றுமை இந்த இரண்டிலுமே கதாநாயகி அனுஷ்காதான்.

இந்த ‘ருத்ரமா தேவி’ படம் முழுக்க முடிவடைந்து சமீபத்தில்தான் பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இது தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

இதன் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை மறைந்த இயக்குநர் இராம.நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. இந்நிறுவனத்தின் சார்பில் இராம.நாராயணனின் மகனான என்.ராமசாமி இப்படத்தை வெளியிடவிருக்கிறார்.

அனுஷ்காவின் புகழைப் பரப்பிய கோடி ராமகிருஷ்ணா இயக்கிய ‘அருந்ததி’ படத்தையும் இதே நிறுவனம்தான் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் அனுஷ்காவுடன் ராணா டகுபதி, அல்லு அர்ஜூன் என்று இரண்டு ஹீரோக்கள் நடித்திருக்கிறார்கள். மேலும் கிருஷ்ணம்ராஜூ, ஆதித்ய மேன்ன், பாபா சாகேல், விஜயகுமார், சுமன், பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், கேத்தரின் தெரேசா, ஹம்ச நந்தினி, அதிதி செங்கப்பா மற்றும் பல பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள்.

அஜயன் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். ஏ.ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்திருக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கம் படைத்திருக்கிறார். நீட்டா லூல்லா உடையலங்காரப் பணியை மேற்கொண்டிருக்கிறார். பீட்டர் ஹெயின் சண்டை பயிற்சியை கையாண்டிருக்கிறார்.

இயக்குநர் குணசேகர் மட்டுமல்ல டாக்டர் முடிகொண்ட சிவா, பிரசாத், மதுபாபு, எம்.பி.எஸ்.பிரசாத்தோ ஆகிய நால்வரும் இணைந்து படத்தின் கதை திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். நம்முடைய கவிஞர் பா.விஜய் வசனம் எழுதியிருக்கிறார். தன்னுடைய குணா டீம் வொர்க்ஸ் சார்பில் இயக்குநர் குணசேகரே இப்படத்தை சுமார் 50 கோடி செலவில் தயாரித்திருக்கிறார்.

இவர் ஏற்கெனவே தெலுங்கில் ஹிட்டான பல படங்களை இயக்கியவர். அதில் முக்கியமானவை ‘ஒக்குடு’, ‘ராமாயணம்’, ‘சைனிக்குடு’, ‘அர்ஜூன்’, ‘மனோகரம்’ ஆகியவையாகும்.

‘ருத்ரமா தேவி’ ஆந்திராவில் 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அரசி. காகாதியா அரச பரம்பரையில் வந்த இவர் ஆந்திராவின் வாராங்கல் நகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். தன்னுடைய தந்தையின் காலத்திற்கு பின்பு சுமார் 40 ஆண்டுகள் ஆட்சி புரிந்து வரலாற்று சாதனை படைத்தவர். இந்தியாவில் இவர் அளவுக்கு வேறு எந்த பெண்ணரசியும் ஆட்சி புரிந்ததில்லையாம். இவருடைய வரலாறு இன்றைக்கும் மேடை நாடகங்களிலும், தெரு நாடகங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறதாம்.

இந்த அளவுக்கு புகழ் பெற்ற அரசி என்பதால்தான் அனுஷ்கா சட்டென்று அழைத்தவுடன் ஒத்துக் கொண்டாரம். ‘அருந்ததி’ படம் கொடுத்த பிரமிப்பும், பாராட்டும், உயர்வும் அனுஷ்காவுக்கு இன்னும் மறக்கவில்லை போலும்..!

இந்தப் படம் 3-டி படமாக தயாரிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. பல கோடி செலவில் எடுக்கப்படும் இந்தப் படத்தின் இந்தப் பணிக்காக ஹாலிவுட் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

மேலும் இந்தப் படம் முழுவதிலும் அனுஷ்கா அணிந்திருந்த அனைத்து நகைகளும் உண்மையான தங்க நகைகள். சென்னையில் உள்ள என்.ஏ.சி. ஜூவல்லரி கடையில்தான் அனைத்து நகைகளும் ஆர்டர் செய்யப்பட்டு வாங்கப்பட்டனவாம். இவற்றில்கூட சிலவற்றை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே யாரோ சிலர் திருடிச் சென்றுவிட.. போலீஸ் வலைவீசித் தேடிப் பிடித்து நகைகளை மீட்டிருக்கிறது.

‘ருத்ரமா தேவி’ திரைப்படம், அடுத்த மாத கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Our Score