full screen background image

‘தேன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது..!

‘தேன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது..!

இந்தாண்டு துவக்கத்தில் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுதல்களையும், பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளைப் பெற்ற திரைப்படமான ‘தேன்’, தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.

வரும் ஜூன் 25-ம் தேதியன்று சோனி லிவ்’ என்ற ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியாகிறது.

தேனியருகே இருக்கும் மலைக் கிராமத்தில் தேனீக்களை வளர்த்து அதில் இருந்து கிடைக்கும் தேனை விற்று வாழ்க்கையை ஓட்டும் ஒரு படிக்காத பாமரனின் வாழ்க்கைப் பயணம்தான் இந்தத் தேன் திரைப்படம்.

ஒரு அரிய நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் தனது மனைவியைக் காப்பாற்ற அந்த எளிய, படிப்பறிவில்லாத மனிதன் சந்திக்கும் சவால்களும், அந்தச் சவால்களை அவன் எப்படி எதிர் கொள்கிறான் என்பதும்தான் இந்தப் படத்தின் கதை.

வேலு (தருண் குமார்) மற்றும் பூங்கோடி (அபர்நதி) ஆகியோரின் வாழ்க்கையை சுற்றி அமைந்ததுதான் தேன் படத்தின் மைய கதை. துரதிர்ஷ்டவசமாக பூங்கோடி நோய்வாய்ப்பட்டு உயிருக்கு போராடுகிறார். தனது குடியுரிமையை நிரூபிப்பதற்கான சரியான ஆவணங்கள் இல்லாததால் பூங்கோடிக்கு மருத்துவ உதவியைப் பெற வேலு போராடுகிறார்.

அதிகாரத்துவ சிக்கல்கள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு இல்லாமை ஆகியவை, சமூகத்தின் யதார்த்தத்தை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இயக்குநர் கணேஷ் விநாயகன் இந்த படத்தை இயக்கி உள்ளார். தயாரிப்பாளர்கள் அம்பலவாணன் பி, பிரேமா. இருவரும் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

பல்வேறு திரைப்பட விழாக்களில் இந்தத் ’தேன்’ திரைப்படம் திரையிடப்பட்டு 40-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை பெற்றுள்ளது.

இந்தியன் பனோரமா 2020-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு தமிழ் படங்களில் இதுவும் ஒன்றாகும். 11-வது தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழா, டெல்லி என்.சி.ஆர், இந்தியா, கல்ட் கிரிட்டிக் திரைப்பட விருதுகள் 2020, புது தில்லி திரைப்பட விழா, அயோத்தி திரைப்பட விழா, அயோத்தி 2020 போன்ற பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.

இந்தப் படத்தில் பேசப்பட்டிருக்கும் சமூக செய்தி பார்வையாளர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. தமிழைத் தவிர, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகிறது.

இந்தப் படம் குறித்து இயக்குநர் கணேஷ் விநாயகன் பேசும்போது, “படிக்காத ஒரு மனிதன், அவனுடைய உரிமைகளுக்காகப் போராடுகிறான். இதுதான் இன்று பலரின் யதார்த்த வாழ்க்கை நிலைமை. இந்தப் போராட்ட கதையைத்தான் இந்தத் ‘தேன்’ திரைப்படம் முன்னிலைப்படுத்துகிறது. இந்தப் படம் உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது, இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமானது. இந்த திரைப்படம் பலரின் இதயங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன்..” என்றார்.

 
Our Score