AAA CINEMA பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் த்ரிஷா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, சந்தோஷ் பிரதாப், டான்ஸிங் ரோஸ் சபீர், விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – அருண் வசீகரன், ஒளிப்பதிவு – கே.ஜி.வெங்கடேஷ், இசை – சி.எஸ்.சாம், படத் தொகுப்பு – நாகூரான், கலை இயக்கம் – சிவ யாதவ், சண்டைப் பயிற்சி இயக்கம் – பீனீக்ஸ் பிரபு, நிர்வாகத் தயாரிப்பு – ஜெயில் சம்பத், நேரடி தயாரிப்பு – கணேஷ் கோபிநாத், வள்ளிகந்தன், புகைப்படங்கள் – அமீர், பத்திரிகை தொடர்பு – டைமண்ட் பாபு, உடைகள் – நட்ராஜ், ஒப்பனை – எஸ்.ரவி, விளம்பர வடிவமைப்பு – சபீர்.
இந்தப் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் அருண் வசீகரன் திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். குறும் படங்கள், விளம்பரப் படங்கள் மற்றும் வெப் தொடர்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்.
2000-ம் ஆண்டுகளில் மதுரையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இழப்பதற்கு எதுவுமில்லாத ஒரு பெண் இந்த இரத்தப் பூமியில் மேற்கொள்ளும் ஆக்ரோஷமான பயணமே இந்தப் படத்தின் மையக் கரு.
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகிய படம் என்பதால், அந்தச் சம்பவம் நடைபெற்ற இடங்களிலேயே இந்தப் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது.
திரிஷா சென்னையில் தனது கணவர் சந்தோஷ் பிரதாப் மற்றும் 6 வயது மகனுடன் வசித்து வருகிறார். மகனின் பிறந்த நாளையொட்டி கன்னியாகுமரிக்கு காரிலேயே ரோட் டிராவல் செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளார்கள் திரிஷாவும், சந்தோஷ் பிரதாப்பும்.
திடீரென்று திரிஷா கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. இந்த நேரத்தில் லாங் டிரைவ் செய்யக் கூடாது என்பதால் தனது கணவரையும், மகனையும் மட்டும் அனுப்பி வைக்கிறார்.
சந்தோஷ் பிரதாப்பும், அவரது மகனும் வந்த கார், மதுரை-திருநெல்வேலி சாலையில் இருக்கும் திருமங்கலம் அருகே வரும்போது விபத்து ஏற்பட்டு, இதில் இருவருமே உயிரிழக்கிறார்கள்.
இடிந்து போகிறார் திரிஷா. ஆனாலும் அந்த விபத்து நடந்த பகுதியைப் பார்க்க விரும்பி தனது தோழியான மியா ஜார்ஜூடன் இணைந்து திருமங்கலம் வருகிறார் திரிஷா. இவர்கள் வந்த கார் ரிப்பேராகவே அன்றைய இரவில் அருகில் இருக்கும் திருநங்கை ஒருவரின் வீட்டில் தங்குகிறார்கள் திரிஷாவும், மியாவும்.
அன்றைய இரவில் திரிஷா தூக்கம் வராமல் அந்த சாலையில் நடந்துபோகும்போது அவர் கண்ணெதிரிலேயே ஒரு சிறிய கார், ஊர் எல்லையைக் குறிக்கும் தூணில் மோதி விபத்துக்குள்ளாகிறது. அக்கம்பக்கம் ஓடிச் சென்று ஆட்களைக் கூப்பிட ஓடுகிறார் திரிஷா. ஆனால் யாரும் கிடைக்கவில்லை. திரும்பி வந்துப் பார்த்தால் அந்தக் காரும் அங்கே இல்லை. பெரும் அதிர்ச்சியாகிறார் திரிஷா.
இது குறித்து போலீஸில் புகார் கொடுக்கிறார்கள் திரிஷாவும், மியாவும். போலீஸ் இன்ஸ்பெக்டர் வேண்டாவெறுப்பாக அந்த இடத்தை வந்து பார்த்துவிட்டு “இங்க எதுவுமே நடக்கலையே..?” என்று சொல்லிவிட்டுப் போகிறார். ஆனால் ஏதோ நடந்திருக்கிறது என்று ஏட்டு எம்.எஸ்.பாஸ்கர் மட்டும் சந்தேகப்படுகிறார்.
இதையடுத்து அவருடன் கூட்டணி வைத்து அந்த சாலையில் ஏற்கெனவே நடந்த விபத்துக்களை பற்றி விசாரிக்கிறார் திரிஷா. அந்த விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க.. எல்லாமே ஒரே மாதிரியாக டிரிங்க் அண்ட் டிரைவ் என்று சொல்லியே அதன் பைல்கள் மூடப்பட்டிருப்பதையும் கண்டறிகிறார் திரிஷா.
இதையடுத்துத் தன் கணவர், மகன் சாவிலும் ஏதோ மர்மம் இருப்பதாக சந்தேகப்படும் திரிஷா இது குறித்து தனி மனுஷியாக விசாரிக்கத் துவங்குகிறார். விசாரணையின் முடிவில் என்ன நடந்தது..? நடந்ததெல்லாம் விபத்துக்களா..? அல்லது கொலைகளா..? யார் இதைச் செய்தது..? இதன் பின்னணியில் இருந்தது யார் என்பதுதான் இந்த சஸ்பென்ஸ், திரில்லர் படத்தின் திரைக்கதை.
4 ஆண்டுகளுக்கு முன்பாக தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு இப்போதுதான் திரைக்கு வந்திருக்கிறது.
‘பொன்னியின் செல்வனு’க்கும் முன்பாக திரிஷா நடித்த படம் இது என்றாலும், திரிஷாவை படத்தில் பார்த்தால் அப்படி தெரியவில்லை. என்றென்றும் மாறாத ‘நித்திய கல்யாணி’யைப் போலவே காட்சியளிக்கிறார்.
படத்தின் முற்பாதியில் சேலை காஸ்ட்யூமில் அம்மாவாகத் தோன்றினாலும் அது அநியாயம் போலவே தோன்றுகிறது. பாடல் காட்சிகளில் ஒரு தேவதைபோல ஜொலிக்கிறார் திரிஷா இடைவேளைக்குப் பின்பு தேடுதல் வேட்டையில் இறங்கும்போது வேறொரு திரிஷாவை பார்க்க முடிகிறது.
இந்தப் படத்தின் ஸ்டார் திரிஷாதான் என்று சொல்லும்போது கூடவே இன்னொரு நடிகரும் போட்டிக்கு வருகிறார். அவர் ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர். இந்தப் படத்தின் இடைச் செருகலாய் வரும் கதையில் நடித்திருக்கும் ‘டான்சிங் ரோஸ்’ ஷபீரின் நடிப்புதான் இந்தப் படத்தை மென்மையாய் அணுகுவதற்கும், கிளைமாக்ஸில் கனத்த மனதோடு நம்மை வழியனுப்பியும் வைக்கிறது.
அமைதியின் திருவுருமாய் தன்னுடைய கல்லூரி லெக்சரர் வேலையைச் செய்து வரும் ஷபீர் ஒரு மாணவியால் ஏமாற்றப்பட்டு, பழி வாங்கப்பட்டு வாழ்க்கையின் ஓரத்திற்கே தள்ளப்பட்டு வாழும் அந்த வாழ்க்கையை தனது அழகான நடிப்பினால் ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார்.
இதனாலேயே இந்தப் படத்தில் இவர் செய்திருக்கும் சட்ட விரோதச் செயல்களால் இவர் மீது நமக்கு கோபம் வராமல் தடுத்திருக்கிறது. “எனக்கு ஏன்பா இப்படி..?” என்று அவர் அழுகிற காட்சியிலும், தந்தையை இழந்துவிட்டு பைத்தியம் போல அலைந்து தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருக்கும் காட்சியிலும் மிக யதார்த்தமான நடிப்பைக் காண்பித்திருக்கிறார் ஷபீர்.
இவரைப் போலவே இவரது அப்பாவாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தியும் தன்னுடைய கதாப்பாத்திரத்திற்கேற்ற நடிப்பை குறையில்லாமல் கொடுத்திருக்கிறார். தன் மகனுக்காக ஊரார் காலில் விழுந்து கடன் கேட்கும்போது அந்தக் காட்சி கொஞ்சம் ஓவர்தான் என்றாலும், நடிப்பில் குறையில்லாமல் இருப்பதால் ரசிக்க முடிந்திருக்கிறது.
திரிஷாவின் கணவராக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், ஒரு சில காட்சிகளில் வந்தாலும் தனது வேலையை மிகவும் சரியாக செய்திருக்கிறார். திரிஷாவின் தோழியாக வரும் மியா ஜார்ஜ் தோழி கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மியா ஜார்ஜின் கணவராக வரும் விவேக் பிரசன்னா திடீர் வில்லனாக சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் தனது அனுபவ நடிப்பை பல இடங்களில் காண்பித்திருக்கிறார். கலகக்காரியாக நடித்திருக்கும் செம்மலர் அன்னம் தனது நடிப்பினால் நம்மையும் சேர்த்து மிரட்டியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கே.ஜி. வெங்கடேஷ் தன் ஒளிப்பதிவில் திரிஷாவை ஜொலிக்க வைத்ததோடு படம் முழுவதையுமே அதேபோல் ஜொலிக்க வைத்திருக்கிறார். இரவு நேரக் காட்சிகளை மிகவும் நேர்த்தியாக படமாக்கியதோடு, விபத்து சம்பந்தப்பட்ட காட்சிகளையும் தத்ரூபமாக காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஆனால் சட்டென்று மறந்துவிட்டன. பின்னணி இசையில் கதையின் தன்மையை நாம் உணர்ந்து கொள்ளும் வகையில் விளையாடியிருக்கிறார் சாம்.
விபத்து காட்சிகள், சண்டை காட்சிகளில் படத் தொகுப்பாளர் செய்திருக்கும் செய் நேர்த்தியில் குறையே இல்லை. நன்று.
இந்தியா முழுவதுமே தேசிய நெடுஞ்சாலைகளில் இது போன்ற பல படுகொலைகளும், திருட்டு சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அது போன்ற ஒரு கதையைக் கையில் எடுத்து தனது விறுவிறுப்பான, சுவாரசியமான திரைக்கதையினாலும், நேர்த்தியான படமாக்கிய வித்தையாலும் இந்தப் படத்தை மிகத் தரமான ஒரு படமாக தந்திருக்கிறார் இயக்குநர் அருண் வசீகரன்.
முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் ஒவ்வொரு காட்சியிலும் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் தூண்டிவிட்டிருக்கிறது இயக்குநரின் படைப்பாக்கம்..!
படத்தில் லாஜிக் மிஸ்டேக்குகளும் இல்லாமல் இல்லை. இருந்தாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் கடின உழைப்பைக் கொட்டி, சுவரஸ்யமான திரைக்கதையினால் உருவாகியிருக்கும் இந்த சஸ்பென்ஸ்-திரில்லர் படத்தினை நாமும் பார்த்து, படத்திற்காக உழைத்தவர்களையும் பாராட்டுவோம்!









