full screen background image

‘வாரிசு’ படத் தயாரிப்பாளருக்கு ஏற்பட்டிருக்கும் கலக்கம்..!

‘வாரிசு’ படத் தயாரிப்பாளருக்கு ஏற்பட்டிருக்கும் கலக்கம்..!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அடுத்தாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்று விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படம்.

தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை தெலுங்கு திரையுலகத்தின் முக்கியமான தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கிறார்.

இப்படம் மிகப் பெரிய வசூலை வாரி குவிக்கும் என்றும் தமிழ் திரையுலகில் தன்னை ஒரு பெரிய தயாரிப்பாளராக நிலை நிறுத்தும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு தற்போது சில ஏமாற்றங்களை இந்த வாரிசு’ படம் கொடுத்திருப்பதாக தமிழ் மற்றும் தெலுங்கு படவுலகத்தில் பலமான பேச்சு எழுந்துள்ளது.

இந்த ‘வாரிசு’ படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியிட திட்டமிட்டு வந்தனர். இந்தப் படம் துவங்கியபோது பொங்கல் பண்டிகை படமாக ‘வாரிசு’ மட்டுமே லைனில் இருந்தது. இதனால் 90 சதவிகித தியேட்டர்கள் வாரிசு படத்துக்கே கிடைக்கும். நமக்குப் பெரிய அளவுக்கு லாபம் கிடைக்கும் என்று நினைத்த தயாரிப்பாளர் தில் ராஜூ சந்தோஷத்தில் இருந்தார்.

ஆனால், திடீரென்று ‘வாரிசு’ படத்திற்கு போட்டியாக அஜித்தின் ‘துணிவு’ படமும் அதே பொங்கல் தினத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர் தில் ராஜூவின் கனவில் மிகப் பெரிய ஓட்டை விழுந்துள்ளது.

அஜீத், விஜய் இருவருமே தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்கள் என்பதால் இரண்டு படங்களுக்கும் சரி பாதியாகத்தான் தியேட்டர்கள் கிடைக்கும். இதனால் முன்பு எதிர்பார்த்த அளவுக்கான அதிக திரையரங்குகளில் ‘வாரிசு’ படம் வெளியாக வாய்ப்பில்லை. இதனால் வாரிசு’ படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட வசூலும், பாதிக்குப் பாதி குறையும்.

தமிழில்தான் இந்த நிலைமை என்றால், தெலுங்குலகத்திலும் இந்த ‘வாரிசு’ படம் வெளியாகும் அதே பொங்கல் பண்டிகை தினத்தில் சில முன்னணி தெலுங்கு நடிகர்களின் படங்களும் திரைக்கு வரவிருப்பதாகத் தற்போது தெரிய வந்துள்ளது.

பிரபாஸ் நடிக்கும் ‘ஆதிபுருஷ்’ மற்றும் சிரஞ்சீவி நடிக்கும் ‘மெகா 154’ ஆகிய இரண்டு படங்களும் அன்றைக்கு வெளியாகப் போவதாக கூறப்பட்டு இருந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு பெரிய நட்சத்திர படங்களும் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளன.

 

பாலகிருஷ்ணா நடித்து வரும் அவரது 107-வது படமும், அகில் அக்கினேனி மற்றும் மம்மூட்டி நடிக்கும் ‘அகில்ஸ் ஏஜென்ட்’  படமும் அன்றைக்கு வெளியாகவுள்ளனவாம்.  கடைசி நேர பிரச்சினைகளினால் இந்த 4 படங்களில் நிச்சயமாக 3 படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

இந்தப் படங்களினால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் தியேட்டர்கள் குறைவாகக் கிடைத்து அது ‘வாரிசு’ படத்தின் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து தயாரிப்பாளர் தில் ராஜூ தற்போது பெருத்த கவலையில் இருக்கிறாராம்.

Our Score