full screen background image

தருணம் – சினிமா விமர்சனம்

தருணம் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ழென் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் புகழ் தயாரித்துள்ளார். இப்படத்தினை ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் இணை தயாரிப்பு செய்கிறது.

இந்தப் படத்தில் கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட், ராஜ் ஐயப்பா, கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம்அரவிந்த் ்ரீநிவாசன், ஒளிப்பதிவுராஜா பட்டாசார்ஜி, இசைதர்புகா சிவா, படத்தொகுப்புஅருள் .சித்தார்த், கலை இயக்கம்வர்ணாலயா ஜெகதீசன், பத்திரிகை தொடர்புசதிஷ், சதிஷ் குமார், சிவா (AIM), சண்டை இயக்கம் – Stunner சாம், தயாரிப்பாளர்புகழ்.A, ஈடன்(ழென் ஸ்டுடியோஸ்), இணை தயாரிப்புஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ்.

சென்ற வருடம் வெளியாகி ஹிட் அடித்த தேஜாவு என்ற படத்தை இயக்கிய இயக்குனர் அரவிந்த் சீனிவாசனின் இரண்டாவது திரைப்படம் இது.

இத்திரைப்படம் ஏற்கனவே பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கு பின்பு தியேட்டர்கள் கிடைக்காமல் தள்ளிப் போடப்பட்டு இந்த வாரம் வெளிவந்திருக்கிறது.

இந்த படம் சஸ்பென்ஸ் திரில்லர் வகையைச் சேர்ந்ததுதான். ஆனால் இதன் திரைக்கதை நாம் முன்பே பார்த்திராதது.

நாயகன் கிஷன்தாஸ் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் அதிகாரியாக பணியாற்றுக் கொண்டிருக்கிறார். ஒரு நள்ளிரவில் காட்டுக்கு நடுவில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை படிப்பதற்காக சென்ற இடத்தில் தவறுதலாக அதனுடைய சக போலீஸ் அதிகாரியை சுட்டு கொன்றுவிட்டார். இதன் காரணமாக பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார் கிஷன்தாஸ்.

விசாரணைக்கு ஆஜராவற்காக சென்னைக்கு வந்திருக்கும் கிஷன்தாஸ் தற்செயலாக நாயகி ஸ்முருதி வெங்கட்டை சந்திக்கிறார். இந்த சந்திப்புகள் தொடர்ந்து நடக்க அவரை காதலிக்கவும் செய்கிறார். ஆனால் ஸ்முருதியிடம் தான் ஒரு போலீஸ் அதிகாரி என்பதை மட்டும் சொல்லாமல் மறைக்கிறார்.

கிஷன்தாஸூக்கும், ஸ்முருதிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த நேரத்தில் ஸ்முருதியின் மிக நெருங்கிய நண்பனாக இருக்கும் ராஜ் ஐயப்பா சபல புத்தி காரணமாகவும், பாலியல் வேட்கை கொண்டவனாகவும் இருக்கிறார்.

சில பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி அதை வீடியோ எடுத்து அவர்களை மறுபடியும் தொந்தரவு செய்வதையும் ஒரு நோக்கமாக கொண்டிருக்கிறார் ராஜா ஐயப்பா.

கிஷன்தாஸ் ஒரு போலீஸ் அதிகாரி என்பதை தெரிந்து கொண்ட ராஜ் ஐயப்பா இதை ஸ்முருதியிடம் சொல்லி அவருடைய காதலுக்கு தற்காலிகமாக பிரேக் போட வைக்கிறார்.

மேலும் ஸ்முருதியை எப்படியாவது தான் அடைந்துவிட வேண்டும் என்பதற்காக ஒரு டிரமா போட்டு ஸ்முருதி வெங்கட்டின் வீட்டுக்கு வருகிறார் ராஜ் ஐயப்பா. ஆனால் அங்கே ஏற்படும் மோதலில் தரையில் விழுந்து அடிபட்டு உயிர் இழக்கிறார் ராஜ் ஐயப்பா.

இந்த நேரத்தில் ஸ்முருதியைப் பார்ப்பதற்காக வரும் கிஷன்தாஸ் இதை அறிந்து ஸ்முருதியை போலீசுக்கு போக வேண்டாம் என்று தடுத்து நிறுத்துகிறார். ராஜ் ஐயப்பாவின் கொலையை எப்படியாவது தற்கொலையாக மாற்றிவிடலாம். இந்த வழக்கிலிருந்து ஸ்முருதியைக் காப்பாற்ற தீர்மானித்து சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.

கடைசியில் என்ன நடந்தது..? ராஜ் ஐயப்பாவின் உடலை அப்புறப்படுத்தினார்களா? போலீஸ் வழக்கிலிருந்து ஸ்முருதி வெங்கட் தப்பித்தாரா…? இறுதியில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா…? என்பதுதான் இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படத்தின் திரைக்கதை.

படத்தில் மிக முக்கியத் துணாக இருக்க வேண்டியவர் படத்தின் ஹீரோ கிஷன்தாஸ். ஆனால் அவருக்கு நடிப்பதற்காக பல வாய்ப்புகள் அமைந்தும், அவரிடம் இருந்து முழுமையாக ஒரு நடிப்பை இயக்குநரால் பெற முடியவில்லை என்பது பல காட்சிகளில் தெரிகிறது. ஹீரோவின் நடிப்பு கொஞ்சமாகவே காட்டப்பட்டிருப்பதால் நம்மால் இவரை ஹீரோவாகவே ஏற்றுக் கொண்டு படத்தை பார்க்க முடியவில்லை என்பது வருத்தமான ஒரு விஷயம்.

படத்தின் பெகும் பகுதியைத் தாங்கிப் பிடித்திருப்பது நாயகி ஸ்முருதி வெங்கட்டுதான். அவருடைய இயல்பான நடிப்பும், படபடப்பான நடிப்பும்தான் இடைவெளிக்கு பின்பு நம்மையும் அதே உணர்வோடு படத்தை கடைசி வரையிலும் பார்க்க வைத்திருக்கிறது.

இன்னொரு ஹீரோ போல நடித்திருக்கும் ராஜ் ஐயப்பா தனது வில்லத்தனத்தை அழகாக காட்டி இருக்கிறார். செத்தப் பொணமாக நடித்தும் கொஞ்சம் பெயர் வாங்கியிருக்கிறார். இவருடைய அம்மாவாக நடித்த கைலாசமும் வருகின்ற நான்கு காட்சிகளிலும் தன்னுடைய பெயரை அழகாக பதிவு செய்திருக்கிறார்.

ஹீரோவின் நண்பராக நடித்திருக்கும் பாலசரவணனின் இடைவேளைக்கு முன்பான காட்சிகளில் சில சில ஒன் லைன் காமெடியை விட்டு, நம்மை ரிலாக்ஸாக வைக்க உதவியிருக்கிறார்.

இது போன்ற படங்களுக்கு மிகவும் தேவையான பின்னணி இசையும், ஒளிப்பதிவும் இந்த படத்திற்கு நிறையவே உதவி இருக்கின்றன ராஜா பட்டச்சார்ஜியின் ஒளிப்பதிவில் குறைவில்லை. பாடல் காட்சிகளை தவிர ஏனைய காட்சிகளில் படம் ஒரு பரபரப்பாக இருக்க வேண்டும் என்கின்ற சூழலுக்காக கேமரா கோணங்களில் கொஞ்சம் வித்தை காட்டி நம்மை படபடக்க வைத்திருக்கிறார்.

இந்த பரபரப்பு கடைசி வரையில் இருக்க வேண்டும் என்பதற்காக காட்சிகளை வேகப்படுத்தும்விதத்தில் அடுத்தடுத்த காட்சிகளை தொகுத்து அளித்திருக்கும் படத் தொகுப்பாளருக்கும் நமது நன்றி.

தர்புகா சிவாவின் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. ஆனால், ஒரு முறை கேட்கலாம் என்ற வகையில்தான் இருக்கிறது. ஆனால் பின்னணி இசை அமைப்பாளர் மிகவும் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். தேவையில்லாத இடங்களில்கூட இசையை அடக்கி வாசித்து நம்மை படத்தை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறார்.

கிரைம், சஸ்பென்ஸ், திரில்லர் திரைப்படங்களுக்கு எப்போதுமே இருக்கின்ற ஒரு வகையான திரைக்கதையை முற்றிலும் தவிர்த்து விட்டு இந்த திரைக்கதையை வேறுவிதமாக நாம் இதுவரையில் பார்க்காத வகையில் ஒரு புதுமையான வடிவத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அரவிந்த் சீனிவாசன்.

ஒரு வீட்டுக்குள் மூன்று பேர். அதில் ஒரு சடலம். எதிர்பாராமல் நடந்த கொலை. அந்தக் கொலையை தற்கொலையாக மாற்ற வேண்டும். இதில் இருந்து அவர்கள் தப்பிக்க வேண்டும். 20 மாடி கொண்ட அப்பார்ட்மெண்ட். அதிலிருந்து பாடியை அப்புறப்படுத்த வேண்டும். இவர்களும் அந்த வீட்டுக்கு வந்து போனதாக தெரியக் கூடாது. சிசிடிவி ஃபுட்டேஜ்களில் இருந்து தப்பிக்க வேண்டும்…” – இப்படி பல வித பிரச்சனைகளையும் முன் வைத்து, அதையும் நாம் நம்புகின்ற விதத்தில் கொஞ்சம் எதார்த்தமாக லாஜிக் எல்லை மீறல்கள் அதிகமாக இல்லாமல் பார்த்துக் கொண்டு இந்த படத்திற்கு திரைக்கதை அமைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அரவிந்த் சீனிவாசன்.

படத்தின் முற்பாதியில் கதை இதுதான் என்பது தெரியாத வகையில் அப்படியும், இப்படியுமாக சென்று கொண்டே இருப்பதும் இடைவேளை பிளாக்கில்தான் இந்த படத்தின் கதை என்ன என்பதை நமக்கு தெரிய வருகிறது என்பதும் இந்த படத்துக்கு ஒரு மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்டுதான்.

சஸ்பென்ஸ், கிரைம் திரில்லர் கதைகளில் அதிகமாக லாஜிக் பார்க்க வேண்டும் என்றாலும், இந்த படத்திலும் அதை நாம் அதிகம் பார்க்காமல் இருந்து விடுவோம்.

ஆனால், ஒரு காவல் துறை அதிகாரி.. ஒரு கொலையை தனது காதலிக்காக மூடி மறைக்க நினைப்பது ஹீரோவின் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு டோட்டல் டேமேஜாகிவிட்டது.

எப்படியிருந்தாலும் இதுவரையிலும் பார்த்திராத ஒரு புதிய திரைக்கதையில் இரண்டு மணி நேரம் ஒரு சஸ்பென்ஸ், கிரைம், திரில்லரை பார்க்கக் கூடிய வகையில் பார்க்க வைத்திருக்கும் இந்த தருணம் திரைப்படம், நிச்சயமாக உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும்.

RATING : 3.5 / 5

Our Score