தெறி விவகாரம் – உச்சக்கட்ட மோதலில் தயாரிப்பாளர்கள் – தியேட்டர் உரிமையாளர்கள்

தெறி விவகாரம் – உச்சக்கட்ட மோதலில் தயாரிப்பாளர்கள் – தியேட்டர் உரிமையாளர்கள்

இளைய தளபதி விஜய் நடிப்பில் கடந்த 14-ம் தேதி வெளியான ‘தெறி’ திரைப்படம், தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 72 தியேட்டர்களில் இன்னமும் வெளியாகவில்லை.

“அந்தப் பகுதிகளில் ‘தெறி’ படம் வெளியாகாமல் இருப்பதற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான ரோகிணி பன்னீர்செல்வம்தான் காரணம்…” என்று ‘தெறி’ படத்தின் தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான கலைப்புலி எஸ்.தாணு குற்றம்சாட்டியுள்ளார்.

இது பற்றி நேற்றைக்கு முன்தினம் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. அப்போது அவர் பேசும்போது, “இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ரோகிணி பன்னீர்செல்வத்தின் மகன் திருமணத்திற்கு நடிகர் விஜய்யும், சூப்பர் ஸ்டார் ரஜினியும் வரவில்லை. அன்றைக்கு ரஜினி மலேசியாவில் ஷூட்டிங்கில் இருந்தார். விஜய்யும் தனது பட வேலைகளை முடித்துக் கொண்டு குடும்பத்தோடு வெளிநாட்டுக்கு சுற்றுலா போயிருந்தார். இதனை மனதில் வைத்துதான் ரோகிணி பன்னீர்செல்வம் இந்த நேரத்தில் பழி வாங்குகிறார்.

மேலும், பன்னீர்செல்வம் கூறுவதுபோல நாங்கள் ஒரு தியேட்டருக்கு 1 கோடி, ஒன்றரை கோடி ரூபாயை மினிமம் கியாரண்டியாக கேட்கவே இல்லை. எந்தத் தியேட்டரும் இந்த அளவுக்குத் தொகையைத் தரவே மாட்டார்கள். வசூலும் ஆகாது. இது திரையுலகத்தில் இருக்கும் அனைவருக்குமே தெரியும்.

நான் இந்தப் படத்தின் செங்கல்பட்டு உரிமையை மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு 7.50 கோடிக்கு விற்பனை செய்தேன். அந்த நிறுவனம் சென்னை சத்யம் தியேட்டரின் ஒரு அங்கமான ஸ்பை சினிமாஸ் நிறுவனத்திற்கு அதனை விற்பனை செய்துள்ளது. ஸ்பை சினிமாஸ்தான் செங்கல்பட்டு ஏரியாவில் இந்த ‘தெறி’ படத்தை விநியோகம் செய்யும் உரிமையைப் பெற்றுள்ளது.

ரோகிணி பன்னீர்செல்வம் எப்போதுமே.. பெரிய படங்கள் ரிலீஸாகும்போதெல்லாம் இது போல் ஏதாவது ரகளை செய்து கொண்டேயிருப்பார். அவருக்கு பணம் கொடுத்தால் மட்டுமே தியேட்டர்கள் கிடைக்கும் என்று மிரட்டுவார். அவரது மிரட்டலுக்கு பயந்து முன்பு ஒரு சிலர் பணம் கொடுத்து தங்களது படங்களை வெளியிட்டார்கள். அதுதான் இப்போது ஆபத்தாகிவிட்டது.

மறைந்த திரையுலகப் பெரியவரும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தை தோற்றுவித்தவருமான டி.ராமானுஜத்திற்கு பிலிம் சேம்பர் வளாகத்தில் எனது சொந்த செலவில் சிலை வைத்தவன் நான். அவர்களை மதிக்காமல் இருப்பேனா..? இப்போது நான் தயாரித்திருக்கும் படத்திற்கே மறைமுகமாக தடை போடுகிறார்கள்.. இது எந்த வகையில் நியாயம்..?” என்று கேள்வியெழுப்பினார்.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு உட்லண்ட்ஸ் தியேட்டரில் நடைபெற்ற தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசரப் பொதுக்குழுக் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் தலைவரான ரோகிணி பன்னீர்செல்வம்.

அவர் தன் பேச்சில், “தெறி’ படம் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியாகாமல் இருப்பதற்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவரான தாணுதான் காரணம். அவர் அதிகப் பணத்துக்கு ஆசைப்பட்டதுதான் பிரச்சினையின் துவக்கப் புள்ளி.

தனிப்பட்ட குற்றச்சாடுக்களை என் மீது கூறி, ‘தெறி’ வெளியாகாததற்கு நானே காரணம் என்று பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார் தாணு.

பணம் போட்டு படத்தை எடுத்தவர் அவர். நான் ஒற்றை மனிதனாக எப்படி இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு தடையாக இருக்க முடியும்..? இது தாணுவே எடுத்த முடிவு. அவர்தான் விடாப்பிடியாக செங்கல்பட்டு பகுதி தியேட்டர்களுக்கு படத்தை தராமல் இருக்கிறார்.

‘கணிதன்’ படத்திற்கு, விநியோகஸ்தர்களிடம் மினிமம் கேரண்டியாக 25 லட்சம் கேட்டிருக்கிறார். அவர் படத்திற்கு நாங்கள் எப்படி வெற்றியைத் தீர்மானித்து மினிமம் கேரண்டி கொடுக்க முடியும்..?

‘தெறி’ பிரச்சினையின்போதே, ‘இருவரும் ஒரு மேடையில் அமர்ந்து பத்திரிகையாளர்கள் முன் பேசுவோம்’ என்று கூறினேன். இப்போதுவரை அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. தனியாக பத்திரிகையாளர்களிடம் பேசி, எனக்கு சாபம் கொடுத்துக்  கொண்டிருக்கிறார்.

என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, தன்னையே தாழ்த்திக் கொண்டிருக்கிறார் தாணு. அந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் தாணு பதில் சொல்லியே ஆகவேண்டும். உண்மையில் என்மீது தவறு இருந்தால், நான் சினிமாவை விட்டே விலகத் தயார். 

தாணு இப்படியெல்லாம் செய்து கொண்டிருந்தால், ரசிகர்களை படங்கள் சென்று சேராது. மேலும் சிக்கல்களையே உருவாக்கும்.

தமிழகத்திலேயே அதிக தியேட்டர்கள் இருக்கும் செங்கல்பட்டு ஏரியாவில் இனிமேல் எந்தப் படத்தையும் எம்.ஜி. கொடுத்து திரையிட மாட்டோம். சதவிகித அடிப்படையில் மட்டுமே திரையிடுவோம்.

ரஜினி நடித்திருக்கும் ‘கபாலி’ படத்தை செங்கல்பட்டு ஏரியாவுக்கு தர மாட்டேன் என்று தாணு இப்போது சொல்கிறார்.

செங்கல்பட்டு ஏரியாவுக்கு ‘கபாலி’ திரைப்படத்தைத் தராவிட்டால் தமிழகம் முழுவதுமே ‘கபாலி’ படத்தைத் திரையிட அனுமதிக்க மாட்டோம். தடை செய்வோம்.

இந்த விஷயத்தில் ரஜினி நேரடியாக தலையிட வேண்டும். தாணு தலையிடாமல், ரஜினியே அவர் அலுவலகத்திற்கு எங்களை அழைத்துப் பேசினால் ‘கபாலி’ படத்தை நாங்கள் வெளியிடத் தயார். படமும் ரசிகர்களைச் சென்று சேர்ந்து, அது வெற்றி பெற எத்தனை உழைக்க வேண்டுமோ அத்தனை தூரமும் உழைக்க நாங்களும் தயார்.

என் மகன் திருமணத்திற்கு விஜய்யும், ரஜினியும் வராததாலேயே அவர்களது படத்திற்கு நான் பிரச்சினை செய்வதாக தாணு சொல்லியிருக்கிறார். விஜய், ரஜினி மட்டுமல்ல.. பல முன்னணி நடிகர்கள்கூடத்தான் என் மகன் கல்யாணத்துக்கு வரவில்லை. பத்திரிகை கொடுப்பது மட்டுமே என்னுடைய வேலை. வருவதும், வராததும் அவர்களின் இஷ்டம்.  என் மகன் திருமணத்திற்கு வராத கார்த்தியின் ‘தோழா’, அஜீத்தின் ‘வேதாளம்’ படம்கூட செங்கல்பட்டு ஏரியாவில் ரிலீஸானதே..? இது தாணுவுக்குத் தெரியாதா..?

இப்படியே தொடர்ந்து என்னுடைய சொந்தப் பிரச்சினைக்காகத்தான் ‘தெறி’ படத்திற்குத் தடை போட்டுள்ளேன் என்று தாணு அபாண்டமாக சொல்லிக் கொண்டேயிருந்தால், அவருடைய மறுபக்கத்தையும் நாங்கள் வெளியில் சொல்ல வேண்டி வரும்..” என்று எச்சரித்தார்.

தொடர்ந்து செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் கண்ணப்பன் பேசுகையில், “தெறி படம் வெளியாகாததற்கு முழுக்க முழுக்க தாணுவின் அடாவடியே காரணம். தேவையில்லாத, தனிப்பட்ட விஷயங்களை அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.

‘பன்னீர்செல்வத்தை சங்கத்திலிருந்து நீக்க வேண்டும்’ என்கிறார். எங்கள் சங்கத்தில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல அவருக்கு உரிமையில்லை. எங்களை ‘தேர்ட் பார்ட்டி’ என்கிறார். பணம் கொடுத்து படம் வாங்கும் நாங்கள் எப்படி தேர்ட் பார்ட்டி ஆவோம்..? தாணு நாவை அடக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.

ரஜினியின் கால்ஷீட்டை எப்படிப் பெற்றீர்கள்..? ‘லிங்கா’ படத்தின் நஷ்டத்தை எப்படி ஈடு செய்தீர்கள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியும். ‘லிங்கா’ படத்தின் நஷ்டத்திற்காக ரஜினி கொடுத்த 12 லட்சத்தை தாணு எங்களுக்கு கொடுக்கவில்லை. ரஜினியே நேரடியாக எங்களிடம் கொடுத்திருந்தால், இந்தப் பிரச்சினையே வந்திருக்காது.

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக, சங்கத்திற்காக தாணு என்ன செய்தார்..? ரஜினியை வைத்து படமெடுக்க வேண்டும் என்ற  அவர் கனவை சாத்தியமாக்கிக் கொண்டார். அவ்வளவுதான்..!

எங்கள் தொழில், படம் வெளியிடுவது. எங்களுக்கு இந்த நடிகர், அந்த நடிகர்  என்ற பாரபட்சம் கிடையாது. இப்பொழுதும், ரஜினி பழைய முறைப்படி அவரே அழைத்து படத்தைக் கொடுத்தால் ‘கபாலி’ படத்தை வெளியிடத் தயார்.

தாணு எங்கள் மீது சொன்ன குற்றச்சாட்டுக்கும், சுமத்திய களங்கங்களுக்கும் விளக்கம் அளிக்க அவர் பத்திரிகையாளர்கள் முன்பு எங்களை அழைத்து பேசவேண்டும். இருபது நாட்களாக நாங்கள் அழைத்துக் கொண்டிருக்கிறோம். அவர் பதிலே சொல்லாமல் இருக்கிறார்..” என்றார்.

இதற்கிடையில் நேற்று மாலை அவசரமாகக் கூடிய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கூட்டத்தில் ‘தெறி’ பிரச்சினைக்கு தீர்வு வரும்வரையிலும் செங்கல்பட்டு ஏரியாவில் எந்தவொரு புதிய தமிழ்ப் படத்தையும் வெளியிடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளார்களாம்.

இந்த திடீர் முடிவினால் அடுத்த வாரம் வெளியாகக் கூடிய சில புதிய தமிழ்ப் படங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகியுள்ளார்கள். மேலும் இரு தரப்பினருக்கும் இடையில் சமரசம் செய்து வைக்கவும் திரையுலகப் புள்ளிகள் சிலர் இறங்கியுள்ளார்களாம்.

விரைவில் சுமூகத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்..!

Our Score