full screen background image

தங்கலான் – சினிமா விமர்சனம்

தங்கலான் – சினிமா விமர்சனம்

கோலார் தங்க வயலைக் கதைக் களப் பின்னணியாகக் கொண்டு, ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகியிருக்கும் இந்தப் படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜாவும், நீலம் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித்தும் இணைந்து பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகன், நடிகர்கள் பசுபதி, ஹரி கிருஷ்ணன், அன்பு துரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

.கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். தமிழ் பிரபா இணை கதாசிரியராக பணியாற்ற, கலை இயக்கத்தை எஸ்.எஸ்.மூர்த்தி கையாள, படத் தொகுப்பு பணிகளை ஆர்.கே.செல்வா கவனிக்க, சண்டை காட்சிகளை ஸ்டன்னர் சாம் அமைத்திருக்கிறார். எழுதி, இயக்கியிருப்பவர் பா.ரஞ்சித்.

கர்நாடகாவில் இருக்கும் கோலார் தங்க வயலின் உருவாக்கத்தைப் பற்றிய உண்மைக் கதையில் சில கற்பனைகளையும் கலந்து கட்டிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.

1854-ம் ஆண்டு அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் தனது குடும்பம், உறவுகளுடன் வாழ்ந்து வரும் விக்ரமுக்கு மனைவியும் 5 பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

ஆங்கிலேயரின் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு உள்ளூர் தலையாரியின் ஆளுமையில் இருக்கும் அந்த ஊரில் தனக்கென்று இருக்கும் 2 காணி நிலத்தில் விவசாயம் செய்து பிழைத்து வருகிறார் விக்ரம்.

ஊர்த் தலையாரிக்கு நிலத்தைக் குத்தகைக்கோ, விலைக்கோ கொடுக்க மறுத்ததால் கோபம் கொண்ட தலையாரியின்  அடியாட்கள், விளைச்சல் விளைந்து வெள்ளாமையை அறுவடை செய்து பயிரை உதிர்த்து நெல்லை பரப்பி வைத்திருந்த இடத்தில் தீயைப் பற்ற வைத்து மொத்த விளைச்சலையும் நாசமாக்குகிறார்கள்.

ஒரு வருடத்தின் கடின உழைப்பும் வீணாகிப் போய், நிலத்துக்குண்டான அரசு வரியையும் கட்டியாக வேண்டிய கட்டாயத்தில் சிக்கியிருக்கிறார் விக்ரம்.

இந்த நேரத்தில் தமிழக, கர்நாடக எல்லையோரம் இருக்கும் கோலார் பகுதியில் தங்கம் கிடைப்பதாக மைசூர் மகாராஜா மூலமாக ஆங்கிலேயே அதிகாரிகள் அறிகிறார்கள். அந்தத் தங்கத்தை வெட்டியெடுக்க டேனியல் என்ற ஆங்கிலேயர் முனைகிறார்,

இதற்காக விக்ரம் இருக்கும் ஊருக்கு வரும் டேனியல், தங்கத்தை வெட்டியெடுக்க ஆட்கள் வேண்டும் என்கிறார். ஊரில் இருக்கும் பெரும்பான்மையான ஆண்கள் வர மறுக்க.. விக்ரம், பசுபதி, ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் மட்டுமே இதற்கு ஒத்துக் கொண்டு டேனியலுடன் கோலார் நோக்கி செல்கிறார்கள்.

இவர்களுடைய இந்த தங்கத்தை வெட்டியெடுக்கும் முயற்சி வெற்றி பெற்றதா..? இல்லையா..? என்பதுதான் இந்தத் ‘தங்கலான்’ படத்தின் கதை.

‘அந்நியன்’, ‘ஐ’ என்ற படங்களின் வரிசையில் தன்னுடைய உடல் மாற்றத்துடன் கூடிய நடிப்பைக் காட்ட வாய்ப்பு இருப்பதால்தான் இந்தப் படத்தை விக்ரம் தேர்வு செய்துள்ளார் என்பது படத்தைப் பார்த்தாலே தெரிகிறது.

கமல்ஹாசனுக்கு அடுத்தப்படியாக உடல் ரீதியாகவும் மாற்றிக் கொண்டு தன்னை வருத்திக் கொண்டு நடிக்கும் அளவுக்கு தீவிர நடிப்புத் திலகமாக இருக்கும் விக்ரம் இந்தப் படத்தில் 2 வேடங்களில் நடித்துள்ளார். இப்போதைய விக்ரமின் பூட்டனாக நடித்திருக்கும் தாத்தா விக்ரமுக்கும் அதே காஸ்ட்யூம்தான் என்பதால் இதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

நீட்டமாக முடி வளர்த்து, மூக்கில் வளையம் கோர்த்து, கோவணத்தை அணிந்து கொண்டு அக்கால எளிய மனிதனாக.. அந்த வட்டார மொழியை அலட்சியமாகப் பேசி, அனைத்துவித நடிப்பையும் தனது உடல் மொழியில் கொணர்ந்து காட்சிக்குக் காட்சி, ஷாட் பை ஷாட் கொடுத்திருக்கும் விக்ரமின் நடிப்பைப் பற்றி விமர்சனம் செய்தாலே அது முட்டாள்தனமாகும். அந்த அளவுக்கு படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் தங்கலான் விக்ரம்.

பிள்ளைகள் மீதான பாசம், மனைவியுடன் கொஞ்சல் பேச்சு, மனைவி மற்றும் சக பெண்களுடன் பேசும் கலகலப்பான பேச்சுக்கள்.. என்று விக்ரமின் சிரித்த முகத்தைப் பார்க்கும் அதே நேரம் சண்டை காட்சிகளிலும் அனலைத் தெறிக்க விட்டிருக்கிறார் விக்ரம்.

தலையாரியின் ஆட்களுடன் நடக்கும் மோதலில் காட்டும் ஆவேசம்.. பூட்டன் விக்ரம் மாளவிகாவின் ஆட்கள் மற்றும் தங்கத்தைத் தேடி வரும் ராஜாக்களின் வீர்ர்களுடன் போடும் சண்டைகள்.. ‘தங்கலான்’ விக்ரமின் கோலார் வயல் சண்டை காட்சிகள் என்று அத்தனையிலும் அனல் பறக்கிறது. விக்ரம் தனது உடலைப் பற்றிக் கவலையேபடாமல் நடித்திருக்கிறார் என்பது சண்டை காட்சிகளில் மட்டும் தெரிகிறது.

வசனங்களை மிக வேகமாகப் பேசி நடித்திருப்பதும், டேனியலுக்கும் அவருக்குமான நன்றியுணர்வு மிக்க நட்பு துளிர்வதும், தன் மகனது நிலைமையைப் பார்த்துப் பதறும்போதும், மகளின் மரணத்தின்போது இடிந்துபோய் அமர்வதுமாய்.. எந்த விக்ரமும் சோடை போகவில்லை என்பது மட்டும் உண்மை. விக்ரமுக்கு நிச்சயமாய் தேசிய விருதும், மாநில விருதும் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

விக்ரமின் மனைவியாய் நடித்திருக்கும் பார்வதியின் ஆக்ரோஷ நடிப்பு விக்ரமுக்கே சவால் விட்டிருக்கிறது. லைவ் ரிக்கார்டிங் என்பதால் அந்த வட்டார மொழியை சரளமாகப் பேசி எப்படி நடித்து முடித்திருக்கிறார் என்பதை நினைத்தே பார்க்க முடியவில்லை.

புத்தம் புதிய ஜாக்கெட்டை அணிந்து கொண்டு சந்தோஷத்தில் திளைக்கும் அந்தப் பார்வதியைப் பார்த்தவுடன் பிடித்துப் போகிறது. டேனியலின் கொடூரத்தைப் பார்த்து விக்ரமிடம் சீறும்போதும், கோலார் வயல் காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் நடிப்பும் ஒரு சிறந்த நடிகை, சிறந்த படத்தில் இடம் பெற்றுள்ளார் என்பதை காட்டுகிறது.

சூனியக்காரி ‘ஆரத்தி’யாக நடித்திருக்கும் மாளவிகாவின் வெறித்தனமான நடிப்பும், ஆக்ரோஷமான சண்டை காட்சிகளும், தந்திரமான வசனம் பேசும் சூனியக்காரி பேச்சும் ரசனையானவை. காதுகளில் ரத்தம் வரும் அளவுக்கு அவர் கத்திக் கூப்பாடு போடும் காட்சிகளெல்லாம் பயங்கரமானவை. மேக்கப்பும், உடையும் மாளவிகாவை வேற்றுலக பெண்ணாகக் காட்டுகிறது.

ராமானுஜர் வழி வந்த பெருமாளின் தொண்டனாக நடித்திருக்கும் பசுபதி இன்னொரு பக்கம் மொத்தக் கூட்டத்தையும் கவர்ந்திழுக்கிறார். “பெருமாள் ஒருவரே கடவுள்” என்று சொல்லும் இவரும் விக்ரமின் மகனிடம், “வந்து பூணூல் போட்டுக்கோ…” என்று சொல்லும்போது அரசியல் பேசுபவராக மாறி.. கடைசிவரையிலும் அரசியல் பேசியே ஓய்ந்து போகிறார்.

ஹரிகிருஷ்ணனின் அப்பாவி இளைஞனின் பேச்சும், மனைவியைப் பிரிந்த ஏக்கத்தில் அழுது புலம்பி, மனைவியைப் பார்த்த சந்தோஷத்தில் பேசும் பேச்சும், இவருடைய சோகமான முடிவும் இவர் மீதான சிம்பதியை அதிகப்படுத்தியுள்ளது.

மேலும் ஆங்கிலேய துரையாக நடித்திருக்கும் டேனியலும், முன்சீப்பாக நடித்தவரும், மற்றும் உடன் நடித்திருக்கும் அத்தனை நடிகர், நடிகைகளும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளார். அந்தக் கழுதை உட்பட..! பாராட்டுக்கள் இயக்குநரே..!

இது போன்ற வரலாற்றுப் புனைவுகளில் தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் முக்கியமாகத்தான் இருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான்..! கிஷோர்குமாரின் ஒளிப்பதிவும் ஒரு கதாப்பாத்திரமாகவே கடைசிவரையிலும் வலம் வந்திருக்கிறது. இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சி மற்றும் ஒவ்வொரு ஷாட்டிலும் கேமிராவின் வித்தை கலந்துதான் இருக்கிறது.

சண்டை காட்சிகள், ஊர்க் காட்சிகள்.. கோலாரை நோக்கிப் பயணிக்கும் காட்சிகள்.. கோலார் வயலில் நடக்கும் தங்கம் தேடும் காட்சிகள்.. பாடல் காட்சிகள் என்று அனைத்திலும் கேமிராமேனின் வித்தை கண் கட்டு வித்தையாகவே மாறியிருக்கிறது.

சண்டை இயக்குநரின் அற்புதமான இயக்கத்தில் அத்தனை சண்டை காட்சிகளும் வேறு வேறாக அமைந்து ரசிக்க வைக்கின்றன. படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரும் விழுப்புண்களை வாங்கியிருப்பார்கள் என்பது திண்ணம்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் அனைத்துப் பாடல்களும் ஹிட்டடித்துவிட்ட நிலையில் பாடல் காட்சிக் திரையிலும் ஒரு மாயாஜாலா வித்தையைக் காட்டியிருக்கிறது. ‘தங்கலான்’ பாடல் தியேட்டரைவிட்டு வெளியில் வரும்போது நம் காதில் ஒலித்து நம்மை இம்சை செய்கிறது.

முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் பின்னணி இசை நம் காதைக் கிழித்துவிடுவதைப் போலவே அமைந்துவிட்டது எதனால் என்று தெரியவில்லை. லைவ் ரிக்கார்டிங் பெஸ்ட் என்று காட்டவா..?! சோதனைடா சாமி..!

மிக அதிக நாட்கள் படப்பிடிப்பு, மிக அதிக காட்சிகள், ஷாட்டுகள் என்று 3 படங்களுக்கு உரித்தான காட்சிகளை ஒரே படமாக ஆக்க பெரிதும் கஷ்டப்பட்டு செய்திருக்கும் படத் தொகுப்பாளருக்கும் நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..! ஆனால் படத்தின் பிற்பாதியில் செய்திருக்கும் குழப்பத்தினை படத்தொகுப்பாளரே சரி செய்திருக்கலாம்..!

கருஞ் சிறுத்தை, அணி, அணியாய் வந்து குவியும் பாம்புகள், வெடி விபத்துக்கள் என்று சிலவற்றை கிராபிக்ஸில் செய்வதாகச் சொல்லி குறைவான தரத்துடன் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது போன்ற மிகப் பெரிய பட்ஜெட் படங்களுக்கேற்ற வகையில் கிராபிக்ஸையும் செய்திருப்பது நியாயமானது..!

கலை இயக்குநர் மூர்த்தியின் கை வண்ணத்தில் விக்ரமின் கிராமம், செல்லும் பாதைகள், தங்கக் குன்று, விளைநிலங்கள், நடித்தவர்களின் உடை, அணிகலன் வடிவமைப்பு, வீடுகளின் வடிவமைப்பு என்று அத்தனையும் பார்த்துப் பார்த்து செய்யப்பட்டுள்ளது. பாராட்டுக்கள்..!

ஒட்டு மொத்தமாய் பார்க்கப் போனால், பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ஒரு குறையுமில்லை. படத்தில் எந்தவொரு காட்சியிலும் ஒரு ஜூனியர் கதாப்பாத்திரம்கூட சும்மா நிற்கவில்லை. அத்தனை பேரும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் தவறெல்லாம் கதை, திரைக்கதையில்தான்..!

கோலார் தங்க வயல் உருவான கதை மட்டுமே என்று நினைத்துப் படத்தை உருவாக்கியிருந்தாலே போதுமானது. ஆனால் தேவையில்லாமல் சூனியக்காரி கதையைத் திணித்தது படத்துக்கு மிகப் பெரிய பேக் டிராப்பாக்கிவிட்து.

விக்ரம் இந்த சூனியக்காரியை வைத்து அடிக்கடி கனவு கண்டு கண் முழிப்பது.. இப்போது நடந்தது கனவா.. அல்லது நிஜமா என்று நம்மை நாமே கேள்வி கேட்க வேண்டியதைப் போன்று காட்சிகள் வைத்தது..  பறையர் இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் அடிமைகளாக்கப்பட்டார்கள் என்பது வரலாற்று உண்மைதான். இல்லையென்று மறுக்கவில்லை. அதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.

இதற்கெதற்கு தேவையில்லாமல் புத்தர் சிலை போன்றதைக் காண்பித்து ஒரு பிராமண ஆள் அந்த சிலையை உடைத்தெரிய சொல்லும்படியாகவும், சூனியக்காரியின் சிலையை வைத்து ஒரு டிராமா போடுவதாகவும்.. தேவையற்றக் காட்சிகளை கடைசிவரைக்கும் கொண்டு சென்றது படத்தை நேர்க்கோட்டில் புரிந்து கொள்ளப் பெரிதும் சிரமத்தைக் கொடுத்துவிட்டது.

இதுவெல்லாம் இல்லாமல் சும்மாவேனும் கோலாரை உருவாக்கிய தொழிலாளர்கள் பட்ட கஷ்டமாக இந்தக் கதையை நகர்த்தி, திரைக்கதையை அமைத்திருந்தால் நிச்சயமாகப் படம் இப்போது இருப்பதைவிடவும் சிறப்பாக இருந்திருக்கும்.

போதாக்குறைக்கு அக்காலத்திய வட ஆற்காடு வட்டார பேச்சு வழக்கும் பாதி படத்தினை புரிந்து கொள்ள முடியாத சூழலை ஏற்படுத்திவிட்டது. அதிலும் அத்தனை கதாப்பாத்திரங்களும் வசனங்களை படு வேகமாகப் பேசி நடித்திருப்பதால் பாதி வசனங்களை ரசிகர்களால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.

படத்தின் முடிவில் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்பதையே சொல்லாமல் குறிப்பால் உணர்த்துவதுபோல முடித்திருப்பது ஏற்புடையதல்ல. புத்தரின் மர்மமான மெளன சிரிப்பைப் போலவே இந்தப் படத்தின் கதைக் கருவும் மர்மமாகவே இருக்கிறது.

எது எப்படியிருந்தாலும் விக்ரமின் நடிப்பும், பா.ரஞ்சித்தின் இயக்கமும் சேர்ந்து இந்தப் படத்தை தமிழ் சினிமாவின் மிக முக்கியமான வரலாற்றுப் படமாக உயர்த்தியிருக்கிறது. அனைத்து வகையான விருதுகளையும் மொத்தமாக அள்ள, இந்தப் படக் குழுவினர் காத்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

தங்கலான் – தங்கம் தேடிய கதை..!

RATING : 3.5 / 5

Our Score