full screen background image

டிமான்ட்டி காலனி-2 – சினிமா விமர்சனம்

டிமான்ட்டி காலனி-2 – சினிமா விமர்சனம்

ஹாரர் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் விஜய் சுப்பிரமணியன், R ராஜ்குமார் மற்றும் இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலசந்திரன் இப்படத்தை வழங்குகிறார்.

இப்படத்தில் நடிகர் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர் இருவரும் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை டி.குமரேஷ் கவனிக்க,  கலை இயக்கத்தை ரவி பாண்டி மேற்கொண்டிருக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய இயக்குநரான அஜய் ஞானமுத்துவே, இந்த 2-ம் பாகத்தையும் இயக்கியிருக்கிறார்.

டிமான்ட்டி காலனி’ முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலிருந்துதான் இந்த 2-ம் பாகம் படம் தொடங்குகிறது, முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் ‘சீனிவாசன்’ என்ற அருள்நிதி இறந்துவிடுவதைப்போல காட்சிப்படுத்தியிருந்தார்கள். ஆனால், இந்த 2-ம் பாகத்தில் அவரை உயிர்ப்பித்திருக்கிறார்கள்.

‘டெபி’ என்ற பிரியா பவானி சங்கரும்,  அவரது மாமனாரான அருண் பாண்டியனும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ‘சீனிவாசன்’ என்ற அருள்நிதியை காப்பாற்றித் தங்களுக்குச் சொந்தமான மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளிக்கின்றனர்.

பிரியா பவானி சங்கரின் கணவனான சர்ஜனோ காலித், புற்று நோயாளியாக  இருந்து அதிலிருந்து மீண்டவர். அந்த நேரத்தில் காரணமே இல்லாமல் தற்கொலையும் செய்து கொள்கிறார்.

தன் கணவரின் தற்கொலைக்கான காரணத்தினை அறிய, பிரியா பவானி சங்கர் அவரது ஆவியுடன் பேச விரும்புகிறார். இதற்காக புத்த மதத் துறவிகளின் உதவியை நாடுகிறார்.

அவர்கள், பிரியா பவானி சங்கரை தங்களது மந்திர சக்திகளின் மூலம், ஆவிகளின் உலகத்திற்குள் அனுப்புகின்றனர். அந்தவுலகத்திற்குள் இருக்கும் வேறு ஒரு ஆவி பிரியா பவானி சங்கரிடம் தன் கணக்கைத் தீர்க்க உதவி கேட்கிறது.

இந்த நேரத்தில் அருள்நிதியின் அப்பா திடீரென்று இறந்துவிட்டதால் அவருடைய சொத்துக்களின் பாகப் பிரிவினை நடைபெறுகிறது. இந்தப் பாகப் பிரிவினையில் இன்னொரு அருள்நிதியான அண்ணன் ரகுநந்தனுக்கும், தனது 2-வது மனைவி மூலம் பிறந்த தனது மகளான அர்ச்சனாவுக்கும் குறைந்த சதவிகித சொத்துக்களை மட்டுமே எழுதி வைத்திருக்கும் அருள்நிதியின் அப்பா, சென்னையில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடி வரும் சீனிவாசனுக்கு 60 சதவிகித சொத்துக்களை எழுதி வைத்திருக்கிறார்.

இதனால் சீனிவாசனை கொலை செய்ய ரகுநந்தன் முடிவு செய்கிறார். அதே நேரம் சீனிவாசனை வைத்து தனது கணவனின் தற்கொலைக்கான காரணத்தைக் கண்டறிய நினைக்கிறார் பிரியா பவானி சங்கர்.

இதை முதலில் எதிர்க்கும் ரகுநந்தன் பின்பு தானே வந்து பேயின் வலையில் சிக்கிக் கொள்கிறார். இப்போது அண்ணன் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மற்றும் இவர்களுக்கு உதவி செய்ய வந்த புத்தத் துறவி மூவரும் பேய்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். இவர்கள் பேய்களிடமிருந்து தப்பித்தார்களா.. இல்லையா?.. என்பதுதான் இந்த ‘டிமான்ட்டி காலனி-2’ திரைப்படத்தின் திரைக்கதை சுருக்கம்.

முதல் பாகத்தைப் போலவே இந்தப் பாகத்திலும் அருள்நிதி தனக்குக் கிடைத்தக் காட்சிகளில், வாய்ப்புகளைக் கச்சிதமாகப் பயன்படுத்தி அழகாக நடித்திருக்கிறார். ரகுநந்தன் கதாப்பாத்திரத்தில் சொத்துக்காக டிராமா போடும் சித்தி மற்றும் தங்கையின் அலப்பறையைத் தாங்க முடியாமல் காட்டும் எக்ஸ்பிரஷன்கள் சூப்பர்.

சொத்துக் கிடைக்காத கோபத்தில் மேனேஜரை பிரித்து மேயும் காட்சியிலும், தம்பி சீனிவாசனை கொலை செய்யத் துடிக்கும் காட்சியிலும் அந்தக் கதாப்பாத்திரத்துக்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

இடையில் பிரியா பவானி சங்கருடன் நட்பாகி, இந்த நட்பின் காரணமாக பேய்களிடம் மாட்டிக் கொண்டு, வெளியேற முடியாமல் பயந்து, தத்தளித்து தவிக்கும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இவரே பேயாக மாற வேண்டிய கட்டாயம்வரும்போதும் அந்தப் பயவுணர்வை நமக்கும் கடத்தியிருக்கிறார் அருள்நிதி. பாராட்டுக்கள்.

பிரியா பவானி சங்கருக்கு இந்தப் படத்தில் எப்போதும் வாங்கும் சம்பளத்தைவிடவும் 3  மடங்கு அதிகச் சம்பளத்தைக் கொடுத்தாக வேண்டும். அந்த அளவுக்கு 3, 4 படங்களில் நடித்துக் காண்பித்திருக்க வேண்டிய நடிப்பினை இந்த ஒரே படத்திலேயே காட்டியிருக்கிறார்.

கணவருடனான காதல் காட்சிகள், கணவர் புற்று நோயால் உயிருக்குப் போராடும் நிலையில் நடக்கும் பிரியாவின் திருமணக் காட்சிகள், கணவரின் மர்ம மரணத்துக்குக் காரணம் தேடும் காட்சிகள்.. பேய்களின் உலகத்துக்குள் பிரவேசிக்கும்போது காட்டும் சிலிர்ப்பான நடிப்பு, பேய்களிடம் தப்பிக்கப் போராடுவது என்று படத்தின் அதிகக் காட்சிகளில் தனது நடிப்பினை காண்பித்து அருள்நிதியை ஓவர் டேக் செய்துள்ளார் பிரியா. வாழ்த்துகள். பாராட்டுக்கள்..!

அருள்நிதியின் சித்தியாக நடித்தவரும், தங்கையாக நடித்திருக்கும் அர்ச்சனாவும் அவரவர் பொய்யான நடிப்பை சிறப்பாகக் காண்பித்துள்ளனர்.

மேலும் அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனோ காலித், புத்த பிட்ச்சுக்கள் என்று பலரும் தத்தமது கேரக்டர்களுக்கேற்ற நடிப்பைத் நடித்துள்ளனர்.

ஹரீஷ் கண்ணனின் ஒளிப்பதிவு திகிலைக் கூட்ட ‘சாம் சி எஸ்’ பின்னணி இசை அதற்கு வலு சேர்த்திருக்கிறது. அதற்காக, காதைக் கிழிக்கும் அளவுக்காக பின்னணி இசையை அமைப்பது.. இந்த இரைச்சலால் திரையைவிட்டு கண்களை அகற்ற முடியவில்லை.

கிளைமாக்ஸ் காட்சி நடக்கும் அந்த ஹோட்டலை வடிவமைத்த கலை இயக்குநரை வெகுவாகப் பாராட்ட வேண்டும். அற்புதமான வடிவமைப்பில் கூடுதலாக லைட்டுகளையும் விதவிதமாக அமைத்து, பேய்களின் பேயாட்டத்துக்கு ஏற்ற வகையில் உள் கட்டமைப்பினை வடிவமைத்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

இயக்குநர் அஜய் ஞானமுத்து திரைக்கதையில் முன் பாதியில் தெளிவாகச் சொல்லிவிட்டு பிற்பாதியில் அப்படியே உல்டாவாக என்ன சொல்ல வருகிறோம் என்பதை வெளிப்படையாக சொல்லாமல் குறிப்பால் உணர்த்துவதுபோல காட்சிகளை அமைத்திருப்பதால் கிளைமாக்ஸ் காட்சியுடன் நம்மால் ஒன்ற முடியவில்லை.

இதில் அடுத்தப் பாகத்தில்தான் இரண்டாம் பாகத்தில் நடந்த சம்பவங்களுக்குக் காரணம் தெரியும் என்று பாதியிலேயே முடித்திருப்பது ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.

டிமாண்டி காலனி-2 – முதல் பாகத்தை நம்பிப் போனவர்களுக்கு சற்று ஏமாற்றம்தான்..!

RATING : 3 / 5

Our Score