full screen background image

தண்டேல் – சினிமா விமர்சனம்

தண்டேல் – சினிமா விமர்சனம்

ரொமான்டிக் சர்வைவல் டிராமா ஜானரிலான இந்தப் படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இதனை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வெளியிடுகிறார்.

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த ‘தண்டேல்’ திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரகாஷ் பெலவாடி, கருணாகரன், ‘ஆடுகளம்’ நரேன், பப்லு  உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

ஷாம் தத் சைனூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ‘ராக் ஸ்டார்’ தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார்.

உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது.  

‘தண்டேல்’ என்றால் ‘லீடர்’ என்று அர்த்தமாம். இந்தப் படத்தின் கதை 2018-ம் ஆண்டில் நடந்த ஒரு உண்மை சம்பவம். ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் எனும் கிராமத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 20 மீனவர்கள் குஜராத் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, தற்செயலாக எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் சென்றுவிட பாகிஸ்தான் கடற்படையினரிடம் மாட்டிக் கொண்டார்கள்.

கராச்சி சிறையில் சிறைபட்ட அவர்கள் 2019-ம் ஆண்டு நீண்ட, நெடிய போரட்டத்திற்குப் பிறகு தாயகம் திரும்பினார்கள். இவர்கள் பாகிஸ்தானில் இருந்து எப்படி மீண்டு வந்தார்கள் என்னும் உண்மைக் கதையை ஒரு அழகான காதல் கதையுடன் சேர்த்து இந்தப் படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இந்தக் கதையில் சம்பந்தப்பட்ட 20 மீனவர்களிடமும் கதைக்கான உரிமத்தை முறைப்படி வாங்கித்தான் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ந்திராவின் ஸ்ரீகாக்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ராஜு என்ற நாக சைதன்யா. அவருடைய அப்பா அந்தப் பகுதி மீனவர்களுக்குத் தலைவராக இருந்தவர். அவருடைய அப்பாவின் மரணத்திற்கு பிறகு குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தன்னுடைய பரம்பரை தொழிலான மீன் பிடிக்கும் தொழில் இறங்கியிருக்கிறார் ராஜூ.

அந்தப் பகுதி மீனவர்கள் வருடத்தில் ஒன்பது மாதங்கள் மீன் பிடிக்கச் செல்வார்கள். மீதம் மூன்று மாதங்கள் மட்டுமே தங்களுடைய சொந்த ஊரில், வீட்டில் இருப்பார்கள். அதிலும் ஸ்ரீகாகுளம் பகுதியில் இருந்து கிளம்பி குஜராத் துறைமுகத்திற்கு வந்து குஜராத்தில் இருக்கின்ற ஒரு சேட்டிடம் மீன் பிடித்துக் கொடுத்து அவர் குடுக்கின்ற பணத்தை வாங்கிக் கொண்டு ஊர் திரும்புவார்கள். இதுதான் இவர்களின் வருடாந்திர மீன் பிடித் தொழிலின் வழக்கம்..

ராஜு இப்போது அதை ஊரில் தன்னுடைய தாயை இழந்து தந்தை பப்லுடன் வசித்து வரும் சாய் பல்லவியை காதலித்து வருகிறார். சாய் பல்லவிக்கோ ராஜு மீன் பிடிக்கும் தொழிலுக்கு செல்வது பிடிக்கவில்லை.

மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற கணவன் வருவானா.. மாட்டானா.. என்கின்ற ஒரு பரிதவிப்பிலும், பதைபதைப்பிலும் காலம் முழுவதும் தன்னால் காத்துக் கொண்டிருக்க முடியாது என்று சொல்லும் சாய் பல்லவி ராஜுவை அந்த தொழிலை கைவிடும்படி கெஞ்சுகிறார். மிரட்டுகிறார்.

ஆனாலும் ராஜூ அதைக் கேட்காமல் தான் இப்போது அந்த பகுதி மீனவர்கள் காண தலைவன் என்பதால் தானே போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது. பெருமையாகவும் இருக்காது. அதனால் நான் போகத்தான் வேண்டும் என்று சாய் பல்லவியுடன் சண்டையிட்டு குஜராத் கிளம்பி செல்கிறான்.

ராஜூவும் அவரது குழுவினரும் குஜராத்தில் இந்திய எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில் கடுமையான மழை, புயலினால் படகு மிக நீண்ட தூரம் உள்ளே கடலுக்குள் இழுக்கப்பட்டு பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் சென்று விட்டார்கள். அப்பொழுது திடீரென்று அங்கு வந்த பாகிஸ்தான் கடற்படையினர், ராஜுவின் மொத்த கூட்டத்தையும் கைது செய்து கராச்சி சிறையில் அடைக்கிறார்கள்.

இந்த நேரத்தில் தன் பேச்சைக் கேட்காமல் ராஜு கடலுக்குள் மீன் பிடிக்க சென்று விட்டதால் தான் அவரை மணக்கும் முடிவில் இருந்து விலகுவதாகவும் தனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கும்படியும் தன் அப்பா பப்லுவிடம் சாய் பல்லவி கேட்டுக் கொள்கிறார்.

பப்லுவும் வட்டி பணத்தை வசூலிக்கும் ஏஜெண்டான கருணாகரனை சாய் பல்லவிக்கு மாப்பிள்ளையாக நிர்ணயம் செய்கிறார். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தமும் நடந்திருக்கிறது.

இந்த நேரத்தில்தான் ஸ்ரீகாகுளம் கிராமத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் பாகிஸ்தான் பகுதிகளில் சென்று விட்டதால் அந்த நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டு கராச்சி சிறையில் இருப்பது தெரிய வருகிறது.

இப்போது அவர்களை மீட்பதற்காக கிராமத்தின் சார்பாக சாய் பல்லவி களத்தில் குதிக்க வேண்டியதாகிறது. இதன் முதல்படியாக குஜராத்திற்கு தன்னுடைய வருங்கால கணவன் கருணாகரனுடன் செல்லும் சாய் பல்லவி தன்னுடைய கிராமத்து மீனவர்களின் பாக்கி தொகையை அங்கேயிருக்கும் சேட்டிடம் சண்டையிட்டு வாங்கிக் கொண்டு வருகிறார்.

இதற்கடுத்து தன்னுடைய மாநில முதலமைச்சர், கலெக்டர் மூலமாக மத்திய அரசிடம் சொல்லி ராஜூவையும், மற்ற மீனவர்களையும் விடுவிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா.. அல்லது தோல்வி அடைந்தாரா… மீனவர்கள் எப்படி பத்திரமாக வீடு வந்து சேர்ந்தார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.

ஒரு மீனவ இளைஞருக்கு உரித்தான தோற்றத்திலும் அவர்களுடைய பழக்க வழக்கங்களை அப்படியே எளிதாக கையாளும் விதத்திலும் ஒரு அட்டகாசமான ஹீரோயிஸ படமாக இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார் ராஜு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் நாக சைதன்யா.

படத்தின் முதல் பாதி முழுவதும் காதல் போர்ஷன்களாக செல்ல இரண்டாம் பாதியில் எமோஷன்களைக் கொட்டிக் கொடுக்க வேண்டிய கட்டாயம். அதிலும் இந்திய தேசியத்தை போற்றி பாராட்டும் ஒரு இந்திய குடிமகனாக தன்னுடைய இருப்பை காட்ட வேண்டிய கட்டாயமும் ராஜுவுக்கு இருக்கிறது. அதையும் அவர் அழகாக செய்து இருக்கிறார்.

காதல் காட்சிகளில் சாய் பல்லவிக்கு ஈடு கொடுப்பது என்பது ரொம்பவும் முடியாத ஒரு காரியம் ஆனாலும் இந்த படத்தில் நாகா சைதன்யா ஏதோ தன்னால் முடிந்த அளவுக்கு ரொமான்ஸ்களை செய்து இருக்கிறார்.

சாய் பல்லவியுடன் சண்டையிட்டு மீன்பிடிக்க செல்லும் ராஜு போனில் தன்னிடம் ஒரு வார்த்தையாவது பேசும்படி கெஞ்சுகின்ற அந்த ஒவ்வொரு கெஞ்சலும், அந்தக் குரலில் காட்டுகின்ற காதலும், முகத்தில் காட்டுகின்ற அந்த தவிப்பும் ஒரு உண்மையான காதலனை அப்படியே பிரதிபலித்து இருக்கிறார் நாக சைதன்யா.

கராச்சி சிறையில் இந்திய தேசிய கொடிக்கு நேரும் அவமானத்தை தாங்க முடியாமல் கொந்தளிக்கின்ற போதிலும், தன்னுடைய அழைத்து வந்த ஒரு சிறுவனை காப்பாற்றுவதற்காக பாகிஸ்தானை சேர்ந்த சிறைக் கைதிகளுடன் அவர் காட்டும் கோபமும், ஆத்திரமும் யதார்த்தமாக அமைந்துள்ளது.

படத்தின் இன்னொரு தூண் என்று சொன்னால் அது சாய் பல்லவிதான். அந்த முகத்தில் பலவிதமான முகபாவனைகளைக் காட்டி, அதில் பல நடிப்புகளையும் கொடுத்து படம் முழுவதும் வியாபித்து திரையிலிருந்து நம்முடைய கண்களை அகல விடாமல் தடுத்து இருக்கிறார் சாய் பல்லவி.

சாய் பல்லவி கண்கள் காட்டும் காதலும், அவர் முகம் காட்டும் அந்த ஏக்கமும், தவிப்பும் காதலனுடன் காட்டும் ரொமான்ஸூம் நிச்சயம் படம் பார்க்கும் இளைஞர்களையும் ஒரு வழியாகக் காதலிக்க வைத்து விடும் என்று உறுதியாக சொல்லலாம்.

ரொமான்ஸ் காட்டுவதிலும், இன்னொரு பக்கம் கோபம் கொள்வதிலும் இருவேறுவிதமான தன்னுடைய குணத்தை தன்னுடைய நடிப்பில் காட்டி இருக்கிறார் சாய் பல்லவி.

தன்னை விட்டுப் போகும் ராஜூவை நினைத்து ரயில்வே ஸ்டேஷனில் சோகமாக அமர்ந்திருக்கும் அந்த முகத்தில்தான் படமே துவங்குகிறது. அந்த அற்புதமான அந்த காட்சியின் துவக்கமே நம்மை படத்துக்குள் கவர்ந்து இழுத்து இருக்கிறது என்று சொல்லலாம்.

படத்தின் இடைவேளைக்கு பின்பு ஒரு பக்கம் பழைய காதலனை நினைத்துக் கொண்டிருந்தும், இன்னொரு பக்கம் தனக்கு வரவிருக்கும் கணவரிடம் பேசி முன்னாள் காதலனை விடுவிக்க வேண்டிய கட்டாயம்.. அந்த சின்ன சின்ன சங்கடங்களை தன்னுடைய முகத்தில் அழகாக கொண்டு வந்து கொடுத்து நம்முடைய பரிதாபத்தை பெறுகிறார் சாய் பல்லவி.

சந்திரா அக்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திவ்யா பிள்ளையும் யார் இந்த பெண் என்ற நம்மை கேட்க வைத்திருப்பது போல நடித்திருக்கிறார். அதேபோல் ராஜவின் அம்மாவாக நடித்தவரும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கும் ஆடுகளம் நரேன் மிகச் சிறப்பான ஒரு கதாபாத்திரத் தேர்வு என்று சொல்லலாம். ஒரு வயதானவர், அதே சமயம் அனைவராலும் மதிக்க கூடியவராக இருக்க வேண்டும் என்ற வகையில் அவருடைய நடிப்பை இறுதி காட்சி வரையிலும் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் நரேன்.

பாகிஸ்தான் சிறையில் ஜெயலராக இருப்பவரும், அந்த சிறையின்  நடிகர்களும் தங்களுடைய வில்லத்தனத்தையும் அழகாக காட்டி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு மிகவும் அழகு. கடல் பகுதிகளையும், மீன் பிடிக்கும் காட்சிகளையும் மீன் பிடிப்பதற்காக மீனவர்கள் செய்கின்ற அத்தனை செயல்களையும் கேமராவில் பதிவு செய்ததோடு, படத்தோடு ஒன்றே போகும் அளவிற்கு தன்னுடைய ஒளிப்பதிவையும் செய்து கொடுத்திருக்கிறார்.

ஸ்ரீகாகுளம் பகுதியின் கிராமத்து அழகை டிரோன் ஷாட்டுகளில் பார்க்கும்போது அவ்வளவு கச்சிதமாக இருக்கிறது. சாய் பல்லவியின் அழகை இதைவிட அழகாக யாரும் காட்டிவிட முடியாது.

அதேபோல் கராச்சி ஜெயில் செட்டப் என்பது வெளியில் தெரிந்தாலும் கராச்சியில் நடந்த பல கலவரங்களையும் வீடியோ காட்சிகளை ஒன்றாக தொகுத்து வைத்து ஒரு அழகாக நம்மை நம்ப வைப்பது போல நம்ப வைத்து கட் செய்து கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர். அவருக்கும்  நமது பாராட்டுக்கள்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் சிவன் பாடல் மிகவும் அருமை அந்த பாடலும், அந்த பாடலுக்கான நடனமும் அட்டகாசம் என்று சொல்லலாம். இந்த வருடத்தின் மிகச் சிறந்த பாடலாக இந்தப் பாடல் நிச்சயம் இடம் பிடிக்கும். சாய் பல்லவியின் நடனத் திறமையை பற்றி சொல்ல வேண்டியது இல்லை. இந்தப் படத்திலும் அவருடைய நடனத் திறமையை மூன்று பாடல்களிலும் கச்சிதமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். அப்படி ஒரு அழகான நடனத்தையும் சாய் பல்லவி கொடுத்து இருக்கிறார். இதற்காக நடன இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.

2018-ம் ஆண்டு நிஜமாகவே நடந்து ஒரு உண்மைக் கதை என்றாலும்  சினிமாவுக்காக சில சம்பவங்களை கொஞ்சம் பெரிதாக்கி சில சம்பவங்களை சுருக்கி திரைக்கதையை ஒரு சுவாரசியமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சந்து மண்டி.

ஆனாலும் கராச்சி சிறையில் இந்திய தேசியக் கொடியை பாகிஸ்தான் சிறைக் கைதிகள் அவமானப்படுத்தும் சம்பவங்களை எல்லாம் நிச்சயமாக குறைத்து இருக்கலாம். அல்லது நீக்கியே இருக்கலாம்.

ஏனெனில் அந்தக் காட்சிகள் நம்முடைய இந்திய நாட்டில் வாழும் சக மதத்தினருடன் ஒரு விரோத போக்கை நமக்குள் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. அவை போன்ற காட்சிகளை திரைக்கு கொண்டு வருவது என்பதும் நிச்சயமாக தடுக்கப்பட வேண்டும். நல்லா இருக்கிற ஊரில் சில பேரால் மத நல்லிணக்கம் சீர்குலையும் என்பதால் இது போன்ற காட்சிகளை திரையில் நாம் கொண்டு வராமல் இருப்பதே நமக்கு நல்லது.

ஒரு உண்மைக் கதையை எடுத்துக் கொண்டு அதில் இருக்கின்ற ஒரு ஆழமான காதல் கதையையும், தேச பக்தி மிகுந்த உணர்வுமிக்க படமாக கொடுத்திருக்கும் இயக்குநருக்கும் அவருடைய படக் குழுவினருக்கும் நமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

RATING : 3.5 / 5

Our Score