full screen background image

கிராமத்துப் பின்னணியில் உருவாகியிருக்கும் காமெடி படம் ‘தண்டட்டி’

கிராமத்துப் பின்னணியில் உருவாகியிருக்கும் காமெடி படம் ‘தண்டட்டி’

இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தண்டட்டி’.

இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.லட்சுமண் குமார் தயாரித்திருக்கிறார்.

இதில் நடிகர்கள் பசுபதி, விவேக் பிரசன்னா, நடிகை ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இத்திரைப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார்.

தங்கத்தை மையப்படுத்தி கிராமிய பாணியிலான வாழ்வியல் கதையாக தயாராகி இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இதன் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் பசுபதி காவலராகவும், நடிகை ரோகிணி சடலமாகத் தோன்றுவது வித்தியாசமாக இருப்பதுடன், அங்கு பார்வையாளர்களாக வருகை தந்திருக்கும் அனைத்துக் கிராமத்து முதிய பெண்களின் காதுகளில் ‘தண்டட்டி’ எனப்படும் வயதான பெண்மணிகள் அணியும் தங்க ஆபரணத்துடன் தோன்றுவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்தப் படம் குறித்து இயக்குநர் ராம் சங்கையா பேசும்போது, “இந்தப் படம் கிராமத்து பின்னணியில் ஒரு காமெடி படமாக உருவாகி உள்ளது. கிராமத்தில் இருக்கும் வயதான பெண்மணியான ரோகிணியின் காதில் தொங்கும் தண்டட்டி மீது ஊர்க்காரர்கள் அனைவருக்கும் ஒரு கண். அவரும் அதைப் பற்றிப் பெருமையாக பேசித் திரிவார்.

ஒரு நாள் ரோகிணி இறந்துவிட அந்த தண்டட்டிக்கு யார் வாரிசு என்பதில் ஊர்க்காரர்களிடையே பிரச்னை ஏற்படுகிறது. அதைத் தீர்த்து வைக்க போலீசான பசுபதியும் அங்கே வருகிறார். இதை காமெடியாக சொல்லியிருக்கிறோம். அதோடு கிராம மக்களின் வாழ்க்கையில் தங்கம் எந்த அளவுக்கு முக்கியத்தும் பெறுகிறது என்பதையும் பேசும் படம் இது…” என்றார்.

Our Score