இராமாயணத்தில் குறிக்கப்படும் ‘தண்ட காரண்யம்’ (தண்டக+ஆரண்யம்) அடர்ந்த காட்டுப் பகுதியாகும். தண்டனைக்குரியவர்கள் வசிக்கும் காடு என்பதே ‘தண்ட காரண்யம்’ என்பதன் பொருள்.
‘தண்ட காரண்யம்’ என்பது இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ள. சுமார் 90,000 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட அடர்ந்த காட்டுப் பகுதி.
இதன் மேற்கே அபூஜ்மார் மலை, கிழக்கே கிழக்கு மலைத் தொடர், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், ஒடிசா, ஆந்திரா மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள காட்டுப் பகுதிகளை உள்ளடக்கியது தண்ட காரண்யம்.
2000ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் தனி மாநிலமாக உருவானபோது, தண்ட காரணயத்தின் பகுதிகள் கங்கேர் (1999), தந்தேவாடா(2000), பிஜப்பூர் (2007), நாராயண்பூர்(2007), கோண்டாகாவ் (2012), சுக்மா(2012) என ஏழு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
தண்டகாரண்யம் வனப் பகுதியில் வாழும் மக்களில் நான்கில் மூன்று பங்கினர் மலைவாழ் பழங்குடி மக்கள் ஆவர். அவர்களில் முக்கியமான பழங்குடி இனங்கள் 1. கோண்டு மக்கள் , 2. முரியாக்கள், 3. ஹல்பாக்கள் மற்றும் 4. அபுஜ்மரியாக்கள்.
‘தண்ட காரண்யப்’ பகுதி நள வம்சம், நாகர்கள், காகதீய வம்சம், சாளுக்கியர்கள் மற்றும் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டது.
இராமாயண இதிகாசத்தில் இராமர் 14 ஆண்டு வன வாசத்தில் இருந்தபோது, சீதை மற்றும் இலக்குவனுடன் சில காலம் இந்த ‘தண்ட காரண்ய’த்தில் கழித்தார் என இராமாயண இதிகாசம் கூறுகிறது.
இந்த ‘தண்ட காரண்ய’த்தில்தான், மாரீசன் தங்க மான் வடிவில் உலாவினான். சீதை, அந்த தங்க மானை பிடித்துத் தரும்படி கேட்டதால், இராமன் மற்றும் இலக்குவன் தங்க மானை தேடிச் சென்றனர். அப்போது சீதை தனிமையில் இருக்கையில், இராவணன் கவர்ந்து, இலங்கையின் அசோக வனத்தில் சிறை வைத்த நிகழ்வுகள், இராமாயணத்தின் ‘ஆரண்ய காண்ட’த்தில் கூறப்படுகிறது.
இந்தப் படமும் அந்தத் ‘தண்ட காரண்யம்’ காடுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதால் அந்தப் பெயரையே படத்திற்கும் தலைப்பாக வைத்துள்ளார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடர்ந்த காடுகளுக்கு நடுவே இருக்கும் உள் கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். அதில் கலையரசன் தினேஷின் குடும்பமும் ஒன்று. சடையன் என்ற தினேஷ் தன் மனைவி ரித்விகா, அம்மா, அப்பா, தம்பி முருகன் என்ற கலையரசனுடன் அந்தக் கிராமத்தில் வசித்து வருகிறார்.
கலையரசன் வனத்துறையில் தற்காலிக காவலராக பணியாற்றி வருகிறார். எப்படியாவது நிரந்தர பணியை பெற்று விட வேண்டும் என்று ஆசையோடு காத்திருக்கிறார்.
கலையரசன் நிரந்தர பணி பெற்றுவிட்டால் உடனே அவரை திருமணம் செய்து கொள்வதற்கு அவருடைய காதலி வின்சு சாமும் தயாராக காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் வனத்துறை ரேஞ்சரான அருள்தாஸுக்கும் தினேஷுக்கும் இடையில் மோதல் ஏற்பட இதனால் கலையரசனின் தற்காலிக பணியும் பறி போகிறது.
தம்பிக்கு ஏதாவது வேலை வாங்கி கொடுக்க வேண்டுமே என்று நினைக்கும் தினேஷை ஒரு புரோக்கர் சந்திக்கிறார்.
சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் காட்டுப் பகுதியில் இருக்கும் நக்சலைட்டுகளை வேட்டையாடுவதற்காக தனி ராணுவ அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் கலையரசனை சேர்த்து விட்டால் ஒரு வருடத்திலேயே அவர் நிரந்தர ராணுவ வீரராக சேர்த்துக் கொள்ளப்படுவார் என்ற ஆசை காட்டுகிறார்.
அங்கே என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாத தினேஷ் இதற்கு ஒத்துக் கொண்டு கலையரசனையை ஜார்க்கண்ட் அனுப்பி வைக்கிறார்.
ஜார்க்கண்டில் உள்ள அந்த அமைப்பு ராணுவத்திடம் முறையாக அங்கீகாரம் பெறாமல் ராணுவ அதிகாரிகளும், இந்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து நடத்தும் ஒரு முகமூடி அமைப்புதான் என்பது கலையரசனுக்கும் தெரியவில்லை தினேஷுக்கும் தெரியவில்லை.
அந்த அமைப்பில் சேரும் அனைத்து இளைஞர்களையும் இவர்களெல்லாம் நக்சலைட் தீவிரவாதிகள். அரசிடம் சரண்டர் அடைந்திருக்கிறார்கள் என்று புகைப்படத்துடன் பொய்யாக ஒரு செய்தியை பத்திரிகைகளுக்கு கொடுத்துவிட்டு இவர்களை தனியே அழைத்துச் சென்று ரகசியமாக ராணுவ ட்ரைனிங் கொடுக்கிறார்கள்.
அதற்குப் பிறகு ட்ரெயினிங் முடிந்து விட்டது. நீங்கள் நிரந்தரமாக போகிறீர்கள் வாருங்கள் தலைநகரத்துக்கு போகலாம் என்று அழைத்துச் சென்று அதே காட்டுப் பகுதியில் வைத்து இவர்களை சுட்டு கொன்று விட்டு இத்தனை நக்சலைட்டுகளை நாங்கள் கொலை செய்துவிட்டோம் என்று சொல்வது மாநில அரசின் வழக்கம்அப்படி ஒரு இடத்தில்தான் கலையரசன் போய் சிக்கிக் கொள்கிறார்.
முதல் மூன்று மாதத்தில் தேற முடியாமல் போகும் கலையரசன் அடுத்த பேட்ஜில் நிரந்தர பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்.
ஆனால் அந்த நேரத்தில் தற்செயலாக பத்திரிகைகளில் அவர் பார்க்கும் செய்தியின்படி அதற்கு முந்தைய பேட்ஜில் நிரந்தரப் பணிக்காக அழைத்துச் சென்றவர்கள் தீவிரவாதிகள் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்து அதிர்ச்சியாகிறார். இப்போது தன்னையும் அந்தக் கொலை களத்துக்கு அழைத்துச் செல்ல இருப்பதை அறியும் கலையரசன் தன்னுடைய கூட்டத்தினருடன் தானும் தப்பிக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார் அவருடைய திட்டம் பலித்ததா? இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் மீதி கதை.
அரச பயங்கரவாதத்தை எந்த வகையில் எந்த வடிவத்தில் வந்தாலும் நாம் எதிர்த்தே தீர வேண்டும் என்கின்ற ஒரு ஜனநாயக முறையிலான கொள்கையின்படி இந்தப் படத்தின் கதையை அழகாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் அதியன் ஆதிரை.
இதுவரையிலும் நாம் கேள்விப்படாத ஒரு சம்பவத்தை, கதையை இந்த திரைப்படத்தின் மூலமாக கொடுத்திருக்கும் இயக்குநருக்கு நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தமிழ் சினிமாவில் உண்மையான ஹீரோக்கள் என்று பார்க்கப் போனால் இது போன்ற மக்களுக்கான திரைப்படங்களில் தங்களுடைய உடல் நலன், கேரக்டர்ஸ் ஸ்கெட்ச் என்று எதையுமே பார்க்காமல் நடிப்புக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் தினேஷ் கலையரசன் போன்றவர்கள்தான் தமிழ் சினிமாவின் உண்மையான ஹீரோக்கள் என்று சொல்லலாம்.
குறைவான சம்பளத்தில் நடித்தாலும் நிறைவான நடிப்பை காண்பித்து இருக்கிறார்கள். தினேஷம் கலையரசனும்.
இதில் கலையரசன் ஜார்கண்ட் மாநில பயிற்சியில் என்ன பாடுபடுகிறார் என்பதை நினைக்கும்போது நிச்சயமாக ஒரு தமிழ் படத்தின் ஹீரோ இந்த அளவுக்கு தன்னை வருத்திக் கொண்டு நடிப்பாரா என்பது இந்தக் காலத்தில் சந்தேகம்தான்.
கலையரசனின் நடிப்பு அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும். காடுகளின் மீது அவருக்கு இருக்கும் ஒரு பாசம் நேசமும், தன் காதலி மீதான காதலிலும், அண்ணன் அம்மா, அப்பா, அண்ணி என்று அனைவரின் மீதும் வைத்திருக்கும் குடும்ப பாசத்திலும் நம்மை நெகிழ வைத்து இருக்கிறார்.
பாஷை தெரியாத ஒரு ஊரில் வேலைக்காக வந்து மாட்டிக் கொண்டு உயர் அதிகாரிகளிடம் சிக்கி சின்னா பின்னமாகி கூடவே இருக்கும் தன்னை புரிந்து கொள்ளாத மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த சபீர் கல்லரக்களுடன் கடுமையான சண்டையிட்டு அதற்கான தண்டனையும் பெற்று இவ்வளவு உடல் உழைப்பையும் கொட்டி இந்தப் படத்தில் கலையரசன் காட்டி இருப்பது மிகச் சிறந்த நடிப்பு. எந்த வகையிலும் இந்த நடிப்புக்கு நாம் விலை பேச முடியாது.
உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள முடியாத சூழலில் தண்டனைகளை அவர் ஏற்றுக் கொள்கிற இடத்திலும் தன்னை அனுப்ப போகிறார்கள் என்று தெரிந்தவுடன் தன்னுடைய மேல் அதிகாரியிடம் என்ன வேண்ணாலும் பனிஷ்மென்ட் கொடுங்க. என்னைஅனுப்பி விடாதீர்கள் சார் என்று அவர் கெஞ்சுகின்ற கெஞ்சலின்போதும், அதற்குப் பின்பு உண்மை தெரிந்து சாகப் போகிறோமோ என்று நினைப்பில் அவர் அடுத்து செய்யக் கூடிய அதிரடிகளிலும் நிச்சயமாக இந்த கலையரசன் தப்பிக்க வேண்டுமே என்ற படம் பார்க்கின்ற அனைவரின் மனதிலும் ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டார்.
இவருக்கும் எந்த ஒரு குறையையும் வைக்காமல் ஒரு பழங்குடியின கோபக்கார இளைஞனாக சடையனாக தன்னுடைய தோற்றத்திலும், ஆக்ரோஷத்திலும் நிரூபித்து காட்டியிருக்கிறார் தினேஷ்.
ரேஞ்சர் அருள் தாஸிடம் நேருக்கு நேர் மோதுகின்ற காட்சிகளிலும், சில பணக்காரர்கள் வனப்பகுதியில் டெண்டர் எடுத்து செய்கின்ற அட்டூழியங்களையும் தட்டிக் கேட்க வந்த இளைஞன் பாத்திரத்திற்கு தினேஷ் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
அதேபோல் அவரும் அரச பயங்கரவாதத்தின் கடுமையில் சிக்கிய பின்பும் தன்னுடைய கொள்கையிலிருந்து விட்டுக் கொடுக்காமல் இருக்கும் தினேஷை பாராட்டும் வகையில் அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சை அற்புதமாக அமைத்திருக்கிறார் இயக்குநர்.
ஜார்கண்ட் பயிற்சி மையத்தில் கலையரசனுடன் போதும் சபீர் கல்லரக்கள் வித்தியாசமான ஒரு நடிப்பை காண்பித்து இருக்கிறார். அவருடைய இயல்பான நடிப்பை விடவும் குணசித்திர நடிப்பை விடவும் வில்லத்தனம் மிகப் பெரியது. அட்டகாசமான ஒரு வில்லனாக காட்டியவர் பின்பு கலையரசனுக்கு நண்பனாக ஆன பின்பு அவரது நடிப்பு நமக்கு மிகவும் பிடித்துப் போகிறது.
கலையரசனின் நண்பனாக நடித்திருக்கும் பால சரவணன் ஒரு அப்பாவி இளைஞன் நிரந்தர வேலைக்காக வந்து என்ன பாடு படுகிறார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டாக நடித்திருக்கிறார்.
கதாநாயகி வின்சு சாம் தன்னுடைய அம்மா, அப்பாவையும் எதிர்த்துக் கொண்டு கலையரசன் வீட்டுக்கே வந்து கலையரசன் குடும்பத்தினருடன் இணைந்து தன்னுடைய காதலனின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கும் அந்த காதல் போர்ஷன் அனைத்தும் மிக அழகு.
கொடுமையான ரேஞ்சராக அருள்தாஸும் குடும்பத்தை தூக்கி சுமக்கும் மருமகளாக ரித்விகாவும் வில்லன்களான முத்துக்குமார் என்று மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் அவரவர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாகவும் அமைந்திருக்கிறார்கள். மிக அழகான நடிப்பையும் காண்பித்து இருக்கிறார்கள்.
படத்தின் பெரும் பகுதி காடுகளுக்கு உள்ளேயே எடுக்கப்பட்டிருப்பதால் ஒளிப்பதிவாளர் பிரதீப் கலைராஜா தன்னுடைய மொத்த வித்தையும் இந்தப் படத்தில் இறக்கி இருக்கிறார் என்று சொல்லலாம்.
அந்த தண்ட காரண்யத்தின் அடர்ந்த வனப் பகுதிகளையும் தமிழகத்தில் கிருஷ்ணகிரி பகுதியில் இருக்கும் காடுகளையும் அதில் அண்டி வாழும் பழங்குடியின மக்களின் வீடுகள், அவருடைய வாழ்வியல் அனைத்தையும் மிக அழகாக காட்டி இருக்கிறார்.
காதல் பாடல் காட்சிகளில் நாயக நாயகியைவிடவும் நம் சுற்றுப்புறத்தையும் அவர்கள் இருக்கின்ற இடத்தையுமே ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும் ஒளிப்பதிவு சிறப்பு.
ஜஸ்டின் பிரபாகரனின் இசை இந்தப் படத்துக்கு மிகப் பெரிய பலம் என்றே சொல்லலாம். முதல் முறையாக காடுகளை காட்டும்போது ஒலிக்கும் அந்த பின்னணி இசை இறுதியாக கலையரசனின் முடிவு வரும் பொழுதும் அதே போன்ற இசையை அமைத்து நம்மை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறார்
இசைஞானி இளையராஜாவை இன்னமும் நம்மால் மறக்கவே முடியாது என்கின்ற நிலைமைக்கேற்ப அவர் இசையமைத்த ‘ஓ பிரியா பிரியா’ பாடலையும் மனிதா மனிதா பாடல்களையும் மிக சரியான இடத்தில் பயன்படுத்தி இருக்கிறார். இதற்காக ஜஸ்டின் பிரபாகரனுக்கு நமது வாழ்த்துக்கள்.
இந்த படம் மிக நீண்ட அளவில் படமாக்கப்பட்டு இருந்தாலும் இரண்டு மணி பத்து நிமிடத்தில் கடைசியாக நிற்க வேண்டிய விதத்தில் நறுக்கி படத் தொகுப்பாளர் ஆர் கே செல்வா தன்னுடைய திறமையை காட்டி இருக்கிறார்.
ஒரு காட்சியில்கூட ஒரு நேரம்கூட ஒரு நிமிடத்தில்கூட செல்போனை கையில் எடுக்க விடாமல் திரையை மட்டுமே கவனிக்க வைத்திருக்கிறார்கள். இதற்காகவே இவருக்கும் நமது பாராட்டுக்கள்.
‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற வித்தியாசமான ஒரு தலைப்புள்ள படத்தினை நமக்கு கொடுத்திருந்த இயக்குநர் அதியன் ஆதிரை, இந்தப் படத்திலும் நாம் கேள்விப்படாத ஒரு கதையை மிக அழகாக சொல்லி நம்மை பெரிதும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
இந்த கதையைத் திரையில் சொல்லும்பொழுது மிக அழுத்தமாகவும் மிக எளிதான புரியும் வகையிலும் உணர்வுபூர்வமாகவும் திரை ரசிகர்களின் மனதில் அமரும்படியான இயக்கத்தை தந்திருக்கிறார் அதியன் ஆதிரை.
சாதாரண ஒரு மனிதன் போராளி ஆகிறான் என்றால் அதற்கு அவன் மட்டுமே காரணம் அல்ல. அவனை சுற்றி இருக்கும் சமூக சூழலும் ஆண்டு கொண்டிருக்கும் அரசுகளும்தான் காரணம் என்பதை இந்தப் படத்தில் அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார் அதியன் ஆதிரை.
நக்சலைட்டுகள் என்பவர்கள் எங்கோ வெளிநாட்டில் இருந்து வந்து இங்கு குடியேறியவர்கள் அல்ல. தாங்கள் ஆண்டாண்டு காலமாக தங்களுடைய மூதாதையர்களால் தொடர்ந்து வாழ்ந்து வரும் இடத்தில் அவர்கள் வசிக்க முடியாத அளவுக்கு அரசு தன் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டதினால்தான் அவர்கள் போராளிகளாக, நக்சலைட்டுகளாக மாறினார்கள் என்பதை இந்தப் படத்தில் அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.
எதையும் எதிர்க்கக் கூடாது. எதிர் பேச்சு பேசக் கூடாது. சொன்னதை மட்டுமே கேட்க வேண்டும் என்று மக்களை அடிமைத்தனமாக வைத்திருக்கும் இந்த அரசுகள், அவர்களை எதிர்த்து கேள்வி கேட்டால் உடனே அவர்களுக்கு ‘நக்சலைட்டுகள்’, ‘போராளிகள்’ என்று முத்திரை குத்தி அவர்களை வெகுஜன மக்களிடம் இருந்து விலக்கி வைத்து அவர்களை தீர்த்து கட்டுவது என்பதுதான் பழங்குடியின மக்களின் மீது பல்வேறு பல்லாண்டுகளாக அரசியல் செய்து வரும் சதி.
ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டதுதான் இந்தப் படம் என்று இயக்குநர் கூறி இருக்கிறார். ஆனால், படத்தின் டைட்டிலில் இது வெறும் கதையாடல் மட்டுமே என்று சொல்லி இருக்கிறார்.
இரண்டுக்குமான முரண்பாடுகள் ஏன் என்பது நமக்கு மிக எளிதாக தெரிகிறது. அரசுகளுக்கு காவடி தூக்கும் அளவுக்கு சென்சார் போட்டியில் உறுப்பினர்கள் வந்து சேர்ந்திருப்பதால் இதையெல்லாம் செய்ய வேண்டிய கட்டாயம் அந்த இயக்குநருக்கு இருக்கிறது என்பது நமக்கு புரிகிறது.
ஆனால் இது உண்மையாக இப்போதும் ஜார்க்கண்ட், சட்டிஸ்கர் மாநிலங்களில் நடந்து வருகின்ற ஒரு மிகப் பெரிய மோசடி. தி்ட்டமிட்ட படுகொலைகள். இதை இந்திய மக்களின் மத்தியில் கொண்டு போய் சேர்க்க வேண்டியது திரை ரசிகர்களின் பொறுப்பு. அந்த வகையில் இந்தத் திரைப்படம் ஒரு மிகப் பெரிய துணிச்சலோடு, மிகப் பெரிய மோசடியை வெளிக்கொணர்ந்திருக்கிறது.
இந்தப் படத்தைப் பாராட்டி போற்றி புகழ்ந்து தள்ளுவதோடு இல்லாமல் இந்தப் படம் பற்றிய செய்தியை நம்முடைய அடுத்த தலைமுறையினரும் நாம் கொண்டு போய் சேர்க்க வேண்டியது படம் பார்க்கின்ற அத்தனை திரை ரசிகர்களின் பொறுப்புமாகும். அவர்கள் செய்வார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.
RATING : 4.5 / 5









