ஆனந்த விகடன் குழுமம் தமிழ் சினிமாவுக்கு சிறந்த இயக்குநர்களை வழங்கிக் கொண்டிருக்கிறது.
‘குக்கூ’ படத்தை இயக்கிய ராஜு முருகன், ‘கள்ளப்படம்’ இயக்கிய வடிவேல், யாரிடமும் உதவியாளராக இல்லாமல் ‘கத்துக்குட்டி’ படத்தின் மூலம் இயக்குநராகி தற்சமயம் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கும் இரா.சரவணன் ஆகியோரும் விகடனின் உருவாக்கம்தான்.
அந்த வகையில் ஆனந்த விகடனில் தலைமை நிருபராய் பணிபுரிந்த அனுபவத்துடன், தற்போது ‘குமுதம்’ இதழில் முதன்மை நிருபராய் பணிபுரியும் பத்திரிகையாளரான க.ராஜீவ் காந்தி, திரையுலகை நோக்கிய தனது முதல் முயற்சியாக ‘தக்கன பிழைக்கும்’ என்ற குறும்படத்தை உருவாக்கி வருகிறார்.
இறுதிக் கட்ட பணிகளில் இருக்கும் அந்தக் குறும்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவிருக்கிறது. அந்த குறும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் போஸ்டர்களை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் ராஜீவ் காந்தி.
இந்தக் குறும்படம் பற்றி பேசிய பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி, “ஒரு பத்திரிகையாளனாகப் பணி புரிந்த அனுபவங்களில் என்னைச் சுற்றியே ஏராளமான கதைகளை நான் உணர்ந்துள்ளேன். எனவே என் படைப்புகள் அனைத்திலுமே ஏதோ ஒரு உண்மைச் சம்பவமோ, சம்பவங்களோதான் மையமாக இருக்கும். இந்தத் ‘தக்கன பிழைக்கும்’ குறும் படமும் அப்படிப்பட்ட முக்கிய அன்றாட நிகழ்வுகளை மையமாக வைத்து பின்னப்பட்ட கதைதான்…” என்றார்.