‘தகடு தகடு’ என்ற சாதாரண இரு வார்த்தைகளை வைத்தே தனது நடிப்பு கேரியரில் மிக முக்கிய இடத்தைப் பிடித்தவர் நடிகர் சத்யராஜ்.
‘காக்கிச் சட்டை’ படத்தில் இந்த வார்த்தையை அவர் உச்சரித்த ஸ்டைலுக்கு தமிழகமே அவரை அந்த நேரத்தில் கொண்டாடியது.. இந்தக் காட்சி உருவானவிதம் பற்றி சமீபத்தில் ‘தகடு தகடு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சத்யராஜ் பேசினார்.
“இந்த்த் ‘தகடு தகடு’வுக்கு மிகப் பெரிய ரசிகர் நம்ம உலக நாயகன் கமல்ஹாசன்தான்.. இப்ப எக்ஸ்பிரஸ் மால் இருக்குற அந்த இடத்துல முன்னாடி ஒரு பழைய பில்டிங் இருந்துச்சு. அங்கதான் ஒரு நாள் ராத்திரி 12 மணிக்கு ஷூட்டிங். ஒரே இடி, மின்னல், மழைன்னு இருந்துச்சு.. எல்லாரும் தூக்கக் கலக்கத்துல இருக்கோம்.
அந்த சீன் எடுக்கும்போது பக்கத்துல கமல் ஸாரும் ஹீரோயின் மாதவியும் நிக்குறாங்க. எதிர்த்தாப்புல அந்த கேரக்டர் நிக்குறார். அவர்கிட்டதான் நான் வசனம் பேசுவேன். பொணத்துக்குள்ள தகடு வைச்சு கடத்துறதான் கதை.. பொணத்தை நல்லா தோண்டி பார்ப்பேன். தகடு இருக்காது.
நான் அவன்கிட்ட கேப்பேன்.. ‘ஏன் கண்ணா.. பொணத்தை நீதான பார்சல் பண்ணுன..?’ ‘ஆமாம்’ண்ணுவாரு.. ‘தகடு எங்கடா?’ன்னு கேட்டேன். அந்த இடி மின்னல் சத்தத்துல அவருக்குக் காது கேக்கலை.. உடனே ‘தகடு தகடு’ன்னு கேட்டேன்..
இதே மாதிரி பயங்கர கிளாப்ஸ் சத்தம் நம்ம கமல் ஸார்கிட்டேயிருந்துதான்.. டைரக்டர் ராஜசேகர் கேட்டாரு.. ‘இதுல சிரிக்கிறதுக்கு என்ன ஸார் இருக்குன்னு..?’ ‘இல்ல ஸார்.. சத்யராஜ் ஸார் சொன்ன ஸ்டைலை கேளுங்க.. சத்யராஜ் ஸார் அதை சொல்லிக் காட்டுங்க’ன்னாரு கமல் ஸார்.. அதை நான் சொல்லிக் காட்டினப்புறம்தான் இயக்குநரும் அதை ரசிச்சு.. அதுக்கப்புறம் நிறைய குளோஸப் ஷாட்டா எடுத்தாங்க.. ‘பஜ்ஜி பஜ்ஜி’.. ‘பாஸ்கர்.. பாஸ்கர்’ன்னு நிறைய பேசினேன்.. ஒரு நல்ல கலைஞன்தான் நல்ல ரசிகனா இருக்க முடியும். அவர்தான் உலக நாயகன் கமல்ஹாசன்..” என்றார்.