full screen background image

தியேட்டர் டிக்கெட் விலையை குறைச்சுத் தொலைங்க – டி.ராஜேந்தரின் கோரிக்கை..!

தியேட்டர் டிக்கெட் விலையை குறைச்சுத் தொலைங்க – டி.ராஜேந்தரின் கோரிக்கை..!

அடுத்தடுத்த இரண்டு நாட்களில் திரையுலக அஷ்டாவதனி டி.ராஜேந்தர் மேடைகளில் பேச வந்து பொங்கித் தீர்த்துத்தான் இன்றைய இணையவுலகில் ஹாட் டாபிக்..!

முதல் விழா ‘தகடு தகடு’ படத்தின் இசை வெளியீட்டு விழா.. அதில் பேசிய டி.ஆர். “திருட்டு விசிடியின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் தியேட்டர்களின் கட்டண உயர்வுதான்..” என்று அடித்துப் பேசினார்.

அவருடைய பேச்சில் இருந்து சில பகுதிகள் மட்டும் இங்கே :

“திருட்டு விசிடி விக்குறது தப்பு. உண்மைதான். ஆனா மக்கள் ஏன் தியேட்டருக்கு வரல? நீ வச்சிருக்கற டிக்கட் விலை அப்படி! அளவுக்கு மீறி சம்பாதிக்கணும்னு தயாரிப்பாளருக்கு ஆசை. அநியாயமா பெரிய சம்பளம் வாங்கணும்னு ஹீரோக்களுக்கு ஆசை. அப்புறம் எப்படி அவன் படம் பாக்க வருவான்?

பெரிய படத்துக்கு ஒரு ரேட் வைங்க.. சின்ன பட்ஜெட் படத்துக்கு ஒரு ரேட் வைங்க.. இப்படி வைச்சா பெரிய படங்களுக்கு வர்ற கூட்டம் தானா வரும்ல.. அவன் பார்த்துட்டு போறான்.. சின்ன பட்ஜெட் படங்களுக்கு போஸ்டர் வரும்ல ஒரு கூட்டம்.. அவன் டிக்கெட் கட்டணத்தை பார்த்து வந்துட்டுப் போறான்.. எந்தப் படமா இருந்தாலும் முதல் ஒரு வரிசைய மட்டும் பத்து ரூபான்னு வச்சிட்டு.. மீதி எல்லா வரிசைக்கும் ஒரே டிக்கட் விலை வைக்கிறியே.. எப்படி ரசிகன் படம் பாக்க தியேட்டருக்கு வருவான்..?

இன்னிக்கு ஒரு குடும்பம் தியேட்டர்ல படம் பார்க்கணும்னா 1000 ரூபா செலவாகுது.. இதனாலதான் அவன் 50 ரூபா சிடில பார்த்துட்டு போலாம்னு போயிக்கிட்டேயிருக்கான்.. தப்பு யார்கிட்ட இருக்கு.. நம்மகிட்டயா..? அவன்கிட்டயா..?

இன்னொரு பக்கம் கள்ள நோட்டு அடிச்சா யாருமே புகார் தராட்டியும் அரசாங்கம் கண்டு புடிச்சு கைது செய்யுதுல்ல. அப்போ திருட்டு சிடி விக்கிறவனை மட்டும் ஏன் தானா கைது பண்றதுல்ல? இந்த விஷயம் பத்தி முதல்வர்கிட்ட எடுத்துச் சொல்லி திருட்டு விசிடியை ஒழிக்கணும்னு பேச ஏன் இந்தத் தயாரிப்பாளர்களுக்கு தெம்பு இல்ல. அதை செய்ய முடியறவன் பதவியில இரு.. முடியாதவன் ஒதுங்கிக்க.. செய்யறவனுக்கு இடம் விட்டா அவன் செய்வான்ல்ல..? நான் பதவில இருந்திருந்தா ஓடிப் போய் பார்த்திருப்பேன்.. இப்ப இருக்கிறவங்களுக்கு திறமையும் இல்ல.. தைரியமும் இல்லை..” என்றார்.

மறுநாள் கமலா தியேட்டரில் ‘புதியதோர் உலகம் செய்வோம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய டி.ராஜேந்தர் அங்கேயும் இதே தியேட்டர் கட்டணங்கள் பற்றி பொங்கித் தீர்த்துவிட்டார்..

t.rajendar

அதிலிருந்து சில பகுதிகள் இங்கே :

“நான் தியேட்டர்ல போய்தான் படம் பார்ப்பேன்.. நாம போகலைன்னா பேய் போயிரும்யா.. இப்போ தியேட்டர்ல 10 பேர் 20 பேர்தான் படம் பார்க்குறானாம். இதோ இப்போ அருள்பதி சொன்னார் பாருங்க.. ப்ப்பாளி படத்தை 8 பேர் உக்காந்து பாக்குறான்னு.. இப்படித்தான் நிலைமை வரும்.. இதெல்லாம் எதுனால..? டிக்கெட் கட்டணம் அதிகம்.. எப்படி பொதுஜனம் தியேட்டருக்கு படம் பார்க்க வரும்..?

டிக்கெட் விலையை குறைப்பதுதான் மக்களை தியேட்டருக்கு வரவழைக்கும் ஒரே வழி. தாய்மார்கள் வந்தால்தான் தியேட்டரில் கூட்டம் அதிகமாகும்.. வசூலும் கிடைக்கும். அவங்க ஆதரவு இல்லைன்னா ஒண்ணும் செய்ய முடியாது.. தமிழ்நாட்டுல 28 சேனல்கள் இருக்கு.. டெய்லி அதுல படம் போடுறான்.. சீரியல் போடுறான்.. தாய்மார்கள் பார்த்துக்கிட்டே வீட்டு வேலையை செஞ்சுக்கிட்டிருக்காங்க.. அதையும் மீறி அவங்களை தியேட்டருக்கு இழுக்கணும்னா நாமதான் இறங்கிப் போகணும்.. டிக்கெட் விலை அதிகமா இருப்பதால்தான் அவங்க தியேட்டருக்கே வர்றதில்லை..

ஒரு படம் நல்லா ஓடணும்ன்னா அதுக்கு கொஞ்சம் டைம் வேணும்.. என்னோட ஒரு தலை ராகம் முதல் வாரம் படு தோல்வி.. தூக்கிரலாம்னு முடிவே பண்ணிட்டாங்க. ஆனா ரெண்டாவது வாரத்துலதான் பிக்கப்பாகி ஒரு வருஷம் ஓடிச்சு.. இப்போ அதுக்கெல்லாம் சான்ஸே இல்லை.. மவுத் டாக் வெளில பரவுறதுக்கே டைம் கொடுக்க மாட்டேன்றாங்க.. 4-வது நாளே படத்தைத் தூக்கிடுறாங்க.. அப்புறம் எப்படி சின்ன பட்ஜெட் படம் ஓடும்..?

தியேட்டர் டிக்கெட் விலை 100 ரூபாய் டூவீலர் பார்க்கிங் கட்டணம் 50 ரூபாங்குறான்.. என்னய்யா நியாயம் இது..? அதுலேயும் ஒரு சினிமா பார்த்துட்டு வர்றதுக்குள்ள பார்க்கிங் சார்ஜும் 100 ரூபா ஆகுது..? இதெல்லாம் என்னய்யா கொள்ளையடிக்கிறீங்க..? கேக்குறதுக்கு ஆளே இல்லாம போச்சு.. வெளில விக்குற பெப்சி என்ன விலை…? தியேட்டருக்கு என்ன ரேட்டுல விக்குறான்..? இப்படி கொள்ளையடிச்சா எவன்யா படம் பார்க்க தியேட்டருக்கு வருவான்..?

நான் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறேன்.. பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஒரு ரேட்.. சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஒரு ரேட் என்று பிரிக்கணும்.. தியேட்டர் கட்டணங்களை குறைக்கணும்.. இதுக்காக முதல்வர் அம்மாவை நம்ம சங்கத்துக்காரங்க நேரில் சந்திச்சு பேசணும்.. ஏன் இதுவரைக்கும் பேசலை.. பேச முடியலை.. அப்போ ஏன் நீங்க சங்கத்துல இருக்கீங்க..? இருக்க வேண்டிய அவசியமே இல்லையே.. டிக்கெட் கட்டணத்தைக் குறைக்காமல் இந்தச் சினிமாவுலகம் வளர்றதுக்கு இங்க வாய்ப்பே இல்லை.. சின்ன பட்ஜெட் படங்களை காப்பாத்தணும்னு இது ஒண்ணுதான் வழி..” என்று ஆடித் தீர்த்துவிட்டார்..!

டி.ஆர்.. கடந்த சில வருடங்களாகவே தனியொரு மனிதனாக டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று சொல்லி போராடி வருகிறார்.. கேட்டாலும் கவலைப்படாமல் இருக்கும் பெரிய தயாரிப்பாளர்கள்தான் தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்பதால் இதெல்லாம் எடுபடாமலேயே இருக்கிறது..!

Our Score