“இளையராஜாவின் பின்னணி இசைக்கேற்ப நடித்தோம்..” – சசிகுமாரின் பூரிப்பான பேச்சு..!

“இளையராஜாவின் பின்னணி இசைக்கேற்ப நடித்தோம்..” – சசிகுமாரின் பூரிப்பான பேச்சு..!

வரும் பொங்கல் நாளில் வெளியாக இருக்கும் இயக்குநர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சி நேற்று மதியம் பிரசாத் லேப் தோட்டத்தில் நடைபெற்றது.

படத்தின் நாயகன் சசி குமார், நாயகி வரலட்சுமி , நடிகரும், இயக்குநருமான ஜி.எம்.குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சசிகுமார் முதலில் ஆரம்பித்தார்.. “பாலா சார் இந்தப் படத்துல நான் நடிக்கணும்னு விருப்பப்பட்டாரு. படத்துல நடிக்கிறதுக்காக நான் ஹீரோ மாதிரில்லாம் அவர்கிட்ட போகலை. அவரோட சிஷ்யனாத்தான் போனேன். 

இந்தப் படம் ‘கரகாட்டம்’ சம்பந்தப்பட்ட கதை, அதனால நல்லா பயிற்சி எடுத்துக்கணும்னு சொன்னாரு. நடனம் ஆடறது, நாதஸ்வரம் வாசிக்கிறது இந்த டிரெயினிங்கெல்லாம் எடுக்கணும்னு சொன்னாரு. அதுக்காக இரண்டு மாசம் பயிற்சி எடுத்தேன். அதுக்கப்புறம்தான் கேமிரா முன்னாடி போய் நின்னேன்.

இந்தப் படத்தில் ‘சன்னாசி’ என்ற கேரக்டர்ல நடிச்சிருக்கேன். கதைப்படி நாட்டுப் புறக் கலைக் குழு ஒன்றை நடத்துகிறேன். அந்தக் குழுவில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ நான்தான். உண்மையா எனக்கு நாதஸ்வரம் வாசிப்பதுதான் வேலை. ஆனால் தவில் வாசிப்பவர் வரவில்லையென்றால், நானே தவில் வாசிப்பேன். நாயனம் வாசிப்பவர் லீவு என்றாலும் நாயனமும் வாசிப்பேன். இதுதான் எனது கேரக்டர் ஸ்கெட்ச்.

‘கரகாட்டம்’கறது ஒரு எண்ட்டர்டெயின்மெண்ட்.. அந்தக் கரகாட்டம் ஆடுறவங்களோட வாழ்க்கையில நடக்கிற சந்தோஷம், துக்கம், காதல் அது எல்லாமும்தான் இந்தப் படத்துல இருக்கு.

இதுக்கு முன்னாடி வந்த ‘கரகாட்டம்’ சம்பந்தமான படங்களுக்கும், இந்தப் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இது பாலா சார் பாணியில உருவாகியிருக்கிற படம்.

இளையராஜா சாரோட 1000-மாவது படத்துல நடிக்கிறது பெருமையான விஷயம்.. ‘சேது’ படத்துல பாலா ஸார்கூட நான் வேலை பார்த்தேன். இப்போ இந்தப் படத்துலேயும் வேலை பார்த்து இன்னும் நிறைய விஷயம் கத்துக்கிட்டேன்..” என்றார் சசிகுமார்.

பொதுவாக படப்பிடிப்பில் காட்சியின் தன்மையை மட்டும் இயக்குநர் விளக்க, நடிகர்கள் நடித்து விடுவார்கள். பின்புதான் அந்தக் காட்சிக்கேற்ற பின்னணி இசையை இசையமைப்பாளர் இசைத்து அதனை படத்துடன் இணைத்துக் கொடுப்பார். ஆனால் இந்தப் படத்தில் உல்டாவாக நடந்திருக்கிறது.

இசைஞானி இளையராஜா ஏற்கெனவே அமைத்துக் கொடுத்திருந்த பின்னணி இசைக்குப் பொருத்தமாக நடிகர்கள் நடித்தார்களாம்.

“படப்பிடிப்பில் காட்சிக்கு பொருத்தமான பாடலோ அல்லது பின்னணி இசையோ ஒலிக்கும். அதற்கு ஏற்ப நாங்கள் முகபாவத்தை செய்து நடித்துக் கொடுத்தோம். இப்படியேதான் படம் முழுக்க அனைவருமே நடித்தோம்..” என்றார் சசிகுமார்.

Our Score