full screen background image

தொல் பொருள் ஆய்வின் பின்னணியில் உருவாகும் ‘தாழ் திறவா’ திரைப்படம்

தொல் பொருள் ஆய்வின் பின்னணியில் உருவாகும் ‘தாழ் திறவா’ திரைப்படம்

சில படங்கள் ஃபர்ஸ்ட் லுக் முதல் ட்ரெய்லர்வரை ஒவ்வொன்றையும் மக்கள் ஆச்சரியப்படுத்தும்விதத்தில் அமைத்திருப்பார்கள். அதுவே படத்துக்கு  நல்ல ஒப்பனிங்கை எடுத்து வரும். இதற்கு உதாரணமாகப் பல படங்களைக் கூறலாம். அந்த வரிசையில் இடம் பெறவுள்ள படம் ‘தாழ் திறவா’.

பர்மேன் பிக்சர்ஸ் நிறுவனம்  இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், ஜீ தமிழில் ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் நடித்துள்ள லிசா என்ற பெண்ணும், லலித் என்ற பையனும் நடித்துள்ளார்கள். இரண்டு குட்டீஸும் கண்டிப்பாக பார்வையாளர்களைக் கவர்வார்கள். படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. அது என்ன என்பது சஸ்பென்ஸ்.

இசை – சந்தோஷ் தயாநிதி, ஒளிப்பதிவாளர்கள் – சாலமன் போஸ் மற்றும் சபேஷ் கே.கணேஷ், படத் தொகுப்பு – மணிகண்டன், கலை இயக்கம் – ராகவா குமார், ஆடை வடிவமைப்பாளர் – சுகி, ஒப்பனை – வினோத் சுகுமாரன், மக்கள் தொடர்பு – யுவராஜ், எழுத்து, இயக்கம் – பரணி சேகரன்.

தலைப்பு வித்தியாசத்துடன் மட்டுமே இந்தப் படக் குழு களமிறங்கவில்லை. வித்தியாசமான கதைக் களம், நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என்று அனைத்துமே இந்தப் படத்தில் ஒன்று சேர்ந்தாற்போல் அமைந்துள்ளது. 

பரணி சேகரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இது எந்த மாதிரியான கதைகளம் என்பதையே யூகிக்க முடியாத அளவில் வடிவமைத்துள்ளது படக் குழு.

இது குறித்து ‘தாழ் திறவா’ படத்தின் இயக்குநரான பரணி சேகரனிடம் கேட்டபோது, “இது மர்மங்கள் நிறைந்த திகில் படம். அடுத்த காட்சி என்ன, என்பதை யாராலும் யூகிக்க முடியாத அளவில் இருக்கும். தொல்பொருள் ஆய்வை மையப்படுத்திய படம் என்பதால், இதற்காக நிறைய முன் தயாரிப்பு தேவைப்பட்டது.

பெரியவர்கள் முதல் குழந்தைகள் ரசிக்கும் விஷயங்கள் வரை ஒரு சேர இருப்பதுபோல் இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைத்துள்ளேன்.

ஒரு சின்ன ஊருக்குள் தொல்பொருள் சோதனை ஒன்று நடக்கிறது. அங்கு மறைந்திருக்கும் முந்தைய காலத்து மனிதர்களின் நாகரீக வாழ்க்கைக்கான அடையாளங்களை கண்டுபிடிக்கிறார்கள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக எப்படி ஒரு குழு சரி செய்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

ஊட்டி, கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். இப்போதே சுமார் எண்பது சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

இந்தப் படத்தின் கதையில் கிராபிக்ஸ் முக்கியமான பங்கு வகிக்கும். இதனை ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘கடாரம் கொண்டான்’ உள்ளிட்ட பல படங்களுக்கு கிராபிக்ஸ் மேற்பார்வையாளராக பணிபுரிந்த செந்தில் தலைமையில் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒரு கதைக்கு நல்ல தொழில் நுட்ப கலைஞர்கள் கிடைத்துவிட்டால், எதுனாலும் சாத்தியம்தான் என்பார்கள். அந்த வகையில் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருமே தங்களுடைய பணியை ரொம்பவே புரிந்து, ஆத்மார்த்தமாகச் செய்துள்ளனர். கண்டிப்பாக இவர்களுடைய ஒவ்வொருவருடைய பணியும் உங்களை அசர வைக்கும். இப்போதைக்கு படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளோம். விரைவில் அடுத்தடுத்த செய்திகளுடன் உங்களை சந்திப்போம்..” என்றார்.

Our Score