full screen background image

கோட்டைநோக்கி பேரணி – திரையுலகத்தினரின் அடுத்த போராட்டம்..!

கோட்டைநோக்கி பேரணி – திரையுலகத்தினரின் அடுத்த போராட்டம்..!

க்யூப் கட்டணத்தை ரத்து செய்யக் கோரியும், தியேட்டர்களின் கட்டணத்தை நெறிமுறைப்படுத்த வேண்டியும் தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட திரையுலகத்தினரின் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

இப்போதுவரையிலும் பல முறை இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானத்திற்கு வழியில்லாமல் இருக்கிறது.

இந்த நிலைமையில் அடுத்த புதன்கிழமை இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் திரையுலகத்தினர் அனைவரும் ஒன்று கூடி, தலைமைச் செயலகம் அமைந்திருக்கும் கோட்டை நோக்கி பேரணி நடத்தப் போவதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால் அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்  சங்கத்தின் தலைவர்   விஷால், பெப்சி கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர் சங்கத்தின் கெளரவ செயலாளர் 5 ஸ்டார் கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, ஒளிப்பதிவாளர் சங்க தலைவர் பி.சி.ஸ்ரீ ராம், இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் உள்ளிட்ட  முக்கிய நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டு பேசினர்.

tfpc-fefsi-meeting-2

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேசும்போது, “இப்போதைய தமிழகத்தின் நிலைமையில் விவசாயிகளும்,  தயாரிப்பாளர்களும் ஒன்று என்கிற நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம்.

பொதுமக்கள் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்க்கும்போது அவர்களுக்கு எந்தவித பாரமும் இல்லாமல் இருக்க வேண்டும். அதற்காகத்தான் இந்தப் போராட்டத்தை நாங்கள் துவக்கியுள்ளோம். தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் கம்ப்யூட்டர் மூலமாக டிக்கெட் வழங்க வலியுறுத்தி உள்ளோம்.

இப்போதுவரையிலும் எங்களுடைய அனைத்து கோரிக்கைகளும் முழுமையாக நிறைவேறாததால் புதிய திரைப்படங்களை வெளியிட போவதில்லை என்ற தற்போதைய நிலையே தொடரும். 

மேலும் எங்களது கோரிக்கைகளை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் ஒரு மனுவாக கொடுக்க உள்ளோம்.  முதலமைச்சர், செய்தித் துறை அமைச்சர் இருவரும் தலையிட்டு இந்தப் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும். இதற்காக அடுத்த வாரம் புதன்கிழமை தலைமைச் செயலகம் இருக்கும் கோட்டை நோக்கி பேரனியாக சென்று மனு கொடுக்க உள்ளோம்.

வேலை நிறுத்தம் என்றால் அடிமட்ட ஊழியர்களுக்கு கஷ்டமான ஒன்றாகத்தான் இருக்கும், ஆனால் அதற்கான தகுந்த, நியாயமான தீர்வு விரைவில் கிடைக்கும்…” என்றார்.

tfpc-fefsi-meeting-3

பெப்சி தலைவர் ஆர்,கே.செல்வமணி பேசும்போது, “திரையரங்குகளில் கம்ப்யூட்டர் மூலமாக டிக்கெட்டுகளை வழங்க வேண்டும். குறைந்த அளவில் படம் பார்க்க வரும் மக்களிடம் அதிக அளவில் பணம் வாங்குவதால்தான் படம் பார்க்க மக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை.

அரசு இதை ஒரு வாரியம் மூலமாக ஒழுங்கு செய்தால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். எனவே வரும் புதன்கிழமை ஊர்வலமாக வந்து மனு கொடுக்க அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்தால் அனைவரும் ஒன்றாக பேரணியாக சென்று முதல்வர் மற்றும் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுக்க உள்ளோம்…” என்றார்.

Our Score