தமிழ்த் திரையுலகத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்ஸி அமைப்பிற்கும் இடையே திடீரென்று மோதல் எழுந்துள்ளது.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் டெக்னீஷியன் யூனியன், தங்களது தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை ஏற்றுக் கொள்ள மறுத்திருக்கிறது. இதனால்தான் பிரச்சினை வெடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
வெளியூரில் நடைபெறும் படப்பிடிப்பிற்காக டெக்னீஷியன் சங்கத்தைச் சேர்ந்த கேமிரா உதவியாளர்கள், உதவி கேமிராமேன்களை அழைத்துச் செல்வது வழக்கம். அப்படி போகும்போது இவர்களை பேருந்திலோ அல்லது புகைவண்டியிலோ அழைத்துச் செல்வார்கள்.
இந்த பேருந்து பயணம் மற்றும் புகைவண்டி பயணம் 12 மணி நேரத்தைத் தாண்டினால் அரை பேட்டா எனவும், 24 மணி நேரத்தைத் தாண்டினால் முழு பேட்டாவும் அந்தந்த தொழிலாளிகளுக்குத் தரப்பட வேண்டும் என்பது தற்போதைய சம்பள விதிமுறை. இதனை பெப்சி அமைப்பும், தயாரிப்பாளர் சங்கத்தினரும் பேசி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.
ஆனால் இப்போது ஒரு புதிய படத்திற்காக டெக்னீஷியன்கள் வெளியூருக்கு செல்லும்போது 24 மணி நேரத்திற்கு மேல் பயணமானால் 2 பேட்டாவும், 12 மணி நேரத்திற்கும் மேல் பயணமானால் 1 பேட்டாவும் தரப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிடவும் அதிகமாக கேட்டிருக்கிறார்கள்.
இதனை மறுத்த தயாரிப்பாளர் தர முடியாது என்று சொன்னதால் டெக்னீஷியன்களும் ஷூட்டிங்கிற்கு வர முடியாது என்று மறுத்துள்ளனர். இதனால் அவுட்டோரில் இவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் படப்பிடிப்புக் குழுவினர் கலக்கமடைந்துள்ளனர். நாளை நடைபெறவிருந்த அந்தப் படத்தின் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது.
இதனை உடனடியாக தயாரிப்பாளர் சங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்ததால் இன்று மாலை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷாலின் தலைமையில் அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளரின் நிலைமை பரிசீலிக்கப்பட்டது. செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படியான சம்பளத்தையே தொழிலாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்றால் இனிமேல் அந்த ஒப்பந்தம் எதற்கு என்று ஆவேசப்பட்டுள்ளனர் தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்கள்.
இதனால் தடாலடியாக செயல்பட்ட தயாரிப்பாளர் சங்கம் உடனடியாக பெப்சி அமைப்புடனான தொழிலாளர்களின் வேலை ஊதிய ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
மேலும், தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படங்களில் தங்களுக்கு விருப்பப்பட்ட யாரை வேண்டுமானாலும் பணிக்கமர்த்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
இதனால் குறைவான சம்பளத்திலும், பெப்சி அமைப்பில் இல்லாத உறுப்பினர்களும் சினிமா படப்பிடிப்பில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை இது :
“தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் இடையே பல நிலைகளில் சம்பள பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில் சம்மேளனத்தில் அங்கமாக இருக்கும் ஒரு சில அமைப்புகள் தன்னிச்சையாக செயல்பட்டு அடிக்கடி பேச்சுவார்த்தை மற்றும் படப்பிடிப்புகளில் தடங்கல்களை ஏற்படுத்தி தயாரிப்பாளர்களுக்கு பொருளாதார இழப்புகளையும், மன உளைச்சலையும் கொடுத்து வருகிறார்கள்.
தொழிலாளர் சம்மேளனமும் அவற்றை கண்டுகொள்ளாமலும் தனிப்பட்ட முறையில் தயாரிப்பாளர்களை இழிவுபடுத்துவதையும் கண்டிக்காமல் இருந்து வருகிறது.
இது போன்ற விசயங்கள் பல ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது. இவற்றால் ஒவ்வொருமுறையும் திட்டமிட்டு பேச்சுவார்த்தைகளுக்கு தடங்கல் ஏற்படுத்தவும் இறுதியில் அவர்களாகவே ஒரு சம்பளம் நிர்ணயத்து அராஜக முறையில் தயாரிப்பாளர்களின் பலவீனத்தை பயன்படுத்தி அதையே நிரந்தரமான சம்பளமாகவும் நிர்ணயித்து விடுகிறார்கள்.
ஆனால், இனிமேலும் தயாரிப்பாளர்கள் சங்கம் தயாரிப்பாளர்களை கைவிட இயலாது. சம்மேளனமோ, தொழிலாளர்களோ, தயாரிப்பாளர்களுக்கு எதிரி அல்ல. உழைக்கும் தொழிலாளர்களுக்கு அதற்குரிய ஊதியத்தை முறையாக வழங்குவது தயாரிப்பாளர்களின் கடமை ஆகும். அதேவேளையில் அநியாமான முறையில் தயாரிப்பாளர்கள் நஷ்டப்படுவதை ஒருபோதும் ஏற்க இயலாது.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இனிமேல் தயாரிப்பாளர்கள் சங்கம் நிர்ணயிக்கும் சம்பள விவரங்களின்படி தயாரிப்பாளர்கள் தங்களின் படத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
அதே போல் இன்று முதல்(25.07.2017) தயாரிப்பாளர்கள் தங்களுக்கு உடன்படும் யாருடனும், தேவையான அளவில் ஆட்களை வைத்து வேலை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்…” என்று அறிவித்துள்ளது.