தெலுங்கு படவுலகின் மூத்த தயாரிப்பாளரான டி.ராமாநாயுடு இன்று காலமானார். அவருக்கு வயது 79.
உலகத்திலேயே மிக அதிகமான மொழிகளில் அதிக படங்களை தயாரித்தவர் என்கிற கின்னல் ரெக்கார்டை வைத்திருந்தவர் இந்த டக்குபதி ராமா நாயுடுதான்..
1936-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கரம்சேடு என்கிற குக்கிராமத்தில் பிறந்தவர் ராமா நாயுடு. இளம் வயதில் பல்வேறு தொழில்களை செய்தவர். சென்னையிலும் பத்தாண்டுகளுக்கு மேல் வசித்தவர்.
தெலுங்கின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகரான நாகேஸ்வர்ராவ் இவரது மிக நெருங்கிய நண்பர். சனசு சினிமாவுலக நண்பர்களுடன் இணைந்து 1963-ம் ஆண்டு தன்னுடைய மூத்த மகனான சுரேஷின் பெயரில் இவர் துவங்கிய சுரேஷ் புரொடெக்சன்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் இதுவரையில் 13 இந்திய மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்திருக்கிறார்.
தெலுங்கி மொழியில்தான் அதிகமான படங்களைத் தயாரித்திருக்கிறார். தமிழில் ‘நம்ம குழந்தைகள்’, ‘வசந்த மாளிகை’, ‘திருமாங்கல்யம்’, ‘மதுரகீதம்’, ‘குழந்தைக்காக’, ‘தனிக்காட்டு ராஜா’, ‘தெய்வப்பிறவி’, ‘மைக்கேல்ராஜ்’, ‘கை நாட்டு’, ‘சிவப்பு நிறத்தில் சின்னப்பூ’ ஆகிய படங்களை தயாரித்திருக்கிறார்.
இந்திய சினிமாவுக்கு இவர் ஆற்றிய சேவைக்காக 2009-ம் ஆண்டு ‘தாதாசாகேப் பால்கே’ விருதினைப் பெற்றிருக்கிறார். 2012-ம் ஆண்டு ‘பத்ம பூஷன்’ விருதினையும் பெற்றிருக்கிறார். இவர் தயாரித்த பல படங்கள் தேசிய விருதினையும், மாநில அரசின் விருதினையும், பிலிம்பேர் விருதினையும் பெற்றிருக்கின்றனர்.
தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினரும்கூட.. கடந்த 1999-ம் ஆண்டு குண்டூர் மாவட்டத்தில் இருக்கும் பாபாடாலா நாடாளுமன்றத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்தத் தேர்தலில் அதே தொகுதியில் தோல்வியடைந்தார்.
இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும், பேரன்களும், பேத்திகளும் உள்ளனர். தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான விக்டரி வெங்கடேஷ் இவரது இரண்டாவது மகனாவார். நடிகர் ராணா டக்குபதி இவரது பேரனாவார்.
1991-ம் ஆண்டு தன்னுடைய பெயரில் இவர் உருவாக்கிய டிரஸ்ட் சார்பில் ஆந்திராவின் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த ராமாநாயுடு இன்று ஹைதராபாத்தில் காலமானார். இவருடைய இறுதிச் சடங்கு நாளை நடைபெறவுள்ளது.