ஸ்ரீரெட்டியால் கலகலத்துப் போன தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தல்..!

ஸ்ரீரெட்டியால் கலகலத்துப் போன தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தல்..!

தெலுங்குல நடிகர்கள் சங்கமான ‘மா’ அமைப்பின் தேர்தலில், நடிகர் நரேஷ் தலைமையிலான அணி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

கடந்த நிர்வாகத்தில் தலைவராக இருந்த சிவாஜி ராவ்வின் தலைமையிலான அணி இத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளது.

தெலுங்கு திரையுலக நடிகர் சங்கம் Movie Artistes Association(MAA) மா என்று அழைக்கப்படுகிறது.

இந்தச் சங்கத்திற்கு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். அதன்படி 2019-2011-ம் ஆண்டிற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சர்ச்சைகள் கொடி கட்டிப் பறந்தன. இதற்கு முக்கியமான காரணம் மீ டூ பிரச்சினையைக் கிளப்பி தென்னிந்திய சினிமாவுலகத்தையே பரபரப்பாக்கிய ஸ்ரீரெட்டிதான்.

sri reddy

ஸ்ரீரெட்டி மீ டூ பிரச்சினையை கிளப்பி தன்னை நடிகர்கள் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டி அரைகுறை ஆடையுடன் பிலிம் சேம்பர் வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

தினந்தோறும் அவர் வெளியிட்ட பல வகை மீ டூ செய்திகளால் பல தெலுங்கு திரையுலகத்தினரும் கடுப்பாகிப் போனார்கள். பலரது குடும்பத்திலும் குழப்பமோ குழப்பம். தர்மசங்கடங்களை சந்தித்தது தெலுங்கு திரையுலகம்.

இதனால் முதல்முறையாக தெலுங்கு சினிமாவின் அனைத்து சூப்பர் ஸ்டார்களும் ஒன்று சேர்ந்து அண்ணபூர்ணா ஸ்டூடியோவில் ஒரு இரவு வேளையில் சந்தித்துப் பேசினார்கள். “ஸ்ரீரெட்டி கேட்பதைக் கொடுத்து அவரது வாயை அடையுங்கள்…” என்று முடிவெடுத்து இதனை நிறைவேற்றும் பொறுப்பை அப்போதைய நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரான நரேஷிடம் ஒப்படைத்தார்கள்.

sri reddy-5

நரேஷும் உடனேயே ஓகே சொல்லி ஸ்ரீரெட்டியிடம் விண்ணப்பத்தை வாங்கி செயற்குழுவில் அதனை முன் வைத்து பேசியபோது சில மாதங்களாக சங்கத்துப் பக்கமே தலைவைத்துக்கூட படுக்காமல் இருந்த சங்கத்தின் தலைவரான நடிகர் சிவாஜி ராஜா, திடீரென்று கூட்டத்துக்கு வந்தவர், விடாப்பிடியாக ஸ்ரீரெட்டியை சங்கத்தில் சேர்க்க மறுத்துவிட்டார். கூடவே ஸ்ரீரெட்டியைப் பற்றி மானாவாரியாகப் பேசி அறிக்கையும்விட்டுவிட்டார்.

இதையடுத்து மேலும் கோபமான ஸ்ரீரெட்டி இன்னும் கூடுதலான தகவல்களையும், தான் சந்தித்த பாலியல் விஷயங்களையும் வெளியில் சொல்லத் துவங்க தெலுங்கின் சூப்பர் ஹீரோக்கள் கடும் எரிச்சலானார்கள்.

இந்த நேரத்தில் சங்கத்தின் தலைவரான சிவாஜி ராஜா மீது கூடுதலாக நிதி மோசடி பிரச்சினையும் எழுந்தது. 2017-ம் ஆண்டு அமெரிக்காவில் கலை நிகழ்ச்சி நடத்த தெலுங்கு நடிகர்கள் சென்றபோது கிடைத்த பணத்தை சங்க நிதியில் சேர்க்காமல் பல முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது.

sivaji raja-naresh

இதனால் பொதுச் செயலாளரான நரேஷூக்கும், சிவாஜி ராஜாவுக்கும் இடையில் மோதல் எழுந்து தொலைக்காட்சிகளில் இருவரும் கண்மூடித்தனமாக மோதிக் கொண்டார்கள். இது குறித்து காவல்துறையில் புகார் செய்து அந்தப் புகார் அப்படியே இருக்க அதற்குள்ளாக அடுத்தத் தேர்தலும் வந்துவிட்டது.

இந்த முறை தானே தலைவராக நிற்க நரேஷ் முடிவு செய்து சூப்பர் ஸ்டார்களிடம் உதவி கேட்க.. உடனேயே சிரஞ்சீவியும், மகேஷ்பாபுவும், நாகார்ஜூனாவும் இவருக்கு ஆதரவு அளித்துள்ளனர். சிவாஜி ராஜாவிற்கு ஸ்ரீகாந்த் மட்டுமே ஆதரவளித்துள்ளார்.

naresh-team-poster

இப்படி மெகா ஸ்டார்களின் ஆதரவோடு நரேஷ் களத்தில் நின்றுள்ளார். நரேஷின் அணியில் பொதுச் செயலாளர் பதவிக்கு நடிகை ஜீவிதாவும், துணைத் தலைவர் பதவிக்கு ஜீவிதாவின் கணவர் டாக்டர் ராஜசேகரும் போட்டியிட்டுள்ளனர்.

ஜீவிதாவும், டாக்டர் ராஜசேகரும் களத்தில் குதித்தமைக்கும் ஸ்ரீரெட்டி விவகாரம்தான் காரணம். தனது கணவரான நடிகர் ராஜசேகருக்கு பல பெண்களை செட்டப் செய்து அனுப்பி வைப்பதே அவரது மனைவியும் நடிகையுமான ஜீவிதாதான் என்று நடிகை ஸ்ரீரெட்டி ஒரு நாள் பேஸ்புக்கில் பற்ற வைக்க.. பாவம் பிரஸ் மீட் வைத்து அழும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார் ஜீவிதா. இந்த விவகாரத்தில் தெலுங்கு நடிகர் சங்கம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் ஜீவிதா. ஆனால் இதனை அப்போதைய தலைவர் சிவாஜி ராஜா கண்டு கொள்ளாததால் போராட்டக் குணமுடைய ஜீவிதா பட்டென்று கணவருடன் வந்து தேர்தல் களத்தில் இணைந்துவிட்டாராம்.

எதிரணியில் நடிகர் ஸ்ரீகாந்தின் ஆதரவோடு வேறு பெரிய நடிகர்களின் ஆதரவில்லாமல் களத்தில் நின்றார் முன்னாள் தலைவர் சிவாஜி ராஜா.

sivaji raja-team-poster

இவரது அணியில் பொதுச் செயலாளர் பதவிக்கு நடிகர் ரகு பாபு, கூடுதல் துணைத் தலைவர் பதவிக்கு நடிகர் ஸ்ரீகாந்த், துணைத் தலைவர்கள் பதவிக்கு எஸ்.வி.கிருஷ்ணா ரெட்டி, பேனர்ஜி, பொருளாளர் பதவிக்கு கோட்டா சங்கர ராவ், இணைச் செயலாளர்கள் பதவிக்கு பிரஹ்மாஜி, நாகி நீடு ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தச் சங்கத்தின் தேர்தல் பிரச்சாரம் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தையும் மிஞ்சிவிட்டது. தினம்தோறும் தெலுங்கு தொலைக்காட்சிகளில் ஆள் ஆளுக்கு ஸ்லாட் டைம் எடுத்தது போன்று நேரத்தைப் பெற்று அவரவர் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்தார்கள்.

மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் பென்ஷன் தொகையாக 5000 ரூபாய் கொடுப்போம்.. இலவச மருத்துவ இன்ஸூரன்ஸ், ஆயுள் இன்ஸூரன்ஸ், நடிக்க வேலை வாய்ப்புப் பெற்றுக் கொடுக்கப்படும் என்றெல்லாம் டிசைன், டிசைனாக வாக்குகுறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார்கள்.

சங்கத்தின் தேர்தல் நேற்று காலையில் தெலுங்கு பிலிம் சேம்பர் வளாகத்தில் நடைபெற்றது. இதுவரையிலான தெலுங்கு நடிகர் சங்க வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிக அதிகமாக.. 472 வாக்குகள் இத்தேர்தலில் பதிவாகியுள்ளன.

maa-election-4

இத்தேர்தலில் வாக்களிக்க நாகார்ஜூனாவும், சிரஞ்சீவியும் ஒரே காரில் வந்து இறங்கி தங்களது அணிக்கு பூஸ்ட் கொடுத்துள்ளனர். மகேஷ் பாபுவின் அப்பாவான கிருஷ்ணா உள்ளிட்ட பல முக்கிய நடிகர், நடிகைகளும் வாக்களித்துள்ளனர்.

ஓட்டு எண்ணிக்கை முடிந்த உடனேயே நேற்று மாலையே ஓட்டு எண்ணிக்கை துவங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் நரேஷ் அணியினரே பெருவாரியான பதவிகளைப் பிடித்துள்ளனர்.

இதன்படி தலைவராக நரேஷ் வெற்றி பெற்றார். நரேஷ் 268 வாக்குகளையும், சிவாஜி ராஜா 199 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

பொதுச் செயலாளராக நடிகை ஜீவிதா 289 வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஒய்.ரகு பாபு 178 வாக்குகளே பெற்றிருந்தார்.

raja sekar-jeevitha-naresh

கூடுதல் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் டாக்டர் ராஜசேகர் 240 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகர் ஸ்ரீகாந்த் 225 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

துணைத் தலைவர்களாக 200 வாக்குகள் பெற்ற நடிகை ஹேமாவும், 191 வாக்குகளைப் பெற்ற நடிகர் எஸ்.வி.கிருஷ்ணரெட்டியும் தேர்வாகியுள்ளார்கள்.

பொருளாளர் பதவிக்கான போட்டியில் 261 வாக்குகள் பெற்ற ராஜீவ் கனகலா வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து நின்ற டாக்டர் கோட்டா சங்கர ராவ் 209 வாக்குகளையே பெற்றிருந்தார்.

இணைச் செயலாளர்களாக 238 வாக்குகளைப் பெற்ற கெளதம் ராஜூவும், 233 வாக்குகளைப் பெற்ற சிவ பாலாஜியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

செயற்கு உறுப்பினர்களாக நடிகர்கள் அலி, ரவி பிரகாஷ், தணிகெல்லா பரணி, சாய்குமார், உட்டெஜ், புருத்வி, ஜாக்கி, சுரேஷ் கொண்டேடி, அனிதா செளத்ரி, அசோக் குமார், சமீர், எடிடா ஸ்ரீராம், ராஜா ரவீந்திரா, தனிஷ், ஜெயலட்சுமி, கராத்தே கல்யாணி, வேணு மாதவ், பசுனூரி சீனிவாஸ் ஆகிய 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

maa-election-5

வெற்றி பெற்றவுடன் வழக்கம்போல “இனிமேல் எல்லாரும் ஒரு அணிதான். என்றாலும் சங்கக் கணக்கு வழக்குகள் ஆராயப்பட்டு தவறுகள் வெளிப்படையாக வைக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை சட்டப்படி எடு்ப்போம்…” என்று சொல்லியுள்ளார் புதிய தலைவரான நரேஷ்.

இந்தப் புதிய நிர்வாகிகள் மூலமாக ஸ்ரீரெட்டி மீண்டும் ஹைதராபாத்தில் கால் பதித்து ‘மா’ சங்கத்தில் உறுப்பினராவார் என்று எதிர்பார்க்கிறார்கள் தெலுங்கு திரையுலகத்தினர். இப்படியாவது அவரது வாயை அடைக்கலாமே என்று நினைக்கிறார்கள் தெலுங்கு திரையுலகத்தினர்.

ஆனாலும், மீ டூ பற்றிய ஒரு டிவி கலந்துரையாடலில் நடிகை ஸ்ரீரெட்டியை டிவி நேரலையில் மேடையிலேயே தாக்கிய நடிகை கராத்தே கல்யாணி இப்போது செயற்குழு உறுப்பினராக தேர்வாகியிருப்பது சுவாரஸ்யமான விஷயம்.

இதனால் நமக்கு நிறைய எண்ட்டெர்டெயின்மெண்ட் காத்திருக்கிறது என்பதும் உறுதி.

Our Score