தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக சென்ற மாதம் திறக்கப்பட்ட திரையரங்குகளில் இதுவரையிலும் 50 சதவிகிதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் மெல்ல, மெல்ல கொரோனா பாதிப்புகளும், இறப்புகளும் குறைந்திருக்கும் நேரத்தில் தமிழ்ச் சினிமா துறையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி தருமாறு சினிமா தியேட்டர் அதிபர் சங்கங்களும், விநியோகஸ்தர்கள் அமைப்புகளும், பிற திரையுலக அமைப்புகளும் தமிழக அரசுக்கு தொடர் கோரிக்கை வைத்திருந்தன.
வரும் பொங்கல் தினத்தன்று மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாவதையொட்டி அத்திரைப்படத்திற்காக முதலமைச்சரை நேரில் சென்று சந்தித்த நடிகர் விஜய்யும் இது பற்றிய கோரிக்கையை அரசிடம் முன் வைத்திருந்தார்.
இப்போது இந்தக் கோரிக்கைகளையெல்லாம் ஏற்றுக் கொண்ட தமிழக அரசு சினிமா தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைகளுக்கான அனுமதி ஆணையை இன்று காலை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் பொங்கல் தினத்தன்று வெளியாகவிருக்கும் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படத்தின் தயாரிப்பாளர்கள் மட்டுமன்றி தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள், ஒட்டு மொத்தத் திரையுலகமே மகிழ்ச்சியடைந்துள்ளது.

