ஜனவரி 26-ம் தேதி சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தேர்தல்..!

ஜனவரி 26-ம் தேதி சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தேர்தல்..!

தமிழகத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் அங்கம் வகிக்கும் சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். அதுபோல தற்போதைய நிர்வாகத்தினரின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டதால் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வரும் ஜனவரி 26-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவிருக்கிறது.

சென்ற முறை போலவே இந்தாண்டும் இத்தேர்தலால் சின்னத்திரை நடிகர், நடிகையர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரணம், இந்த முறை தேர்தலில் 4 அணிகள் போட்டியிடுவதுதான்..!

தற்போதைய தலைவரான ஜி.சிவன் ஸ்ரீநிவாஸ்  தலைமையில் ‘வசந்தம் அணி’ என்கிற பெயரில் ஒரு அணியும், நடிகை நிரோஷாவின் தலைமையில் ‘நம்ம அணி’ என்கிற பெயரில் ஒரு அணியும், நடிகர் ரவி வர்மாவின் தலைமையில் ‘உழைக்கும் கரங்கள்’ என்கிற பெயரில் ஒரு அணியும், நடிகர் போஸ் வெங்கட்டின் தலைமையில் ‘புதிய தலைமுறை அணி’ என்கிற பெயரில்  ஒரு அணியுமாக… மொத்தம் நான்கு அணிகள் இத்தேர்தலில் அணி வகுத்து நிற்கின்றன.

ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், 2 துணைத் தலைவர்கள், 4 இணைச் செயலாளர்கள், 14 செயற்குழு உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக் கமிட்டிக்கு இந்த நான்கு அணிகளைச் சேர்ந்தவர்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

small screen actors union-election 2018-5

‘வசந்தம் அணி’யின் சார்பில் போட்டியிடும் நடிகர் ஜி.சிவன் ஸ்ரீநிவாஸ் அணியில் தலைவர் பதவிக்கு அவரே போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு பரத் கல்யாணும், பொருளாளர் பதவிக்கு நடிகை ஸ்ரீவித்யா சங்கரும் போட்டியிடுகிறார்கள்.

துணைத் தலைவர் பதவிக்கு மூத்த நடிகர்களான மனோபாலா, ராஜசேகர் இருவரும் போட்டியிடுகிறார்கள். இணைச் செயலாளர் பதவிக்கு நடிகை சி.கற்பகவள்ளி, நடிகர்கள் தினேஷ், எம்.டி.மோகன், சவால் ராம் என்னும் இராமநாதன் ஆகிய நான்கு பேர் போட்டியிடுகிறார்கள்.

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகைகள் அம்மு, ஆர்.அமுதப்பிரியா, ஆர்.புஷ்பலதா, சிவகவிதா, சுஹாசினி, ஆர்.வாசவி, மற்றும் நடிகர்கள் சின்னி ஜெயந்த், ஆர்.ஆதித்யா, இ.கணேஷ்பாபு, பார்த்தா என்னும் பார்த்தசாரதி, ஆர்.பிரேம்குமார், சி.எம்.ராஜ் கிருஷ்ணா, சரத் சந்திரா, வைரவராஜா என்னும் வைரமணி ஆகிய 14 பேர் போட்டியிடுகின்றனர்.

small screen actors union-election 2018-6

நடிகை நிரோஷாவின் தலைமையிலான ‘நம்ம அணி’யில் அவரே தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். நடிகர் பரத் செயலாளர் பதவிக்கும், நடிகர் ஸ்ரீதர் பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

நடிகர் வி.டி.தினகரன், நடிகை கன்யா பாரதி ஆகிய இருவரும் துணைத் தலைவர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

நடிகர்கள் விஜய் ஆனந்த், ரவீந்திரன், முனீஸ்ராஜா, நடிகை மோனிகா ஆகிய நால்வரும் இணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

நடிகைகள் ஷில்பா, கரோலின், சன்தோஷி, ஸ்வேதா, சுஜாதா மற்றும் நடிகர்கள் சதீஷ், வசந்த்குமார், அஸ்வின் குமார், பிர்லா, ஜெயராமன், எஸ்.பி.செந்தில் வேல், கோபாலகிருஷ்ணன், கே.பி.அண்ணாதுரை ஆகிய 14 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

small screen actors union-election 2018-1

‘உழைக்கும் கரங்கள்’ அணியின் சார்பில் போட்டியிடும் நடிகர் ரவி வர்மா அணியில் தலைவர் பதவிக்கு அவரே போட்டியிடுகிறார். நடிகர் ‘ஆடுகளம்’ நரேன் செயலாளர் பதவிக்கும், ஜெயந்த் பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள்.

துணைத் தலைவர் பதவிக்கு நடிகை லஷ்மி, நடிகர் ராஜ்காந்த் இருவரும் போட்டியிடுகிறார்கள்.

இணைச் செயலாளர் பதவிக்கு நடிகர்கள் அசோக் சாமுவேல், டி.சிவக்குமார், ஸ்ரீகஜேஷ், நடிகை டாக்டர் ஷர்மிளா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு நடிகைகள் தேவி கிருபா, டி.தீபா, எஸ்.ராகவி, பிரேமலதா, பிரேமலதா, செளதாமணி, தேவி, ஸ்வேதா பண்டேகர், நடிகர்கள் வெங்கடகிருஷ்ணன், சுதாகர், சி.என்.ரவிசங்கர், பிரகாஷ் ராஜன், எஸ்.பாண்டியராஜ், ஈஸ்வர் ரகுநாதன், ஆர்.தேவேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

small screen actors union-election 2018-4

நடிகர் போஸ் வெங்கட்டின் தலைமையில் போட்டியிடும் ‘புதிய தலைமுறை அணி’யின் சார்பில் தலைவர் பதவிக்கு போஸ் வெங்கட்டே போட்டியிடுகிறார்.

செயலாளர் பதவிக்கு நடிகர் பி.கே.கமலேஷூம், பொருளாளர் பதவிக்கு வி.நவீந்தரும் போட்டியிடுகின்றனர்.

இணைச் செயலாளர் பதவிக்கு நடிகை சோனியா வெங்கட்டும், நடிகர் எல்.ராஜாவும் போட்டியிடுகின்றனர்.

துணைத் தலைவர் பதவிக்கு நடிகர்கள் தாடி பாலாஜி, தேவ் ஆனந்த், கே.கமலஹாசன் மற்றும் நடிகை திகா என்னும் சுமதியும் போட்டிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு நடிகைகள் பி.அருணா தேவி, சந்திரா லட்சுமண், டி.தாட்சாயிணி, ஷாமிலி, நீபா என்கிற சண்முகப்பிரியா, ஆர்.ஸ்ருதி சண்முகப்பிரியா, எஸ்.சுதா, ஸ்வேதா சுப்ரமணியன், நடிகர்கள் ஆர்.வெங்கடேஷ், சக்தி சரவணன், ரிஷி, குரு என்னும் வி.அரவிந்த், ஜெமினி என்கிற தணிகை அரசு, டி.பி.கஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வரும் ஜனவரி 26-ம் தேதி விருகம்பாக்கம் மார்க்கெட் அருகில் இருக்கும் A.K.R. கல்யாண மண்டபத்தில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் வாக்குப் பதிவு நடைபெறும்.

முக்கிய பதவிகளுக்கான ஓட்டுக்கள் அன்றைய தினமே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். செயற்குழு உறுப்பினர்களுக்கான ஓட்டுக்கள் மறுநாள் எண்ணப்படும்.

ஜனவரி 27 அல்லது ஜனவரி 28 அன்று புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொள்வார்கள் என்று தெரிகிறது.

இப்போது ஒவ்வொரு நடிகர், நடிகையரின் செல்போனிலும் மெஸேஜ்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. நான்கு அணிகளும் தத்தமது அணிக்காக பொதுவான ஒரு மெஸேஜையும், மற்றும் போட்டியிடுபவர்கள் பலரும் தனித்தனியாக மெஸேஜையும் அனுப்பிக் கொண்டேயிருக்க.. பல நடிகர், நடிகையரின் செல்போன்கள் ஹேங்காகும் லெவலில் இருக்கிறதாம்.

சிலரது வீடுகளுக்கு நேரில் சென்று கேன்வாசிங் வேலைகளெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். பலருக்கும் தொலைபேசியில் பேசி ஓட்டுக்கள் கேட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தற்போதைய நிர்வாகத்தினர் பெரிதாகக் குற்றச்சாட்டுக்கள் எழாதவாறு நிர்வாகத்தை நடத்தியிருந்தாலும், எதற்காக இப்படி 4 முனை போட்டி உருவானது என்பது தெரியாமல் சங்க உறுப்பினர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பதுதான் செம காமெடியாக இருக்கிறது.

Our Score