பேட்ட – சினிமா விமர்சனம்

பேட்ட – சினிமா விமர்சனம்
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.
 
படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சிம்ரன், திரிஷா இருவரும் நடித்துள்ளனர்.
 
மேலும், நவாஸூதின் சித்திக், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, ‘ஆடுகளம்’ நரேன், மாளவிகா மோகனன், மேகா ஆகாஷ், சனத் ரெட்டி. முனீஸ்காந்த், இயக்குநர் மகேந்திரன், ஒய்.ஜி.மகேந்திரன், சின்னி ஜெயந்த், குரு சோமசுந்தரம், கஜராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
எழுத்து, இயக்கம் – கார்த்திக் சுப்பராஜ், தயாரிப்பாளர் – கலாநிதி மாறன், ஒளிப்பதிவு – எஸ்.திருநாவுக்கரசு, இசை – அனிருத் ரவிச்சந்தர், படத் தொகுப்பு – விவேக் ஹர்ஷன், தயாரிப்பு வடிவமைப்பு – சுரேஷ் செல்வராஜன், சண்டை இயக்கம் – பீட்டர் ஹெயின், ஒலி வடிவமைப்பு – குணால் ராஜன், உடைகள் வடிவமைப்பு – நிகாரிகா கான், பிரவீன் ராஜா, உடைகள் – சுபீர், பாடல்கள் – விவேக், கு.கார்த்திக், தனுஷ், ஒப்பனை – பானு, வினோத், நடனம் – ஷெரீப், பாபா பாஸ்கர், போஸ்டர் டிசைன்ஸ் – ரமேஷ் ஆச்சார்யா, ஆர்.ஆர்ட் வொர்க்ஸ், சஞ்சய் ராகவன் தி பாக்ஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட், கிராபிக்ஸ் டிசைன்ஸ் – பிரைம் போகஸ், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமது, கலரிஸ்ட் – எம்.கார்த்திகன், புகைப்படங்கள் – சி.ஹெச்.பாலு, தருண் கைவால், விளம்பர வடிவமைப்பு – டுனி ஜான், தயாரிப்பு மேற்பார்வை டீம் – டி.ரமேஷ் குச்சிராயர், ஆர்.எஸ்.சுரேஷ் மணியன், சேது, அசோக், நிர்வாகத் தயாரிப்பு – கார்த்திகேயன் சந்தானம், இணை இயக்குநர்கள் குழு – ராஜேந்திர பாலா, ஆனந்த் புருஷோத், சீனிவாசன், சாருகேஷ், பரத், கார்த்திக், தாக்சி, ஷைலம், உதவி இயக்குநர்கள் குழு – விக்னேஷ்வரன், ஜெகதீஷ் பாபு, மகேந்திர வர்மா, கெளதம் கிருஷ்ணன்.
 
‘கபாலி’, ‘காலா’வில் வித்தியாசமான ரஜினியைக் காட்டியிருப்பதாகச் சொன்னார் பா.ரஞ்சித். இதற்கடுத்த ‘2.0’ படத்தில் இப்போதைக்கு உலகளவில் திரைத்துறையில் இருக்கின்ற அனைத்துவகை தொழில் நுட்பத்தையும் கண்ணில் காட்டி அதனுள் ரஜினியைத் திணித்திருந்தார் இயக்குநர் ஷங்கர். இதுவும் பொதுவானவர்களையே கவர்ந்தது. ஆனால், ரஜினி ரசிகர்களைக் கவரவில்லை.
 
இதற்கு வட்டியும், முதலுமாகச் சேர்த்து வைத்து இந்த ‘பேட்ட’ படத்தில் தந்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இதுவொரு பக்கவான ரஜினி படம். ரஜினி ரசிகர்களை மட்டுமே மனதில் வைத்து உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
 
‘பேட்ட வேலன்’ என்னும் கொலைகாரன், ரவுடி, தாதா எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அந்தக் கேரக்டரில் வாழும் ஒரு மனிதனின் கதைதான் இந்த ‘பேட்டா’.
 
சுருக்கமாகச் சொன்னால் நிஜத்தில் வில்லன். ஆனால் திரையில் நாயகன். விநோதமான இந்த நாயக பிம்பத்தை ரஜினியைத் தவிர வேறு யாரும் வெற்றிக் கொடி காட்ட முடியாதுதான். இதைத் திறம்படச் செய்து காட்டியிருக்கிறார் ரஜினி.
 
ஊட்டி மலைப் பிரதேசம். அங்கேயிருக்கும் ஒரு கல்லூரிக்கு அமைச்சர் ஒருவரின் சிபாரிசில் ஹாஸ்டல் வார்டன் பணியில் சேர வருகிறார் ‘காளி’ என்னும் ரஜினி.
 
வந்த இடத்தில் மாணவர்களில் ஒரு சிலரிடம் இருக்கும் ரவுடித்தனத்தை அடக்கி ஒடுக்குகிறார். பாதிக்கப்படும் மாணவரான ‘மைக்கேல்’ என்னும் பாபி சிம்ஹா தன் தந்தையான ‘ஆடுகளம்’ நரேனிடம் சென்று புகார் சொல்கிறார்.
 
அதே கல்லூரியில் கேண்டீனை குத்தகைக்கு எடுத்து நடத்தும் ‘ஆடுகளம்’ நரேன் முதலில் இதைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறார். ரஜினியின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் மிகப் பெரிய அளவுக்கு பாதிப்புக்குள்ளாகிறார் பாபி சிம்ஹா.
 
அதே கல்லூரியில் படிக்கும் அன்வர் என்னும் மாணவர், உடன் படிக்கும் சக மாணவியான மேகா ஆகாஷைக் காதலிக்கிறார். இந்தக் காதலை வாழ வைக்க நினைக்கிறார் ரஜினி. இதற்காக மேகாவின் வீட்டுக்குப் போய் அவளது அம்மாவான ஹீலர் மருத்துவரான ‘மங்களம்’ என்னும் சிம்ரனிடம் பேசுகிறார். சிம்ரன், ரஜினியைப் பார்த்தவுடன் மனதைப் பறி கொடுக்கிறார். ரஜினியும் அப்படியே..!
 
காதலர்கள் தினத்தன்று கல்லூரியில் அன்வரும் மேகாவும் தனிமையில் பேசிக் கொண்டிருக்க.. அங்கே வரும் பாபி சிம்ஹாவும் அவரது நண்பர்களும் இந்துக் கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்றுபவர்களை போல அன்வரின் கையில் தாலியைக் கொடுத்து அதனை மேகாவின் கழுத்தில் கட்டி தம்பதிகளாகும்படி கட்டாயப்படுத்துகிறார்கள்.
 
அந்த நேரத்தில் அங்கே பிரசன்னமாகும் ரஜினி அவர்களை அடித்து ஓட, ஓட விரட்டுகிறார். இந்த முறை பாபி சிம்ஹாவின் கோபக் கனலைப் பார்த்து அவரது வீடே அலறுகிறது. இப்போது நேராக அந்த வீட்டுக்கே வரும் ரஜினி ‘ஆடுகளம்’ நரேனையும் அடித்துவிட்டு எச்சரிக்கை செய்துவிட்டுப் போகிறார்.
 
இதனால் கொதிப்பாகும் ‘ஆடுகளம்’ நரேன், தனது அடியாட்களை அனுப்பி ரஜினியை நாலு தட்டுத் தட்டச் சொல்லி அனுப்பி வைக்கிறார். ஆனால் அதே நேரம் எங்கிருந்தோ வரும் இன்னொரு கும்பல் ரஜினியையும், அன்வரையும் போட்டுத் தள்ள முயல்கிறது.
 
இவர்கள் தங்களுடைய கோஷ்டி இல்லையே என்று நினைத்து பாபி சிம்ஹா திகைத்து நிற்க.. வந்தவர்களை ரஜினி அடித்துவிரட்டுகிறார். கூடவே அவர்கள் தேடி வந்தது அன்வரைத்தான் என்றும் சொல்கிறார் ரஜினி.
 
இப்போது அன்வர் யார்..? அவர்கள் ஏன் அன்வரைக் கொல்ல வர வேண்டும்..? ரஜினி ஏன் அன்வரை பாதுகாக்க வேண்டும்…? என்ற கேள்வியெல்லாம் எழ.. மதுரையை மையம் கொண்ட பிளாஷ்பேக் கதை விரிகிறது.
 
மதுரையில் ‘வேலன்’ என்ற இயற் பெயர் கொண்ட ரஜினியை சின்ன வயதில் இருந்தே ஒரு முஸ்லீம் அன்பர் வளர்த்து வந்திருக்கிறார். நெல்பேட்டை பகுதியில் வளர்ந்து வந்ததால் வேலனுக்கு முன்பாக ‘பேட்டை’ என்பது ஒட்டிக் கொண்டு ‘பேட்டை வேலன்’ என்றாகி, பின்பு அதுவும் பேச்சு வழக்கில் ‘பேட்ட’ என்று சுருங்கி, கடைசியில் இது மட்டுமே படத்தில் ரஜினியின் பெயராகவும் மாறிவிட்டது. இதுவே படத்தின் தலைப்புக்கும் காரணமாகிவிட்டது..!
 
அந்த முஸ்லீம் அன்பரின் மகன்தான் மாலிக் என்ற சசிகுமார். இவர் காதலிக்கும் பெண் மாளவிகா மோகனன், அந்தப் பகுதியில் செல்வாக்கு மிக்கவரான மகேந்திரனின் ஒரே செல்ல மகள். இவருடைய மகன்கள் மேலூர் பகுதியில் மணல் குவாரிகளை முறைகேடாக நடத்தி வருகிறார்கள்.
 
இந்த மணல் குவாரிகள் பற்றி மதுரை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்து மகேந்திரனின் மூத்த மகனை சிறைக்கு அனுப்பி வைக்கிறார் சசிகுமார். இதனால் சசிகுமார் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் மகேந்திரனின் குடும்பம்.
 
இந்த நேரத்தில் சசிகுமாரின் காதலியான மாளவிகா மோகனன் கர்ப்பமாக இருப்பதால் அவசரம், அவசரமாக திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். மகேந்திரன் தரப்பில் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றாலும் மகளை வீட்டை விட்டு வெளியேறிப் போய் கல்யாணம் செய்து கொள்ள மகேந்திரனே ஒப்புதல் தருகிறார்.
 
இதனால் சசிகுமார்-மாளவிகா மோகனின் திருமணம் நடைபெறுகிறது. இதன் பிறகு மகேந்திரனின் மூத்த மகன் சிறையில் இருந்து வெளியே வருகிறான். வந்தவன் சொத்துக்களையெல்லாம் தன்னுடைய தங்கை பெயரில் அப்பா எழுதி வைத்திருப்பதை அறிந்து மகேந்திரனுக்கு விஷம் கொடுத்து கொல்கிறான்.
 
மகேந்திரனின் சாவுக்கு வந்த ரஜினி, சசிகுமார், மற்றும் தன்னுடைய தங்கையைப் பார்த்து “அடுத்த சாவு அவர்கள்தான்” என்று உறுதியாய் சொல்கிறான் மூத்த மகன். இதனால் கோபப்படும் ரஜினி அந்த மூத்த மகனை அப்போதே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்கிறார்.
 
அதோடு மகேந்திரனின் இளைய மகன் ஊரைவிட்டு ஓடிப் போகிறான். அந்த வீட்டையும் சசிகுமார் தரப்பு கைப்பற்றிக் கொள்கிறது. ரஜினி ஜெயிலுக்குப் போய் ஜாமீனில் வெளியில் வருகிறார். மகேந்திரன் அடாவடியாய் பிடுங்கி வைத்திருந்த நிலங்களை மீண்டும் அந்த ஏழை மக்களிடமே திருப்பித் தருகிறார் ரஜினி.
 
சசிகுமாரின் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறும்போது திடீரென்று மகேந்திரனின் இளைய மகனான நவாஸூதின் சித்திக் வடநாட்டில் இருந்து லாரிகளில் ஆட்களை அழைத்துக் கொண்டு மதுரைக்கு வருகிறார்.
 
தான் பாசத்தோடு தங்கையை வாழ்த்த வந்ததாகச் சொல்லித் திட்டமிட்டு டைம் பாம் வைத்து அதன் மூலமாக பலரையும் கொலை செய்கிறார் சித்திக். இந்தக் கொலைச் சம்பவத்தில் ரஜினியின் மனைவியான சரோ என்னும் திரிஷா, ரஜினியின் மகன், சசிகுமார், மற்றும் சில உறவினர்கள் இறந்து போகிறார்கள்.
 
காப்பாற்றப்படும் மாளவிகா மோகனனை அங்கேயிருந்து நைச்சியமாக தப்பிக்க வைக்கிறார் ரஜினி. மாளவிகாவுக்கு மகன் பிறக்கிறான். அந்த மகன்தான் இந்த அன்வர். குழந்தை பிறந்தவுடன் மாளவிகாவை அழைத்துக் கொண்டு வட நாட்டுக்கு தப்பி வந்துவிடுகிறார் ரஜினி.
 
அதேபோல் சித்திக்கும் உத்தரப்பிரதேசத்திற்கு ஓடி வந்தவர் அங்கேயே செட்டிலாகி ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து மிகப் பெரிய புள்ளியாகிவிடுகிறார்.
 
இப்போது அவருக்கு ஜித்து என்னும் வளர்ப்பு மகனும், நன்கு படித்த இன்னொரு வளர்ப்பு மகனும் இருக்கிறார்கள்.
 
ஜித்து என்னும் விஜய் சேதுபதியை தனது அடிதடி வேலைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் சித்திக், இன்னொரு வளர்ப்பு மகனை கண்ணும், கருத்துமாய் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்.
 
டேராடூன் கல்லூரியில் தனது தங்கையின் மகன் படிப்பதையறியும் சித்திக் அவனைக் கொலை செய்ய முயற்சிக்கிறார். ரஜினி அதைத் தடுப்பதற்காகவே டேராடூன் வந்து அதே கல்லூரியில் விடுதிக் காப்பாளராக வேலைக்கு சேர்ந்த கதையைச் சொல்கிறார்.
 
இப்போது சித்திக் தனது அரசியல் பலத்தைக் காட்டி தன் மகன் விஜய் சேதுபதி மூலமாக ரஜினியையும், அன்வரையும் கொலை செய்ய முயற்சிக்கிறார். ரஜினி அதே விஜய் சேதுபதியைப் பயன்படுத்தி சித்திக்கை கொலை செய்யத் திட்டமிடுகிறார். இதில் யாருடைய முயற்சி வெற்றி பெற்றது என்பதுதான் இந்த ‘பேட்ட’ படத்தின் விரிவான திரைக்கதை.
 
‘சிவாஜி’ படம்வரையிலும் ஒவ்வொரு ரஜினியின் படத்திலும் அவரே பிரதானமாகப் பேசப்படுவார். பேசுபொருளாகவும் இருப்பார். ‘சந்திரமுகி’யைத் தவிர.. அதற்குப் பிறகு இந்தப் படம்தான் ரஜினி படமாகவே காட்சியளிக்கிறது.
 
ரஜினியின் டிரேட் மார்க் ஸ்டைல், சுறுசுறுப்பு, வேகம், பன்ச் வசனங்கள், காமெடி நடிப்பு, அலும்புகள், சிரிப்புகள் என்று சகலத்தையும் அவரது ரசிகர்களுக்காக இந்தப் படத்தில் படைத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.
 
படத்தின் துவக்கத்தில் கேட்டைத் திறந்து கொண்டு வருவது, கெத்தான ஸ்டைலில் அப்பாயிண்ட் ஆர்டரை வாங்குவது.. மாணவர்களிடத்தில் அதே ஸ்டைலில் பேசுவது. “பேண்ட்டை கிழிச்சு அண்ட்ராயரோட ஓட விட்ருவேன். அப்படியே ஓடிரு…” என்று பாபி சிம்ஹாவை மிரட்டுவது.. சிம்ரனை பார்த்தவுடன் ஜொள்ளு விடுவது. அந்தக் காதலை மறைக்காமல் ஏற்பது.. “உன் மாமியார்கிட்ட.. போடா…” என்று சனத் ரெட்டியிடம் எரிந்து விழவது.. என்று சகலத்திலும் ரஜினியின் மாஸ்தான் பேசியிருக்கிறது.
 
மகேந்திரனின் இறுதிச் சடங்கின்போது ஸ்டைலாக ஆடிக் கொண்டே கதவைச் சாத்தும்படி சொல்லிவிட்டு துப்பாக்கியை எடுத்து பொட்டென்று சுட்டுத் தள்ளிவிட்டு ஸ்டைலாக நிற்கும்போது பயங்கரமெல்லாம் இல்லை.. சாதாரணமான சண்டையாகவே அது காட்சியளிக்கிறது.
 
‘மலர்ந்து மலராத பாதி மலர் போல’ பாடல் ஒலிக்க ஈஸிசேரில் சாய்ந்தபடியே ரவுடிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஸ்டைல்.. அப்போது அவர் பேசும் அந்த நீள வசனம்.. இறுதியில் சித்திக்கின் வீட்டுக்குள் வந்து நின்று கொண்டு ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ பாடலுக்கு அவர் ஆடும் ஆட்டம் என்று தன்னுடைய ரசிகர்களுக்கு எப்படி, எப்படியெல்லாம் நடித்தால் பிடிக்குமோ.. அப்படியெல்லாம் நடித்திருக்கிறார் ரஜினி. இப்படி, எதைக் கொடுத்தால் அவரது ரசிகர்களுக்குப் பிடிக்குமோ அதையெல்லாம் ஒன்றுவிடாமல் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
 
“ஒதுங்கியிருக்கல்ல.. பதுங்கியிருந்தேன். நேரம் வரும்போது வரலாம்ன்னுதான்.. இப்போ நேரம் வந்திருச்சு. இனிமேத்தான் தரமான சம்பவத்த பார்க்கப் போறீங்க..” என்ற பன்ச்சான வசனம் எல்லாக் கோணங்களிலும் ரசிகர்களை சிலிர்க்க வைத்து கை தட்ட வைத்திருக்கிறது.
 
ஹாஸ்டலில் ‘சாப்பாடு நல்லாயில்லை’ என்ற பேச்சு எழும்போது, “நல்லா இல்லேன்னா கேள்வி கேக்கணும்; இல்ல நாமளே இறங்கி மாத்தணும்” என்று தனது ரசிகர்களுக்கும் சேர்த்தே வசனம் பேசி அவர்களது அரசியல் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியிருக்கிறார் ரஜினி.
 
கடைசியாக சித்திக்கை பரலோகத்திற்கு அனுப்பிவிட்டு ‘எனது மண்ணையும், மக்களையும் சுரண்டித் தின்னவனுக்கு இதுதான் கதி’ என்று அவர் விடுக்கும் எச்சரிக்கை யாருக்கெல்லாம் என்பது கேள்விக்குள்ளாகும் விஷயம்.
 
ரஜினிக்கு வயதாகிவிட்டது என்பது குளோஸப் காட்சிகளில் தெரிந்தாலும் சண்டை காட்சிகளில் அது தெரியாத வண்ணம் படமாக்கியிருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளில்கூட ரஜினி ஸ்டைலைவிடாமல் பின்பற்றியிருக்கிறார் இயக்குநர்.
 
வயதான தோற்றத்தில் இருப்பவரைவிடவும் ‘பேட்டை வேலனாக’ முறுக்கு மூசையுடன் இருக்கும் ரஜினி, ஸோ பியூட்டிபுல். அந்த மேக்கப்பை போட்ட ஒப்பனைக் கலைஞருக்கு நமது பாராட்டுக்கள்.
 
படம் நெடுகிலும் ரஜினி மயமாகவே படம் காட்சியளிப்பதால் கூட நடித்திருக்கும் நடிகர்களின் பாவங்களும், நடிப்புகளும் அதிகமாக கவனிக்க முடியாமல் போயிருக்கிறது.
 
இதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர் நவாஸூதின் சித்திக்குதான். கடந்த சில வருடங்களாக பாலிவுட்டின் அனைத்து ஹிட் படங்களிலும் தனது நடிப்பால் ஹிட்டடிக்க வைத்திருக்கும் சித்திக்கிற்கு இத்திரைப்படம் வெறும் சோளப் பொரியைத்தான் கொடுத்திருக்கிறது.
 
அதிலும் அவர் பேசும் வசனங்களும் டப்பிங் என்பது தெளிவாகத் தெரியும் அளவுக்குப் படமாக்கியிருக்கிறார்கள். அழுத்தமான காட்சியமைப்புகளும் அவருக்கு இல்லாமல் போக.. கடைசியில் ஒரு சோதா வில்லனைக் காட்டியிருப்பதாக இயக்குநர் மீது புகார் கூற வேண்டியிருக்கிறது.
 
இதேபோல் ஜித்துவாக நடித்திருக்கும் விஜய் சேதுபதியையும் சொல்லலாம். அவருடைய வழக்கமான நடை, உடை, பாவனையில் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தன்னுடைய தந்தை சார்ந்திருக்கும் கட்சியின் இந்துத்துவா கொள்கைகளுக்காக ரவுடியிஸம் செய்வதை அழுத்தமாகச் செய்தாலும் எதிரில் ரஜினி இருப்பதால் அது வலுவற்றதாகிவிட்டது.
 
போதாக்குறைக்கு ரஜினி கடைசி நிமிடத்தில் ஆடும் ஒரு டிராமாவில் அவர் பரிதாபமாகத் தோற்றுப் போகும் காட்சி பரிதாபம். இருந்தும் தான் ரஜினியின் மகன் என்றவுடன் அவர் காட்டும் குழப்ப ரேகையும், கோபப் பார்வையும், பிரச்சினையை அவர் கையில் எடுக்கும்விதமும் மிக யதார்த்தம். விஜய் சேதுபதிக்கும் இத்திரைப்படம் ஒரு பாடமாகவே இருக்கும்.
 
சிம்ரன் அழகு ராணியாக காட்சியளிக்கிறார். லாஜிக்கே இல்லாமல் ரஜினியைப் பார்த்தவுடன் காதலாகிவிடுகிறார். ரஜினியை அனுப்பிவிட்டு ஒரு ஆட்டமும் ஆடுகிறார். அந்த லவ் பீலிங் நமக்கு காமெடியாகத் தெரிகிறது. இருந்தும் இவரை அம்போவென இடையில் விட்டுவிட்டது ஏன் என்றுதான் தெரியவில்லை.
 
திரிஷாவுக்கும் இதே கதிதான். 4 காட்சிகளில் மட்டுமே திரிஷா வருகிறார். நல்லவேளையாக ரஜினியுடன் டூயட் போலவோ, நெருக்கமான காட்சிகளோ இல்லை என்பதால் நாம் தப்பித்தோம். ஒருவழியாக திரிஷாவுக்கு ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்கிற அவரது நீண்ட வருட கனவு பலித்துவிட்டது. அவ்வளவுதான்.
 
இயக்குநர் மகேந்திரனுக்கு சின்ன வேடம். டிபிக்கல் அப்பாவாக.. சம்பந்தம் பிடிக்கவில்லையென்றாலும் மகள் மீதான பாசத்தால் கட்டுண்டு போகும் ஒரு தந்தையாக நடித்திருக்கிறார். மகன் கொடுத்திருப்பது விஷம்தான் என்பது தெரிந்தாலும் அதை ஜீரணித்து முழுங்கும் அந்தக் காட்சியில் மனதைத் தொடுகிறார்.
 
ரஜினியின் நண்பராக மாலிக்காக சசிகுமார். சில காட்சிகளே வந்து மனதில் நிற்கிறார். இவரைக் காதலிக்கும் மேகா ஆகாஷ் முகத்திலேயே நடிப்பைக் கொட்டி திருமண ஏக்கத்தைக் காட்டுகிறார். தனது அப்பாவை தனது அண்ணனே கொலை செய்துவிட்டதை அறிந்து அண்ணனை கொலை செய்யும்படி ரஜினியிடமே சொல்லும்போது நடிப்பில் பாராட்டைப் பெறுகிறார்.
 
அன்வரான சனத் ரெட்டியும், மாளவிகா மோகனனும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஹாஸ்டல் சமையல் காண்ட்ராக்டராக முனீஸ்காந்த்.. கிடைத்த இடத்தில் ரஜினிக்கு காமெடி செய்யவும், ஸ்டைல் காட்டவும் ஒத்தாசையாக இருந்திருக்கிறார். ‘ஆடுகளம்’ நரேன் ஒரு அல்லல்படும் அப்பனாக.. ‘மகனாச்சும் படிச்சு பட்டம் வாங்கி வரட்டுமே’ என்று ஆசைப்படும் அப்பனாக இயல்பாக நடித்திருக்கிறார்.
 
முதலில் வில்லனாக அறிமுகமாகும் பாபி சிம்ஹா பாதி படத்தோடு உண்மை தெரிந்து ரஜினிக்கு நண்பனாகி அதுலேயும் பாதியோடு காணாமலும் போகிறார். இருக்கின்றவரையிலும் ஆட்டமாய் ஆடியிருக்கிறார்.
 
சாதாரணமான ஹீரோ இல்லை.. இந்தியாவுக்கே ‘சூப்பர் ஸ்டார்’ என்பதோடு அவருடைய ஸ்டைல் ரசிகர்களின் மனதில் பதிய வேண்டும் என்கிற முழு அக்கறையோடு ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு பம்பரமாகச் சுழன்றிருக்கிறார் போலும்..!
 
கல்லூரி காட்சிகள், சிம்ரன், ரஜினி சந்திப்பு, பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் என்று அத்தனையிலும் ஒளிப்பதிவு சில்லென்று இருக்கிறது. கலர் டோனுக்கும் கொஞ்சம் வேலை கொடுத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
 
பாடல் காட்சிகளை பிரம்மாண்டம் தெரியும் அளவுக்குப் படமாக்கியிருக்கிறார்கள். சண்டை காட்சிகளை ரஜினிக்கு கஷ்டம் கொடுக்காத அளவுக்கு அதே சமயம் ரஜினி ஸ்டைல் கொஞ்சமும் குறையாமலும் எடுத்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்.
 
படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகப் போய்விட.. இரண்டாம் பாதியில் கொஞ்சம் கூடுதலாக இழுத்துப் பிடித்திருப்பது ஒன்றுதான் படத்தின் குறை. இந்தக் குறையை நிவர்த்தி செய்யும்விதமாய் படத் தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் கத்திரியை போட்டிருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். இவருடைய கச்சிதமான நறுக்குதலில் சண்டை காட்சிகள் சிறப்பாக வந்திருந்தாலும் ஒட்டு மொத்தமாய் கத்திரியை இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
 
இசையமைப்பாளர் அனிருத் தனது மாமாவின் படத்தில் முதல்முறையாக வேலை பார்த்திருக்கிறார் என்பதால் கொஞ்சம் சிரத்தையெடுத்திருப்பது போலத்தான் தோன்றுகிறது.
 
ரஜினிக்காக தனி தீம் மியூஸிக், விஜய் சேதுபதிக்கு தனி மியூஸிக், நவாஸூத்தின் சித்திக்கிற்கு தனி மியூஸிக் என்று தனித்தனியாக இசையைக் கொட்டியிருக்கிறார்.
 
பாடல்களில் ‘மரண மாஸ்’, ‘இளமை திரும்புதே’, ‘பேட்ட பராக்’, ‘ஆஹா கல்யாணம்‘ ஆகிய பாடல்கள் கேட்கப் பிடிக்கின்றன. இசை அடங்கி குரல்கள் மட்டும் தெளிவாக ஒலிப்பது அனிருத்தின் இசையில் இதுதான் முதல் முறையாகும். பாடல் காட்சிகளில் ரஜினியின் ஸ்டைலே மாஸாகிவிட்டதால், பாடல்களை தனியே கேட்டுத்தான் ரசிக்க வேண்டியிருக்கிறது.
 
அச்சு அசலாக ‘பாட்ஷா’வின் இன்னொரு பாகமாகவே இத்திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். ‘பாட்ஷா போல கொடுத்தாலே போதும்’ என்று எதிர்பார்த்திருந்தால், இவர் ‘பாட்ஷா’ கதையையே நமக்குத் திருப்பிக் கொடுத்திருக்கிறார்.
 
துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் காட்டுவதற்கும், துப்பாக்கிகளை சாதாரணமாகப் பயன்படுத்துவதற்கும் உத்தரப்பிரதேச அரசியல் களம்தான் மிக எளிதாக இருக்கும் என்பதால்தான் அந்தப் பகுதியைக் கதையின் களமாக மாற்றியிருக்கிறார் இயக்குநர். இதில் லாஜிக் மிஸ்டேக் என்றெல்லாம் எதையும் பார்க்க முடியாது..!
 
ஆனால், மணல் கொள்ளை, விவசாயம், ஜாதியிசம், இந்துத்துவா, மாட்டுக்கறி, இந்துக் கலாச்சாரம், காதலர்கள் விவகாரம் என்று பலதரப்பட்ட அரசியல் விஷயங்களையும் இந்தப் படத்தில் தொட்டிருப்பதும், இதற்கு ரஜினி ஒத்து ஊதியிருப்பதையும் பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
 
நிஜவுலகில் மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கு ஊதுகுழலாக ரஜினி இருக்கிறார் என்று அனைவருமே சொல்லி வரும் நிலையில், அதே பா.ஜ.க.வை கிழித்துத் தொங்கவிடும் வகையில் காதலர்கள் தினத்தன்று இந்துத்துவாதிகள் காதலர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் ரவுடித்தனத்தில் ஈடுபடுவதை இதில் அப்படியே காட்டியிருக்கிறார் இயக்குநர்.
 
உத்தரப்பிரதேசத்தில் இப்போதைய ஆளும் கட்சியின் சார்பான ஆளாக நவாஸூதின் காட்டப்படுவதுகூட ஒரு அரசியல் குறியீடுதான். அதேபோல் விஜய் சேதுபதியை கொலை செய்ய சித்திக் ஆள் அனுப்பும்போது வந்தவர்கள் “மாட்டுக் கறியை விக்குறியா..?” என்று கேட்டுத்தான் விஜய் சேதுபதியைத் தாக்கத் துவங்குகிறார்கள்.
 
இப்படி பா.ஜ.க.வுக்கு வெளியில் ஆதரவு, திரையில் எதிர்ப்பு என்று இரண்டுவிதக் கொள்கையுடன் ரஜினி காட்சியளிப்பது, இந்தப் படத்தின் மூலம் நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு செய்தி.
 
இந்த வெற்றி ரஜினியை மேலும் கோலிவுட்டில் தங்க வைத்து, அரசியல் களத்திலிருந்து தள்ளி வைக்க உதவும் என்பதால் இதற்காகவே இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு மிகப் பெரிய கை தட்டலைப் பரிசாகக் கொடுக்கிறோம்..!
Our Score