“பெப்சி தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் இன்னமும் கையெழுத்தாகவில்லை…” என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான என்.ராமசாமி தெரிவித்துள்ளார்.
நேற்றைக்கு பெப்சியின் தலைவரான ஆர்.கே.செல்வமணி வெளியிட்ட ஒரு அறிக்கையில் “பெப்சி தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் இருப்பதால் அதனை தமிழக முதல்வர் முன்னிலையில் நடத்த விருப்பப்படுகிறோம். இதனால் தமிழக முதல்வர் இதற்கு நேரம் ஒதுக்கித் தர வேண்டும்…” என்று கேட்டிருந்தார்.
இந்தச் சூழலில் தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான என்.இராமசாமி இன்றைக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்த் திரை உலகில் 24 சங்கங்களை உள்ளடக்கிய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்றழைக்கப்படும் பெப்சியுடன் சம்பள உயர்வு குறித்து நமது சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இன்னும் சில சங்கங்களிடம் பேச்சுவார்த்தை முடிவடையவில்லை. இரு சாராரும் இன்னும் கையெழுத்து போட்டு இறுதியும் செய்யவில்லை. இன்னமும் சம்பள உயர்வு குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். சம்பள உயர்வு முடிவு செய்யப்படவில்லை.
அதற்குள் அதிக சதவிகிதம் சம்பள உயர்வு என்று பெப்சி தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவசர கதியில் தன்னிச்சையாக அறிவித்திருப்பதன் காரணம் என்ன? இந்த அறிவிப்பினால் தயாரிப்பாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
சம்பள உயர்வு பேச்சுவார்த்தை சுமூகமாக பேசி இறுதி செய்த பின்னர் தயாரிப்பாளர் சங்கமும், பெப்சியும் அது குறித்தான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பின் தயாரிப்பாளர்களுக்கு தெரியப்படுத்துவோம். அதன் பிறகுதான் சம்பள உயர்வு நடைமுறைக்கு வரும்.
அதுவரையில் இன்று நடைமுறையில் உள்ள சம்பளத்தையே தயாரிப்பாளர்கள் வழங்கி வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், இந்த கொரோனா மற்றும் ஓமைக்காரன் பிடியில் சிக்காமல் முக கவசத்தை படப்பிடிப்பு குழுவினருக்கு தவறாமல் வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றி படப்பிடிப்பு, பாடல் மற்றும் வசன பதிவு உட்பட அனைத்து திரைத்துறை பணிகளையும் எச்சரிக்கையுடன் தயாரிப்பாளர்கள் திரைப்பட பணிகளை கையாள வேண்டுகிறேன்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பார்கள். தயாரிப்பாளர்கள் நலமுடன் இருந்தால்தான் நம்மை நம்பி இருப்பவர்களும் நலமுடன் இருப்பார்கள். சமூக அக்கறையுடன் திரையுலக தொழில் நுட்பக் கலைஞர்களை காப்பதும் நமது கடமை” என்று அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.









