டிஜிட்டல் கட்டண உயர்வை கண்டித்து பட அதிபர்கள் மற்றும் நடிகர்-நடிகைகள் சென்னையில் நேற்று உண்ணாவிரதம் இருந்தார்கள்.
தமிழ்நாடு முழுவதும் இயங்கும் திரையங்குகளில் கியூப், யு.எப்.ஓ. போன்ற டிஜிட்டல் நிறுவனங்கள் மூலம்தான் படங்கள் திரையிடப்படுகின்றன. இதற்காக, அந்த நிறுவனங்கள், தயாரிப்பாளர்களிடம் இருந்து கட்டணங்களை வசூலிக்கின்றன. இந்த கட்டண தொகை அதிகமாக இருப்பதாகவும், திரைப்படங்களுக்கு இடையில் காட்டப்படும் விளம்பரங்களுக்கான கட்டணத்தை தயாரிப்பாளர்களுக்குத் தராமல் இருப்பதாகவும் ஒட்டு மொத்த தமிழ் திரைப்பட உலகமும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த டிஜிட்டல் கட்டண உயர்வை கண்டித்தும், விளம்பரங்கள் மூலம் அந்த நிறுவனங்கள் வசூலித்த 400 கோடி ரூபாயில் தயாரிப்பாளர்களின் பங்கு தொகையை வழங்க வலியுறுத்தியும், டிஜிட்டல் நிறுவனங்களை தமிழக அரசே ஏற்று நடத்தக் கோரியும் தமிழ் திரையுலகம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இதற்காக அங்கு மிகப்பெரிய அளவில் மேடை அமைக்கப்பட்டு, சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. மேடையை சுற்றிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘பேனர்’கள் வைக்கப்பட்டு இருந்தன. காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது.
உண்ணாவிரதத்துக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு தலைமை தாங்கினார். தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்ததுடன், அவரும் உண்ணாவிரதம் இருந்தார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவர்கள் கதிரேசன், பி.எல்.தேனப்பன், செயலாளர்கள் டி.சிவா, ராதாகிருஷ்ணன், பொருளாளர் டி.ஜி.தியாகராஜன், நடிகர் சங்க துணைத் தலைவர் விஜயகுமார், டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் வி.சேகர், பிலிம் சேம்பர் சார்பில் கே.முரளிதரன், எல்.சுரேஷ், ரவி கொட்டாரக்கரா, தயாரிப்பாளர்கள் கில்டு செயலாளர் ஜாகுவார் தங்கம், ‘பெப்சி’ தலைவர் ஜி.சிவா, செயலாளர் கே.ஆர்.செல்வராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.சந்திரன், டிஜிட்டல் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ‘கலைப்புலி’ ஜி.சேகரன், பத்திரிகை தொடர்பாளர்கள் சங்க தலைவர் விஜயமுரளி மற்றும் பட அதிபர்கள், டைரக்டர்கள், 24 சங்கங்களை சேர்ந்த திரைப்பட தொழிலாளர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள்.
நடிகர்கள் ஆர்யா, ஜீவா, உதயநிதி, நாசர், சரவணன், விவேக், சந்தானம், மனோபாலா, நடிகைகள் நளினி, குயிலி ஆகியோரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார்கள்.
உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட பட அதிபர் இப்ராகிம் ராவுத்தர் பேசும்போது, “தயாரிப்பாளர்களை சில டைரக்டர்கள் ஏமாற்றுகிறார்கள். மோசமான படங்களை எடுத்து இழப்பு ஏற்படுத்துகிறார்கள்..’’ என்றார். அவருடைய பேச்சுக்கு, இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன் எதிர்ப்பு தெரிவித்தார். ‘‘இயக்குநர்களை தரக்குறைவாக பேசுவதை அனுமதிக்க முடியாது’’ என்று கூறி, அவர் மேடையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனால் அங்கு சில நிமிடங்களுக்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே இப்ராகிம் ராவுத்தர், ‘‘நான் அனைத்து இயக்குநர்களையும் குற்றம்சாட்டி பேசவில்லை’’ என்று விளக்கம் அளித்தார். அதன் பிறகுதான் விக்ரமன் மீண்டும் மேடைக்கு வந்து அமர்ந்தார்.
மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் முடிவடைந்தது. திரைப்பட மகளிர் ஊழியர்கள் சங்க தலைவி காந்தம்மா குளிர்பானம் கொடுத்து, உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
கூட்டத்தின் முடிவில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அத்தீர்மானத்தின் நகல் இங்கே :