‘உத்தமவில்லன்’ படம் நிச்சயமாக ஏற்கெனவே திட்டமிட்டபடி வரும் மே-1-ம் தேதியன்று வெளியாகும் என்று தமிழ்த் திரைப்படவுலகின் முக்கிய சங்கத்தினரின் கூட்டமைப்பு இன்று தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே ‘உத்தமவில்லன்’ படம் ரிலீஸாவது கஷ்டம். பட ரிலீஸ் நேரத்தில் தியேட்டர் அதிபர்கள் சங்கம் தடை போடப் போகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மே 1-ம் தேதி படம் ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தவுடன் இந்த வதந்திகளுக்கு இறக்கை முளைத்து பறக்கத் துவங்கிவிட்டன. இதற்கு ஆதாரமாக சில ரகசிய சந்திப்புகளும், மிரட்டல்களும், போன்கால்களும் பறந்திருக்கின்றன.. நடந்திருக்கின்றன.
இவைகளையெல்லாம் ‘பொய்’ என்று சொல்லி ஒதுக்கவும் இல்லாமல், ‘ஆமாம்’ என்று சொல்லி பிரச்சினையை கூட்டவும் விரும்பாத தமிழ்த் திரைப்படத் துறையின் முக்கியஸ்தர்கள் இன்றைக்கு பத்திரிகைகளை அழைத்து “நிச்சயமாக ‘உத்தமவில்லன்’ படம் வரும் மே 1-ம் தேதி ரிலீஸாகும்…” என்று அறிவித்துவிட்டனர்.
குறைந்த நேரமே நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய தயாரிப்பாளர் லிங்குசாமி “உத்தமவில்லன்’ படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுப்பது ஒருவர்.. அவர் அநியாயமாக, சட்டவிரோதமாக இதற்காக பணம் கேட்கிறார். இது தமிழ்த் திரையுலகம் இதுவரையில் சந்தித்திராத ஒரு விஷயம். இதனால்தான் இத்தனை பேரும் ஒற்றுமையாக இங்கே கூடியிருக்கிறோம்’ என்றார்.
உத்தமவில்லன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டவுடனேயே திருப்பதி பிரதர்ஸ்களை அழைத்த தியேட்டர் சங்கத்தின் முக்கிய பிரமுகர், “இது கமல்ஹாசனின் படம். கமல்ஹாசன் தியேட்டர் அதிபர்கள் சங்கத்திற்கெதிராக டெல்லியில் இருக்கும் சுதந்திர போட்டி நிர்ணய ஆணையத்தில் வழக்கு போட்டிருக்கிறார். அதன் தீர்ப்பு விரைவில் வரவிருக்கிறது.
எங்களை எதிர்த்து வழக்குப் போட்டுவிட்டு, அதன் தீர்ப்பு எங்களுக்கெதிராக வரவிருக்கும் சமயத்தில், எங்களுக்கு எதுவுமே செய்யாமல் அவருடைய படத்தை திரையிட மட்டும் எங்களது தியேட்டர்கள் வேண்டுமென்றால் எப்படி..?” என்று கொதித்திருக்கிறார்.
இதற்கு முன்பாக சென்ற மாதம் ஏவி.எம். ஸ்டூடியோவில் கமல்ஹாசனை சந்தித்து தியேட்டர் சங்கத்தினர் இது தொடர்பாக சமாதானம் பேசியபோது சட்டப்படி அந்த வழக்கினை தான் வாபஸ் வாங்க முடியாதென்று கமல் சொல்லிவிட்டாராம். “தீர்ப்பில் எங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால்.. அபாரதம் செலுத்த வேண்டியிருந்தால் அதையாவது கொடுங்கள்..” என்று கமலிடம் சங்கத்தினர் கேட்டதற்கு, “முடியாது. அந்தக் கட்டணத்தை நீங்கள்தான் கொடுக்க வேண்டும்..” என்று கமல்ஹாசன் நறுக்குத் தெறித்தாற்போல் சொல்லிவிட்டாராம்.
இதனால் அப்போதிருந்தே அவர் மீது கோபத்தில் இருந்த அந்தப் பிரமுகர் இதுதான் சமயமென்று இந்த நேரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நடந்ததாக திரையுலகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை கேள்விப்பட்டு தமிழ்த் திரையுலகமே வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறது.
இந்த நிகழ்வு இனிமேலும் தொடர்ந்தால் அது அடுத்தடுத்து படங்களைத் தயாரிப்பவர்களுக்கும், திரையுலகத்திற்கும் மிகப் பெரிய ஆபத்தில் போய் முடியும் என்பது தெரிந்து அனைத்து திரையுலக முக்கியஸ்தர்களும் ஒன்று கூடி ‘உத்தமவில்லன்’ படத்திற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
“ஒரு சிலரின் எதிர்ப்புகளை ஊதித் தள்ளிவிட்டு எங்களுடைய பேராதரவுடன் படத்தை நிச்சயம் நாங்கள் வெளியிடுவோம்…” என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவரான தாணுவே சொன்னதுதான் இந்தப் பிரச்சினையின் கிளைமாக்ஸ்..!
நேற்றுவரையிலும் கமலுடன் பிணக்கு என்ற நிலையில் இருந்த தாணுவை இந்த ஒரு பிரச்சினையினாலேயே ஒட்ட வைத்த அந்த தியேட்டர்கார பிரமுகருக்கு இதற்காகவே தனியாக நன்றி சொல்ல வேண்டும் என்கிறது சினிமா வட்டாரம்..!












